ஸ்வீடன் நாட்டில், என்றும் காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடந்தேறியுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும், மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் அன்று இரவு, ஜாகோப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமர் பிரெடெரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இத்தகைய வன்முறைகள், உலகின் பணக்கார நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஸ்டாக்ஹோமில் நடந்துள்ளது, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக நீதி குறித்த நற்பெயரைத் தனக்குரிய அடையாளமாகக் கருதும் இந்நாடு, இந்த சம்பவங்களின் மூலம் வேலையற்ற இளைஞர்களையும், குடியேற்ற மக்களையும் சமாளிப்பது குறித்த விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்தக் கலவரங்களுக்கு காரணமாக, ஹஸ்பி புறநகர் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டிய 69 வயதுடைய ஒருவரைக் காவல்துறையினர் கொன்றது குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment