விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புதனன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த இவர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.
புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கையளிக்கப்பட்டதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்சன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்க கட்சியின் வேட்பாளராகத் தமிழினி போட்டியிடவுள்ளர் என்றும் அதற்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவகாமி ஆகிய தமிழினி வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. இது குறித்து தமிழினியும் இது வரையில் வாய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment