எண்ணெய் விநியோகம் தொடர்பாக திய எண்ணெய் இந்கூட்டுத்தாபனத்துடன் (ஐஓசி) செய்து கொண்டுள்ள உடன்பாட்டை, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரத்துச் செய்யவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எண்ணெய் விநியோகம் தொடர்பாக ஐஓசி நிறுவனத்துடன் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்திருந்தது.
இந்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு விட்டு, சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு செய்து கொள்ளவுள்ளது.
அத்துடன், அராம்கோ நிறுவனத்திடம் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் செயற்பாடுகளை ஒப்படைப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய ஐஓசி நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை சிறிலங்காவில் நிறுவியுள்ளது.
ஐஓசி நிறுவனம் தரம்குறைந்த எரிபொருளை விநியோகிப்பதாக அண்மையில் சிறிலங்கா குற்றம்சாட்டியிருந்தது.
அதேவேளை, ஐஓசிக்கு வழங்கப்பட்ட எண்ணெய் விநியோக உடன்பாட்டை ரத்துச் செய்தால், அதன் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்படும் நிலை ஏற்படும்.
அதற்குப் பதிலாக அராம்கோ நிறுவனம் 250 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது
Post a Comment