போர்க் குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை மீது இராணுவம் சீற்றம் / சோம்பிஸ் முகமூடி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கேள்வி / விமானப் படைக்கு ஹெலி ட்ரெவல்ஸிடமிருந்து வானூர்திகள் கொள்வனவு

 

போர்க் குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை மீது இராணுவம் சீற்றம்-
போர்க் குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது என்றும் தெரிவித்தது.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, தீவிரவாதிகளிடமிருந்து 2 இலட்சத்து 95 ஆயிரம் மக்களை மீட்ட, 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்திய இராணுவமா போர்க்குற்றம் புரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
2012ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலைப்பாடு குறித்து ஆய்வு நடத்தி 2013ஆம் ஆண்டுக்கான அறிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வெளியிட்டது.
போர் முடிவடைந்துள்ள நிலையிலும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரமாக உலா வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ் சாட்டியிருந்தது.
இது குறித்து வினவிய போதே இராணுவ ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: ‘இலங்கையில் போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நாம் அடியோடு நிராரிக்கிறோம். இராணுவத்தால் திட்டமிட்ட முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்படவில்லை.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மன்னிப்புச்சபை போர்க்குற்றங்கள் எப்போது, எங்கு, எந்த நேரத்தில் இடம்பெற்றன என்று தம்மிடமிருக்கும் ஆதாரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
போர்க்குற்றம் என்பது யுத்த காலத்தில் தான்தோன்றித்தனமாகச் செய்யப்படும் குற்றச் செயல்களாகும். ஆனால், போரின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடவில்லை.
தீவிரவாதிகளிடமிருந்து 2 இலட்சத்து 95 ஆயிரம் மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். இவர்களை நாம் மீட்டெடுத்த போதும் தீவிரவாதிகள் அவர்களைத் தாக்கினர். இவ்வாறாக பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றம் செய்துள்ளோம்.
அதுமட்டுமல்லாது, தற்போதும் இந்த மக்களின் அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அத்துடன், 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைத்துள்ளோம். அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
இப்படியாக சமூகநல நோக்குடன் செயற்பட்ட செயற்படுகின்ற இராணுவமா போர்க்குற்றம் புரிந்தது? போர்க்குற்றம் புரிந்திருந்தால் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை எப்படி இராணுவம் சமூகமயப் படுத்தும்?
எம்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் சர்வதேசத்தினர் இவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதை விடுத்து, புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாகச் செயற்பட்டு சர்வதேச மன்னிப்புச்சபை எம்மீது போர்க்குற்றம் சுமத்தி சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது” என்றார் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.
சோம்பிஸ் முகமூடி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கேள்வி-
வெசாக் கொண்டாட்டத்தின் போது ‘சோம்பிஸ்’ முகமூடிகளை இறக்குமதி செய்தது யார்? என அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
வெசாக் புத்த தர்மத்தின் உண்மையை உணர்த்தி நிற்கின்ற நிலையில், இந்த காலகட்டத்தில் மிக பயங்கரமான முகமூடிகளை அணிவதன் நோக்கம் என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.
‘சோம்பிஸ்’ முகமூடிகளை தங்களுடைய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் கேட்டுள்ளார். அது சிறுவர்களின் மனநிலையை மாற்றி விடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்குல நாடுகளில் அக்டோபர் 31ம் திகதி கொண்டாடப்படும் ‘ஆலோவின்’ கொண்டாட்டத்தின் போது மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படைக்கு ஹெலி ட்ரெவல்ஸிடமிருந்து வானூர்திகள் கொள்வனவு-
இலங்கை விமானப் படையுடன் இணைக்கப்படவுள்ள எம்.ஐ. 171 வகை உலங்கு வானூர்திகள் நேற்றைய தினம் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வகையான 10 உலங்கு வானூர்திகள் விரைவில் இலங்கை விமானப் படையில் இணைக்கப்படவுள்ளன.
ஹெலி ட்ரெவல்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger