இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக வெற்றி; பிகாரில் நிதீஷுக்குப் பின்னடைவு


குஜராத் மாநிலத்தில் 2 மக்களவை மற்றும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பிகாரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்ததால் நிதீஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த இடைத் தேர்தல் முடிவுகள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதி மற்றும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டன. 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 எம்.பி. தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்பந்தர் தொகுதியில் பாஜக வேட்பாளர் வித்தல் ரதாதியா தமக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், பனஸ்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹரிபாய் செüத்ரி தமக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை 71,000 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தனர்.
மோர்வாஹடாப் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நிமிஷா சுதார் 17,716 வாக்குகள் வித்தியாசத்திலும், ஜேட்பூர் தொகுதியில் ரதாதியா மகன் ஜெயேஷ் 52,910 வாக்குகள் வித்தியாசத்திலும், லிம்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கிரிட்சிங் ராணா 24,787 வாக்குகள் வித்தியாசத்திலும், தோராஜி தொகுதியில் பிரவின் மன்காடியா 11,497 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தனர். இந்த வெற்றியின் மூலம், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 119 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் பலம் 57 ஆகக் குறைந்துள்ளது.
பிகார்: பிகார் மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் பிரபுநாத் சிங் 3.81 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பி.கே. ஷாஹி 2.44 லட்சம் வாக்குகள் பெற்றார். பிரபுநாத் சிங் கடந்த மக்களவையில் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் ஹெüரா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரசுன் பானர்ஜி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பானர்ஜிக்கு 4.26 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹாண்டியா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் சமாஜவாதி கட்சி வேட்பாளர் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger