உணவு கொடுத்த பெண் பணியாளரை கடித்துக் கொன்ற புலி-
வட இங்கிலாந்தில் உள்ள சவுத் லேக்ஸ் வனவிலங்கு காப்பகத்தில் அழியும் நிலையில் உள்ள சைபீரியா மற்றும் சுபத்ரா பகுதியை சேர்ந்த புலிகள் இயற்கை சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வட இங்கிலாந்தில் உள்ள சவுத் லேக்ஸ் வனவிலங்கு காப்பகத்தில் அழியும் நிலையில் உள்ள சைபீரியா மற்றும் சுபத்ரா பகுதியை சேர்ந்த புலிகள் இயற்கை சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் புலிகளுக்கு இறைச்சி போடுவது, பராமரிப்பது போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு, இங்கு பணியாற்றும் சாரா மெக்லே (24) என்ற பெண் ஒரு புலிக்கு இறைச்சி போட்டுக் கொண்டிருந்தார்.
சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் மீது பாய்ந்த புலி, அந்த பெண்ணின் தொண்டையை கவ்வியது. கவ்விய வேகத்தில் அவரை இழுத்துக் கொண்டு வனப்பகுதியை நோக்கி விரைந்த புலியை காப்பக ஊழியர்கள் கூச்சலிட்டபடியே பின் தொடர்ந்து விரட்டினார்கள்.
பயந்து போன புலி அந்த பெண்ணை கீழே போட்டு விட்டு தப்பியோடியது. தொண்டை மற்றும் தலை பகுதிகளில் படுகாயமடைந்த அந்த பெண் ராயல் பிரெஸ்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து, வன விலங்கு காப்பகத்தை சுற்றிப் பார்க்க வந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தற்காலிகமாக காப்பகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் நீண்ட காலமாக பூனை போல பழகி வந்த புலி அவர் மீது பாய்ந்து கொல்ல முயன்றது குறித்து வனவிலங்கு உளவியலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமான புலியை மயக்க குண்டால் சுட்டு பிடித்த அதிகாரிகள் அதை தனிமைப்படுத்தி கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சாரா மெக்லே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய – இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன்பிடி: காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை
இலங்கை – இந்திய மீனவர்களும் சந்தித்து பேசி, இந்திய-இலங்கை கடற்பகுதியில் கூட்டாக மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை – இந்திய மீனவர்களும் சந்தித்து பேசி, இந்திய-இலங்கை கடற்பகுதியில் கூட்டாக மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் காரைக்காலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 26 பேர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். 45 நாள் சிறை வாசத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் நேற்று காலை ஊர் திரும்பினார்கள்.
விடுதலையாகி வந்த மீனவர்கள் கூறியதாவது:- நாங்கள் கடந்த மாதம் 4ஆம் திகதி அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றோம். நாங்கள் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நாங்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன்பிடிப்பதாகக் கூறி எங்களை கைது செய்தனர்.
பின்னர் சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். 10 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சிறையிலிருந்து எங்களை நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றார்கள். எங்களை விடுவித்து விடுங்கள் என்று நாங்கள் கெஞ்சிய போது உங்களை விடுவித்து விடுகிறோம் என்று கூறுவார்கள். ஆனால் கூறியபடி விடுவிக்காமல் எங்களது காவலை தொடர்ந்து நீட்டித்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறு 4 முறை எங்களது காவலை நீட்டித்துள்ளனர்.
மத்திய மந்திரி நாராயணசாமி மற்றும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் கடந்த 20ஆம் திகதிதான் எங்களை விடுதலை செய்தனர். அதுவும் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்ததாக ஆந்திர மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்களை விடுதலை செய்து அவர்கள் நாடு திரும்பிய பிறகு தான் எங்களை அவர்கள் விடுதலை செய்தனர்.
சுமார் ஒன்றரை மாதமாக நாங்கள் எங்களது மனைவி, மக்களையும், குடும்பத்தினரையும் பார்க்காமல் பரிதவித்தோம். அதுபோன்று அவர்களும் எங்களை காணாமல் தவித்து வந்துள்ளனர். அவர்களை பார்த்த பிறகு தான் எங்களுக்கு மனம் நிம்மதியாக உள்ளது.
மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் 30ஆ் திகதியுடன் முடிவடைகிறது. எனவே தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கச் செல்வார்கள். ஆனால் அதற்கு முன்பாக அரசுத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி, இந்திய-இலங்கை கடற்பகுதியில் கூட்டாக மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது மற்றும் கைது செய்வது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் இவ்வாறு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment