நியூயார்க்கில் சிறிய விமானம் குளத்தில் விழுந்தது: 2 பேர் சாவு / பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 போலீசார் பலி / சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப மனு

 

சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப மனு-
சவுதி அரேபியாவில் இயங்கி வரும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு 10 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ‘நிடாகட்’ சட்டத்தை சவுதி அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இதனையடுத்து சவுதியில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக சவுதியில் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும், வரும் ஜூலை 3ம் தேதிக்குள் சவுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய தொழிலாளர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டங்களை மீறிய வகையில் சவுதியில் தங்கியுள்ளவர்கள், தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிறைவாசமோ, அபராதமோ விதிக்கப்படாது என இந்திய அரசுக்கு சவுதி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சவுதியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அனுமதியின்றி அங்கு தங்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்திய தூதரகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்த மனுக்களை பரிசீலிப்பதற்காக டெல்லியில் இருந்து கூடுதலாக 10 அதிகாரிகள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சுமார் 4 ஆயிரம் இந்தியர் தாய்நாடு திரும்ப விரும்புவோரின் மனுக்களை பரிசீலிப்பதில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மே 20ந்தேதி வரை 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் எனவும் கூறப்படுகிறது.
பெறப்பட்ட மனுக்களில் 56 ஆயிரத்து 734 மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது.
நாளொன்றுக்கு 500 பேருக்கு தாயகம் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் சிறிய விமானம் குளத்தில் விழுந்தது: 2 பேர் சாவு-
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலம், ஹேன்ஸ்காம் விமான நிலையத்தில் இருந்து சிறிய பயணிகள் விமானம் ஒன்று, நேற்று நியூயார்க்கின் ரோம் நகருக்கு சென்றுகொண்டிருந்தது.
அந்த விமானம், மாலை 5 மணியளவில் நியூயார்க்கின் கரோகா நகரில் இருந்து அரை மைல் தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு தண்ணீர் நிரம்பிய பெரிய குட்டையில் விழுந்தது.
விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால், 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமானத்தை ஓட்டி வந்த பைலட்டைக் காணவில்லை. பைலட்டைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கிய விமானம், லாப நோக்கமற்ற நிறுவனமான ஏஞ்சல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அவசர சிகிச்சை தேவைப்படும், நோயாளிகளை ஏற்றிச்செல்வதற்கான இந்த விமானங்கள் தன்னார்வ பைலட்டுகள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 போலீசார் பலி-
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் போலீசார் சென்று கொண்டு இருந்த வாகனங்களை 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 7 போலீஸ்காரர்கள் உடல் சிதறி பலியானார்கள்.
நேற்று இரவு மட்டாணி என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. ஒரு உயர் போலீஸ் அதிகாரி உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். அனைவரும் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger