கொழும்பில் மாபெரும் சூதாட்ட விடுதி! 350 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு




350 மில்லியன் அமெரிக்க டொலர் (3,500 கோடி ரூபா) முதலீட்டில் 400 அறைகள் கொண்ட லாஸ் வெகாஸ் பாணியிலான பெரியதொரு சூதாட்ட விடுதியொன்று அரசாங்க விநியோக திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் கொழும்பு, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் பிரபல சூதாட்ட முதலாளியான ஜேம்ஸ் பக்கர் என்பவரால் இந்த சூதாட்ட விடுதிக்கான முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்துக்கு 10 வருட வரிச் சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான சூதாட்ட நிலையங்களை நிறுவ வசதியளிக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கெனவே சூதாட்ட வர்த்தக கட்டுப்பாட்டு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், மேற்படி சூதாட்ட விடுதி தொடர்பான பிரச்சினையை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.
மேற்படி முதலீட்டுக்கு 10 வருடங்கள் வரை கம்பனி வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் இந்த திட்டம் தொடர்பான சகல இறக்குமதிகளுக்கும் சுங்க வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த முதலீட்டினால் 2,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் வேறு பல நன்மைகளும் கிடைக்குமெனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவரதன தெரிவித்தார்.
இதில் கசினோ வணிகம் மாத்திரமல்லாமல், 400 ஹொட்டல் அறைகளும், சில்லறை கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், உணவு விடுதிகள் மற்றும் கூட்டங்களை , நிகழ்வுகளை நடத்துவதற்கான வசதிகளும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கையாகவே முதலீட்டுச் சபை இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டளவில் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 200 கோடி அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை தாம் இலக்கு வைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger