மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் மீண்டும் புத்தர் சிலையினை நிறுவும் முயற்சி இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மதவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஏதுவான நிலை தொடர்பில் ஆராயுமாறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாசார திணைக்களங்களுக்கு இலங்கை மத விவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் அதேவேளையில், மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரரின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒரு வார காலத்துக்குள் அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மத விவகார, புத்தசாசன அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில் மூன்று திணைக்களங்களையும் சேர்ந்த தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து இது தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆலயங்கள் உடைப்பின் பின்னணியில் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் உள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் தெரிவித்த நிலையில் இந்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Post a Comment