விமானப்படை விடுதி வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு / வெலிக்கடையில் சிறை மோசடி; பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை / அண்டிய பிரதேசங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை


 

விமானப்படை விடுதி வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு-
அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர் தானே குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வெலிக்கடையில் சிறை மோசடி; பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை-
சிறைச்சாலைகளில் ஆண் உத்தி யோகத்தர்கள் மட்டுமன்றி பெண் உத்தி யோகத்தர்களும் பாரதூரமான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண், பெண் சிறை உத்தியோகஸ்தர்கள் தங்கள் சமூக பொறுப்புக்களை மறந்து போதைவஸ்து, சிகரட், மதுபானம் போன்ற தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை பணத்திற்காக சிறைச் சாலைக்குள் கடத்திச் சென்று கைதிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
இவர்கள் கையடக்கத் தொலைபேசிகளையும் இவ்விதம் சிறைச்சாலைகளுக்கு கடத்திச் செல்கிறார்கள். இவ்விதம் குற்றம் இழைக்கும் ஆண் மற்றும் பெண் சிறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி சோதனையின் போது 52 கையடக்கத் தொலைபேசிகள் சிறைக் கைதிகளின் அறைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் சிறைச்சாலையின் அறைகளிலும் கழிவறைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை வஸ்துகளும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டன.
இத்தகைய மோசடிகளை தடுப்பதற்காக தாம் புதிதாக 73 பெண் புலன்விசாரணை உத்தியோகஸ்தர்களுக்கு நியமனம் வழங்கி அவர்களை சகல சிறைச்சாலைகளிலும் நியமிக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இருவாரங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு பெண் அதிகாரியின் அறையில் 46,000 ரூபா ரொக்கப் பணமும் 8 சாராயப் போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்டிய பிரதேசங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை-
நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
நீர் நிலைகளுக்கு நீராடச் செல்பவர்கள் மற்றும் படகுச் சவாரியில் ஈடுபடுபவர்களும் குறிப்பாக இக்கால கட்டத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் நிலையத்தின் பேச்சாளர் கொடிப்பிலி கேட்டுக் கொண்டுள்ளார்.
களுகங்கை, நில்வளாகங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்து வரும் நிலையில் அதனை அண்டிய ஏனைய நீர் நிலைகளின் நீர் மட்டங்களும் உயர்வடைய வாய்ப்பிருப்பதனால் நீர் நிலைகளுக்கு நீராடச் செல்வதனை தவிர்த்துக் கொள்வது சிறந்ததெனவும் அவர் கூறினார்.
மேலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி களுகங்கையில் படகுச் சவாரியில் ஈடுபட்ட மூவர் நீருக்குள் விழுந்து நேற்று காணாமல் போயிருந்தனர். பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் குக்குளே கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்தமையையடுத்து அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger