உகண்டாவுக்கும் மகிந்தவுக்கும் அப்படியென்ன தனிப்பட்ட உறவு?


சிறிலங்கா வழியாக சென்ற உகண்டா அதிபர் யொவேரி முசெவேனியைச் சந்திக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையம் சென்றதும், அங்கு அவருக்கு மதிய விருந்து அளித்ததும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்காசியாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு கம்பாலா திரும்பும் வழியில், உகண்டா அதிபர் பயணம் செய்த விமானம்  நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சுமார் ஒரு மணிநேரம் உகண்டா அதிபர் முசெவேனி அங்கு தங்கியிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்கள், அதிகாரிகள் பரிவாரத்துடன் சென்று அவரை வரவேற்று பேச்சுக்களை நடத்தியதுடன், மதிய விருந்தும் அளித்து கௌரவித்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய ஆகியோர் உகண்டா அதிபருடனான சந்திப்பில் பங்கேற்றனர்.

முக்கியமான நாடுகளின் தலைவர்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு வரும் போதே, நாட்டின் தலைவர் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பது வழக்கம்.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளும் போதோ, விமானப் பயணத்தின் நடுவில் இடைத் தங்கும் போதே, நாட்டின் அதிபர்கள் சென்று வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வழக்கமில்லை.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் சென்ற போதெல்லாம், அந்த நாடுகளின் இளநிலை அமைச்சர்கள் கூட விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்கவில்லை.

ஆனால், சிறிலங்காவைக் கடந்து செல்லும் போது விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் தங்கிய உகண்டா அதிபரை தேடிச் சென்று, மகிந்த ராஜபக்ச சந்தித்தது குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த உகண்டா, உலகின் ஒரு முக்கியமான நாடாக இல்லாத நிலையில், சிறிலங்கா அதிபர் அந்த நாட்டுக்குக் கொடுக்கும் முக்கியமே இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மிக அண்மையில் தான், மகிந்த ராஜபக்ச உகண்டாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.


கடந்த மாதம் 17ம் நாளே உகண்டாவில் இருந்து அவர் திரும்பிய நிலையில், 20 நாட்களுக்குள் உகண்டா அதிபருடன் பேச்சுக்களை நடத்த வேண்டிய அவசியமும் இருந்திருக்கவில்லை.

இதனாலேயே சிறிலங்கா அதிபர் உகண்டாவுடன் காட்டும் நெருக்கம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சிறிலங்கா அதிபர் கடந்த மாதம் உகண்டாவுக்கு இரண்டாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார். முன்னதாக அவர் 2007இல் அங்கு சென்றிருந்தார்.

அதேவேளை உகண்டா அதிபர் கடந்த ஆண்டு நவம்பரில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக உகண்டா செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger