சிறிலங்காவில் முக்கிய கட்டுமாணத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உதவியாக சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனமானது சிறிலங்காவுக்கு 580 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக புதனன்று வெளியிடப்பட்ட அரசாங்க ஆவண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையும் வழங்கப்பட்டால் சீன அபிவிருத்தி வங்கியானது சிறிலங்காவுக்கு மொத்தமாக 1.4 பில்லியன் டொலர்களுக்கு மேல் கடனாக வழங்கியுள்ளது எனக் கூறலாம். சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் அயல்நாடான இந்தியா இதில் அதிருப்தியடைந்துள்ளது.
தற்போது சீன அபிவிருத்தி வங்கி வழங்கும் நிதியில் 300 மில்லியன் டொலர்கள் வீதி அபிவிருத்திக்காகவும், 200 மில்லியன் டொலர்கள் நீர் வழங்கல் திட்டங்களுக்காகவும், மீதி தேசிய வர்த்தக கற்கைநெறிக்காகவும் செலவிடப்படவுள்ளதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வீதி அபிவிருத்திக்காக ஏற்கனவே சீன அபிவிருத்தி வங்கியானது 652 மில்லியன் டொலர்களையும், நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 214 மில்லியன் டொலர்களையும் கடனாக வழங்கியதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன அபிவிருத்தி வங்கியின் சிறிலங்காவுக்கான கடனுதவி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மே 2009ல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில், மீள்கட்டுமானத் திட்டங்களுக்கான நிதி மற்றும் தொழினுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்துவதற்காக சீனாவால் 59 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன.
சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டுள்ள துறைமுகத்திற்கு தொடரூந்து பாதையை அமைப்பதற்கு 278.2 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்குவதாக கடந்த மார்ச்சில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி சிறிலங்காவுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமாணத்திற்காக சீனா 1.5 பில்லியன் டொலர்களையும், அருகிலுள்ள விமானநிலைய அபிவிருத்திக்காக 209 மில்லியன் டொலர்களையும் சீனா கடனாக வழங்கியுள்ளது.
இதேபோன்று சீனாவானது மியான்மார் தொடக்கம் பாகிஸ்தான் வரை துறைமுகங்களை அபிவிருத்தி செய்து தனது அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்குகளை அதிகரித்து வருவதானது இந்தியாவுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவ்வாறானதொரு கருத்தை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், சிறிலங்காவில் சீனா செல்வாக்குச் செலுத்துவதானது வர்த்தகத்தை மட்டுமே நோக்காகக் கொண்டதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment