குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண் / கட்டுமான பணி துரிதம் / மலையகத்தில் லயன் முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென தீர்மானம்


 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண்-
போதை மயக்கத்தில் வீதியில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்ததுள்ளது.
கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவர் அருகில், ஒரு வயதுடைய குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து திகைத்தனர்.
குழந்தை அழுவதை கண்ட சிலர், மனமிறங்கி அருகில் சென்று பார்த்தபோது, மதுவாடை அடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றனர்.
ஆனால், அவர், அளவு கடந்த போதையில் தத்தளித்து கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் தாய்க்கு மயக்கம் தெளியவில்லை.
குழந்தை தாயிடம் பால் குடிக்க முயற்சித்தது. ஆனால், குழந்தையால் முடியாமல் போகவே, தொடர்ந்து கதறி அழுதது. அருகிலிருந்த சிலர், குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்தனர். பாலை குடித்த குழந்தை, சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
நீண்ட நேரமாகியும், தாய் போதையில் இருந்து மீளவில்லை. கூட்டத்தை கண்டு, குழந்தை மிரண்டு அழத் துவங்கியது.
ஒரு மணி நேரத்துக்கு பின், தாய் எழுந்து உட்கார்ந்தார். அவரால் எழுந்து நடக்கவோ, குழந்தையை அரவணைக்கவோ, முடியவில்லை.
குழந்தையின் நிலையை பார்த்த அந்த வழியே சென்றவர்கள், ‘எத்தனையோ பேர், குழந்தை இல்லாமல் கோவில், குளம் என சென்று வருகின்றனர்… பெத்த புள்ளைய காப்பாத்த தெரியலையே´´ என, பரிதாபப்பட்டனர்.
கட்டுமான பணி துரிதம்-
இலங்கை, கட்டுமான துறையில் அதிக அதிகரிப்பு வேகத்தை கொண்ட யுகமாக மாறியுள்ளதாக, வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தினால் எதிர்வரும் 9ஆம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள ‘கண்ஸ்ட்ரக்ட் 2012′ கட்டுமான கண்காட்சியை ஒட்டியதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கட்டுமானதுறை வரலாற்றில் அதிகரித்த வேகத்தை கொண்ட யுகமாக இது காணப்படுகிறது. 21 சதவீத வளர்ச்சி கடந்த காலங்களில் காட்டிநிற்கின்றது.
படையினரின் அர்ப்பணிப்பால் பெற்றுக் கொண்ட சமாதான சூழலே இந்த வளர்ச்சிக்கான காரணம் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
மலையகத்தில் லயன் முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென தீர்மானம்-
பெருந்தோட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையகத்தில் லயன் முறைமைகளை முற்றாக நீக்கி தனி வீட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முன்னணியின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்றது. இதன்போது 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01. பெருந்தோட்டங்களில் 25,000 ஹெக்ரேயர் காணிகள் பயிர் செய்யாமல் இருப்பதாகவும், இதனை 12,500 இளைஞர்களுக்கு பயன்படுத்துவதற்காக பிரித்துக் கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி கடுமையாக ஆட்சேபிக்கின்றது. இந்தத் திட்டத்தை நிறுத்தி மீள் பயிர்ச்செய்கை செய்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையை அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் உடனடியாக எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
02. சகல தொழிலாளர் குடும்பங்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தலா 10 பேர்ச்சர்ஸ் வீதம் காணி வழங்கப்பட்டு லயன் முறையை நீக்கி அவர்களுக்கு தனி வீடு அமைத்து வாழும் நிலையை அரசாங்கம் எடுக்க வேண்டுமென மாநாடு தீர்மானிக்கின்றது.
03. வருடா வருடம் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் வரவு- செலவு திட்டத்தில் இருப்பதுபோல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, கூட்டு ஒப்பந்தங்களும் வருடா வருடம் தொழிலாளர் நலன் கருதி புதுப்பிக்கப்படுவதோடு, சம்பள விடயமான பேச்சுவார்த்தையில் சகல பெருந்தோட்டப் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனமும் தொழில் ஆணையாளரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வாழ்க்கைச் செலவுக்கேற்றவாறு தொழிலாளருடைய அடிப்படைச் சம்பளம் உயர வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது.
04. தொழிலாளர் வீட்டுக்கடன் உட்பட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தாட்சிப் பத்திரங்களை உறுதிப்படுத்துவதில் கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். அத்தோடு இதற்காக வேலை நாட்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெருந்தோட்டங்களுக்காக அந்தந்த பகுதிகளுக்கான தனி வங்கியை உருவாக்கி அவர்களுக்கு உதவுவதோடு சேமிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டுமென மாநாடு தீர்மானிக்கின்றது.
05. பெருந்தோட்டக் கம்பனிகள் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி அதற்கேற்ப தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தீர்மானிக்கின்றது.
06. தேயிலைத் தொழிலையே பூர்வீகமாகக் கொண்டு அதே சூழலில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களுக்கு ‘லேபர் டஸ்ட்’ என்ற தரங்குறைந்த பாவனைக்குதவாத தேயிலைத்தூள் பாவனைக்கு வழங்குவதை கடுமையாக மாநாடு ஆட்சேபிக்கின்றது. எனவே, தரம் கூடிய முதல் தர தேயிலையை 1 கிலோ வீதம் கொடுக்க வேண்டுமென மாநாடு தீர்மானிக்கின்றது.
07. இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அரசாங்கத்தையும், இ.தொ.ஐ.மு.தீர்மானத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger