களனியில் அரசியலை ஆரம்பிக்கவுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவிப்பு / சிங்கள மக்களின் காணிகளையும் அரசு அபகரிக்கிறது -விக்கிரமபாகு / முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் யாவும் ஆதாரமற்றவை -அமைச்சர் ஹக்கீம்



 

களனியில் அரசியலை ஆரம்பிக்கவுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவிப்பு-
களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப்போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் எந்நேரமும் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதி எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேர்வினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் களனி தொகுதியின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள மக்களின் காணிகளையும் அரசு அபகரிக்கிறது -விக்கிரமபாகு-
தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்டினையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றதென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்று சிங்கள மக்களின் சொத்துக்களும் தற்போதைய ஆட்சியாளர்களால் அழிக்கப்படுகின்றன. மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுப்பவர்களை அரசு பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களின் செயற்பாடுகளை முடக்கப் பார்க்கின்றது.
வடக்கில் பொது மக்களின் காணிகளை சுவீகரித்து அங்கு சிங்கள மக்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றாது அதனை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டம் தீட்டுகின்றது. எவ்வாறான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டாலும் சர்வதேசத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் யாவும் ஆதாரமற்றவை -அமைச்சர் ஹக்கீம்-
தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின்மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் காசிம் குறெய்ஷி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நேற்று மாலை நீதியமைச்சில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை என்பது பற்றியும் அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
இதன்போது பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, பரஸ்பர ஒத்துழைப்பு என்பவற்றை மையப்படுத்தியதாகவே பெரும்பாலும் அவர்களது கலந்துரையாடல் இருந்தது.
இச்சந்திப்பில் பாகிஸ்தான் தூதரகத்தின் கவுன்சலர் ஏ.இஸட்.சித்திகி, நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger