சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் ஏன் ?



கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம் கூறுகிறது.
கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டு, 2011லும் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில், 65,873 விபத்துக்கள், 15,422 மரணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2012ல் ஒவ்வொரு மாதமும் மிக அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததும் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் எனவும் ஆவண மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றி புதுடில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநகரங்களின் சாலைப்போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகளுக்குத் தலைமை வகித்த என்.எஸ்.ஸ்ரீனிவாசன் குடிபோதையில் ஓட்டுவது, போதிய பயிற்சியின்மை, தேவையில்லாத வேகம் இவற்றாலேயே விபத்துக்கள் என விளக்குகிறார்.
மேலும் வாகன ஓட்டிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து காப்பாற்றும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறார் ஸ்ரீனிவாசன்.
மாநில போக்குவரத்து திட்டமிடல் மையத்தின் தலைவர் காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ராஜேந்திரன் மற்ற மாநிலங்களைப்போலல்லாமல் தமிழ்நாட்டில் விபத்துக்கள் அனைத்தும் உடனடியாகப் பதியப்படுவதால் அதிக விபத்துக்கள் என்பதான தோற்றம் நிலவுகிறது என்றார்.
ஆனால் நாம் சரிவர கண்காணிக்கிறோம் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.
மற்றபடி தேசிய நெடுஞ்சாலைகளில்தான் மிக அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாகவும் அவற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களது கண்பார்வை நிலையினை கண்காணிப்பது எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பது இப்படிப் பல தளங்களில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்துக்களைக் குறைத்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் ராஜேந்திரன்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger