எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் விபச்சார தொழிற்பயிற்சி, கசினோ விளையாடும் விதம் பற்றிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்படக் கூடும் என ஜே.வி.பியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கசினோ விளையாடி பொருளாதாரத்தை மேம்படுத்துவதை காட்டிலும் விகாரை ஒன்றுக்கு அருகில் அமர்ந்து பிச்சை எடுக்கலாம்.
இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த கசினோ மன்னர்களான ஜேம்ஸ் பக்கர் போன்றவர்களை வரவழைக்க வேண்டிய தேவையில்லை.
கோப் அறிக்கையில் வெளியிடப்பட்ட கொள்ளையடிப்புகளை குறைத்துக் கொண்டால் பெரும் தொகையான நிதியை தேசிய வருவாயாக பெற முடியும். இதன் வழியாக நாட்டை முன்னேற்ற முடியும்.
கசினோ மன்னரான ஜேம்ஸ் பக்கர் அழைத்து வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விட நாட்டில் உள்ள விகாரைகளில் அமர்ந்து பிச்சை எடுப்பது சிறந்தது.
நாட்டில் பிறக்க போகும் குழந்தையும் 3 லட்சம் ரூபாவுக்கான கடனாளியாக பிறக்கின்றது. கடனாளி வந்து நாட்டில் உள்ள வளங்களையும் சுரண்டி எடுத்துச் சென்றால் என்ன நடக்கும்.
பக்கர் போன்றவர்களினால் நாட்டில் கசினோ பொருளாதாரம் ஏற்படப் போகிறது.
டட்லி சேனாநாயக்கவை சோறு கொடுத்த தந்தை என்கிறோம். தஹாநாயக்கவை பணிஸ் மாமா என்கிறோம். லலித் அத்துலத்முதலியை மாபொல புலமைப் பரிசிலின் ஸ்தாபகர் என்கிறோம். இந்த அரசாங்கத்தை கசினோ தந்தை என்றா கூறவேண்டும்?.
நாட்டின் இரண்டு கோடி மக்கள் விற்பனை பொருளாக விற்கப்படுகின்றனர். கசினோ பொருளாதாரத்தின் கீழ் போதைப் பொருள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும்.
கசினோ வர்த்தகத்தின் மற்றுமொரு அங்கமான விபச்சாரத்தில் எமது பெண்களே ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் விபச்சாரம், கசினோ பாடநெறிகள் ஆரம்பிக்கப்படலாம் என்றார்.
Post a Comment