மன நோயைப் பற்றி சில உண்மைகள்




இப்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக, மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே. 

மன நோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ, குழப்பத்தையும், திகைப்பையும் உண்டு பண்ண கூடியதாகவோ, தற்காலத்தில் எண்ணப்படுவதில்லை. மேலும் ஆபத்தை தருவது, தீராதது, சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட வேண்டிய நோய், மனநோய் என்பதும் உண்மையன்று. 

மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்று என கொள்ளலாமா?

மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்றேயல்ல. அவை, வேறானவை. அறிவுத்திறன் குறைந்தவர்களிடையேயும் சில மன நோய்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் மனநோய் உள்ளவர்கள் யாவரும் அறிவுத்திறன் குன்றியவர்கள் ஆகமாட்டார்கள். 

அறிவுத்திறன் குன்றியவர்கள், கற்றுக் கொள்வதிலே சிரமும், தாமதமும், உள்ளவர்களாயிருப்பர். பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு இருப்பதைக் கண்டறியக் கூடும். இது மிகவும் கடுமையானதாகவும், அல்லது மத்தியதரமானதாகவும், இருக்கக்கூடும். 

இந்தக் கோளாறுக்கு காரணங்கள், மூளை பாதிக்கப்படுதல், சினை அணுக்களில் சீரழிவு, வளர்ப்பு ஏதுக்களில் கெடுதி முதலியனவாகும். ஆரம்பத்திலேயே அறிவுத்திறன் அளவை நிச்சயித்து, அதற்குத் தகுந்த, உரிய பயிற்சிகள் தருவதன் மூலம், அறிவு நிலை குன்றியோர் வாழ்வில், நல்லதொரு திருப்பமும், மாற்றமும் கொண்டு வரக்கூடும். 

மனநோய் பாரம்பரியமாய் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வழிவழியாய் வரக்கூடுமா?

சில வகையான மனநோய்கள், உதாரணமாக, மனமுறி நோய், மன எழுச்சி நோய் போன்றவை, சில குடும்பங்களில் (இதர குடும்பங்களை விட) அதிகமாய் தோன்றி பாதிக்கின்றன. பாரம்பரியக் கோளாறே இந்நிலைக்கு அடிப்படையாய், ஆதரவாய், இருக்கிறது எனக் கூறலாம். 

பாரம்பரியத்தால் வரும் தீங்கு என்னவென்றால், மனநோய் தோற்றுவாய்க்கு, எளிதில் ஆளாக்கும் தன்மையை, நிலையை, உற்பத்தியாக்குவதேயாம். எனினும், மற்ற பல காரணங்களும் நோய் விளைவுக்கு அவசியமாயிருப்பதனாலே ஓரிருவரைத் தவிர, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலோர், இந்த நோயால் தாக்கப்படுவதில்லை. 

மனநோய் தொற்று நோயாகுமா?

மனநோய் தொற்று நோய் அல்ல. அம்மை நோய், மண்ணை கட்டி நோய், தட்டம்மை போன்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றி பரவும் நோய், மனநோய் அல்ல.

மன நோயாளர் வன்முறையாளர்கள்?

சமூகத்தில் உள்ள பெரும்பாலரை விட, மன நோயால் பாதிக்கப்பட்டவர், வன்முறைகளை கையாளுபவர் என கொள்ளுதல் சரியானதாகாது. எனினும் மன நோயாளர் அச்சமும், ஐயுறவும் கொண்டிருப்பதாலேயே குழப்பத்தோடு பயற்திற்கேற்ப, சமூகத்தை பாதிக்கும் செயல்கள் ஆற்றுகிறார்கள் என கொள்ளலாம். 

அப்பேற்பட்ட சந்தர்ப்பங்களில் சமூகப் பாதுகாப்பிற்காகவும் நோயாளியின் நலனையும் கருதி, அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமேற்படுகிறது. 

மனநோயாளிகளின் நலன்களைக் கருதி அவர்களை பூட்டி பாதுகாப்பில் வைக்க வேண்டுமா?

பெரும்பாலான மன நோயாளிகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படாமலேயே, வெற்றிகரமாய் குணப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அநேகருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய் விடுகிறது. எனினும், ஒரு சிலர் நோயின் கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுவதின் நிமித்தம். 

மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சையும், ஆதரவும் பெற வேண்டியிருக்கிறது. என்றாலும், பெரும்பாலோர் முரட்டுத்தனமாக இருப்பதில்லை. மனநோய் மருத்துவமனையில் பெரும்பாலான அறைகள், பகுதிகள், பூட்டி வைக்கப்படுவதில்லை. மிகச் சிலரையே சமூகப் பாதுகாப்பிற்காகவும், நோயாளியின் சொந்த பாதுகாப்பிற்காகவும், பூட்டி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

மனேநோயை குணப்படுத்த முடியுமா?

மக்களில் பலர், தங்கள் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தான் மனநோயால் அவதியுற்று, பிறகு எப்போதுமே அந்நோயால் பாதிக்கப்படாமலே இருக்கின்றார்கள். ஒருசிலர், பலதடவை, மறுபடியும் மறுபடியுமாக, மனநோயால் தாக்கப்படுகிறார்கள். 

மிகச் சிறுபான்மையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மனநோயால் கஷ்டப்படுகிறார்கள். உடலைப் பற்றிய நோய்களை போலவே மன நோய்களிலும் மறுபடியும் பிணிவாய்ப்படுதல் என்பது, சகஜமாய் நிகழக்கூடியது தான். மேலும் பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடையலாம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger