இந்தக் குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? / தெமட்டகொட பொலீஸ் நிலையத்தில் ஐவருக்கு இடமாற்றம் / பொலீஸார் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்


 

இந்தக் குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?
புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டுபிடிக்கவென பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 2013-03-01ம் திகதியன்று ஆண் குழந்தையொன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த ஆண் குழந்தை பத்தரமுல்ல சிறுவர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதவானின் உத்தரவின் பேரில் பாணந்துறை பிரஜாபதி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸாரால் பெற முடியாது போனதால் குழந்தையின் புகைப்படம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி பொது மக்களின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு பத்தரமுல்ல சிறுவர் இல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குறித்த குழந்தையின் புகைப்படம் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குறித்து தகவல் அறிந்தோர் உடனடியாக 0112421515 மற்றும் 0112323677 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத் தருமாறு பொலிஸார் வேண்டியுள்ளனர்.
பொலீஸார் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்-
கடமையைசெய்யும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வாறு தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் பொறுப்புள்ள பொலிஸாரை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது என்று சுட்டிக் காட்டியுள்ள ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மாகா நாமஹேவா, இது பொலிஸாரின் மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை உடனடியாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெமட்டகொட பொலீஸ் நிலையத்தில் ஐவருக்கு இடமாற்றம்-
கொழும்பு, தெமட்டகொட காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஐந்து உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
42 வயதான தன்பில்ல சேகர் என்ற சந்தேகநபர் ஒருவர், தடுப்புக் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் நோய் வாய்ப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அவரது உறவினர்கள் தெமட்டகொட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதனால் பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger