அமைச்சர் ஜோன் செனவிரத்ன மீது தண்ணீர் போத்தல்கள் வீசித் தாக்குதல் / பௌத்த தர்மத்திற்கு அமைவாகவே அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும்- பொதுபல சேனா

 

அமைச்சர் ஜோன் செனவிரத்ன மீது தண்ணீர் போத்தல்கள் வீசித் தாக்குதல்;-
கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து இறந்த பௌத்த பிக்குவான போவத்த இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கில் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன மீது தண்ணீர் போத்தல்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி கஹவத்தையில் உள்ள பாடசாலை மைதானத்தில் நேற்றுமாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்திரரத்ன தேரரின் இறுதிச்சடங்கு இடம்பெற்றது.
இந்த இறுதிச்சடங்கின் போது வன்முறைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் பெருமளவிலானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.
கிரிகைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இன்றி இறுதிச்சடங்கு இடம்பெற்றது.
எனினும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இறுதிச்சடங்கில் உரையாற்றிய போது, அவருக்கு இடையூறு செய்யும் முகமாக கூச்சல் போட்டு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களும் பௌத்த பிக்குகளும், அவர் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸார் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும், அமைச்சர் ஜோன் செனவிரத்னவை பேச விடுமாறு, ஜாதிக ஹெல உறுமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் தாக்குதல் நடத்தியோரிடம் கேட்டுக் கொண்டார்.
பௌத்த தர்மத்திற்கு அமைவாகவே அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும்- பொதுபல சேனா- 
பௌத்த தர்மத்திற்கு அமைவான முறையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை பலர் இழிவுபடுத்துவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினைக் கண்டித்து இந்திரரட்ன தேரர் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது.
எனவே தொடர்ந்தும் மிருகவதையினை மேற்கொள்ள முடியாது மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger