அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.
இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம,
“உள்நாட்டில் எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதானாலும் சரி, உள்ளூராட்சி சபைகளுடன் உடன்பாடுகளை செய்து கொள்வதானாலும் சரி, அதுகுறித்து வெளிநாட்டு தூதரகங்கள் முதலில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அதற்கு உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தான் உள்நாட்டு நடைமுறை.
ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாமலேயே திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கவுள்ளேன்.
அத்துடன், அமெரிக்கத் தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பான விபரங்களை வெளிவிவகார அமைச்சுக்குத் தரத் தவறியது ஏன் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராசாவுடன், இந்த உடன்பாட்டை செய்து கொண்ட அமெரிக்கத் தூதரக பேச்சாளரும், ஊடக, கலாச்சார, கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளருமான கிறிஸ்ரொபர் டீல், தாம் எந்த நடைமுறைகளையும் மீறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஏற்கனவே அமெரிக்கத் தூதரகம் கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற தகவல் நிலையங்களை அமைத்துள்ளது.
அதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை.
திருகோணமலையில் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் விவகாரத்திலும் அதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.
இது பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக மாணவர்களின் நலனுக்காகவே அமைக்கப்படுகிறது.
விரைவில் இதுபோன்ற நிலையம் தெற்கிலும் நிறுவப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment