வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு -பாதுகாப்பு செயலர் / இறைச்சிக் கடைகளை மூடுமாறு பிக்குகள் கோரிக்கை / போருக்குப் பின் வடக்கு, கிழக்கில் ஒரு விகாரைகூட கட்டவில்லை -ஹெல உறுமய


 

வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு -பாதுகாப்பு செயலர்- 
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடும். இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனினும் நாட்டில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது.
இந்தியாவின் தேவைகளுக்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாம் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக் கடைகளை மூடுமாறு பிக்குகள் கோரிக்கை- 
இலங்கையிலுள்ள இறைச்சிக் கடைகளை மூடுமாறு சிஹல ராவய என்ற பௌத்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மாடுகளை கொல்லக் கூடாது எனக் கோரி தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிக் கிரியைகள் நடத்தப்படும் வரையிலேனும் நாடளாவிய ரீதியில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் சில பகுதிகளில் இந்தக் கோரிக்கையை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீக்குளித்து உயிரிழந்த பௌத்த பிக்குவின் இறுதிக் கிரியைகள் ரத்தினபுரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போருக்குப் பின் வடக்கு, கிழக்கில் ஒரு விகாரைகூட கட்டவில்லை -ஹெல உறுமய-
தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் ஒரு பிரச்சினையையாவது சுட்டிக் காட்டட்டும்.
போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின் இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
மாறாக வீரவசனம் பேசுவதில் பயனில்லை என்று அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர அவர்களின் வாழ்வைக் கெடுக்கவில்லை என்றும் தமிழ் மக்களைக் கூட்டமைப்பு அதலபாதாளத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் ஊடகத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger