தம்புள்ளை கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு / இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு / இடம்பெயர்ந்தவர்களுக்கும் சொந்த காணிகள் -ஜே.வி.பி / பொருளாதாரத்தில் தோல்வியடைந்த இராஜ்ஜியங்கள் பட்டியலில் 32 ஆவது இடத்தில் இலங்கை

 

தம்புள்ளை கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு-
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த கருக்கலைப்பு நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்புக்கு செல்லும் பெண் போன்று மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உதவியுடனே இந்நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கருக்கலைப்பு நிலையத்தை நடத்தி வந்த டாக்டர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் கருக்கலைப்புக்காக 15ஆயிரம் ரூபாவை குறித்த டாக்டர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் தோல்வியடைந்த இராஜ்ஜியங்கள் பட்டியலில் 32 ஆவது இடத்தில் இலங்கை-
பொருளதாரத்தில் தோல்வி கண்ட ராஜ்ஜியங்களின் 150 நாடுகள் பட்டியலில் இலங்கை 32 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மியன்மார், பங்களாதேஷை விட எமது நாடு பின்தங்கியுள்ளது. இதுவா அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி என ஐ.தே.கட்சி கேள்வி எழுப்பியது. சர்வதேச மூலதனங்கள் நாட்டுக்குள் வராமையே பொருளாதார பின்னடைவுக்கு காரணமாகுமென்றும் அக்கட்சி தெரிவித்தது.
கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற ஐ.தே.க. வின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் இணைந்து உலக நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் தோல்வி கண்ட 150 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதில் எத்தியோப்பியா முதலிடம், இலங்கை 32 ஆவது இடத்திலுள்ளது. இந்த ஆய்வின் போது ஜனநாயகம், மனித உரிமைகள், நீதித்துறை, நல்லாட்சி, மக்களின் நிலை, போன்றவற்றை அடிப்படையாக வைத்தே இக்கணிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம், பெற்ற கடனையும் வட்டியையும் செலுத்த போதாமலுள்ளது. வெளிநாட்டு மூலதனங்கள் இங்கு வருவதில்லை. அப்படி வருவதன் மூலமே தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும். அதுபோன்று முதலீடுகளும் குறைந்துள்ளன.
மஹிந்த சிந்தனையில் 500 தொழிற்சாலைகள் அமைக்கப்படும். வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுமென உறுதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்தத் தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை.
மத்திய மாகாணத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 15,000க்கு மேற்பட்டோர் தொழில்களை இழந்துள்ளனர் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தெரிவுக்குழு -ஜனாதிபதி-
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கையானது சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு- 
இலங்கை அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜூலை 11ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 15ம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படையால் மீனவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்களை ஜூன் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களுக்கும் சொந்த காணிகள் -ஜே.வி.பி-
வடக்கு மக்களின் பிரதான பிரச்சினை காணி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது அல்ல. யுத்தம் காரணமாக இழக்கப்பட்ட அவர்களின் சொந்த காணிகள் மீண்டும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் முகாம்களின் உள்ளவர்களை அழைத்து இலங்கையில் மீள குடியமர்த்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
தென்னிலங்கையிலிருந்து ஏனையவர்களை குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி, மீண்டுமொரு இன முறுகல் நிலையை தோற்றுவிக்கும்.
வடக்கில் ஏற்கனவே தங்கியிருந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வலியுறுத்தியுள்ளார

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger