
இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக அலகு ஒன்றை உருவாக்கும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
சர்வதேச ஊடகங்கள் இதனை தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையை நிராகரிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே கருத்தில் எடுத்திருந்தன. இப்போது தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழிமுறை என்ன என்ற கேள்வியே இல்லை. அதுபற்றி யாருமே பேசுவதும் இல்லை.
முன்னர் தமிழர்களால் சுயாட்சிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. ஆயுதப் போராட்டம் அரசியல் பேச்சு வடிவத்துக்குள் நுழைந்தபோது, உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசப்பட்டது. அவ்வப்போது வேறு சில தீர்வு முறைகள் குறித்தும் கோரிக்கைகள் எழுந்தன. யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இப்போது எந்த தீர்வு முறை குறித்தும் தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது கிடையாது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன், இலங்கையின் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட எந்தவொரு தீர்வையும் வலியுறுத்தும் பலம் தமிழ் அரசியல் சக்திகளிடம் இல்லாமல் போய்விட்டது. அதேவேளை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் எல்லா முயற்சிகளும் முடங்கிப் போய் விட்டதொரு சூழலில், தமிழர் பிரச்சினைக்கு எது சரியான தீர்வாக அமையும் என்று கேள்வி கேட்பாரும் இல்லை. அதுபற்றி அரசாங்கம் பதிலளிப்பதும் இல்லை.
எவ்வாறாயினும், தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தயாராக இருப்பதாக முன்னர் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவே தயாராக இல்லை.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதில்லை என்ற பிடிவாதத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தில் அதிகளவில் கடும்போக்கைக் காண்பித்து வருகிறார்.
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பது ஆபத்தானது என்றும், அது மீண்டும் பிரிவினைவாதம் வலுப்பெறுவதற்கு காரணமாகி விடும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், நீண்ட போராட்டங்கள், பெருமளவு அழிவுகளின் பின்னரும் அதிகாரங்கள், உரிமைகளுக்கான பாதுகாப்பு எதுவும் இல்லாத ஒரு தீர்வுக்குத் தமிழர்களை இணங்க வைப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகத் தெரிகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும், எல்லா மக்களும் சமமானவர்கள், அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன என்று கூறுகின்றனர். ஆனால், அத்தகைய சூழல் இலங்கையில் உள்ளதா என்பதை எவருக்கும், எவரும் விபரிக்க வேண்டியதில்லை. அவ்வாறு எல்லா மக்களும் சமமானவர்களாக மதிக்கப்படும் நிலையை அரசாங்கம் உருவாக்கியிருந்தால், இந்தியா போன்ற நாடுகள், தமிழர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று இப்போதும் வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட பிரிவினைக்கான ஆயுதப் போராட்டத்தை இராணுவ வழிமுறையின் மூலம் அடக்கிவிட்டது அரசாங்கம். ஆனால், இதன் மூலம் நிரந்தரமான அமைதி உருவாக்கப்பட்டுவிட்டதாகவோ, அல்லது பிரிவினைவாதச் சிந்தனைகள் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாவோ கருத முடியாது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், போர் முடிவுக்கு வந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள், பிரபாகரனுடன் அவரது ஈழக் கனவையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக கூறினர். ஆனால், இப்போது அரசாங்கம் அப்படிக் கூறத் தயாராக இல்லை.
பிரபாகரனின் ஈழக் கனவை நனவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைவதாக குற்றம்சாட்டுகிறது அரசாங்கம். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், பிரிவினைவாதத்துக்கும் உயிர் கொடுக்க முனைவதாக புலம்பெயர் தமிழர்களையும் குற்றம்சாட்டுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பிரபாகரனுடன் ஈழக் கனவு செத்துவிட்டதாகத் துணிவுடன் கூறிய அரசாங்கத்தினால் இப்போது அப்படிக் கூற முடியவில்லை. பிரபாகரனின் கொள்கைகளை நம்புகின்ற – அதன் வழி செயற்படுகின்ற பலர் இன்னமும் இருப்பதாகவே அரசாங்கம் கூறுகிறது என்றால், மீண்டும் ஒரு பிரிவினைப் போர் வராது என்று அடித்துக் கூறும் ஆற்றம் அரசாங்கத்துக்கு இல்லை என்றால், அதன் அர்த்தம் என்ன?
அரசாங்கம், போரின் மூலம் – இராணுவ ரீதியாக பிரிவினைக் கோரிக்கைக்கு முடிவுகட்ட முடியவில்லை என்பதே அந்த அர்த்தம்.
போரின் மூலம் அழிக்கப்பட்டதெல்லாம், விடுதலைப் புலிகள் என்ற இயக்கமும், அதன் தலைமையும், அதன் போரிடும் வளங்களும் தான். விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தனியரசே தமிழர் பிரச்சினைக்கு ஒரே – நிரந்தரமான தீர்வு என்ற கொள்கை இன்னமும் அழிக்கப்படவில்லை.
தனியரசே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற கருத்தை, ஒருபோதும் அபிவிருத்தியின் ஊடாகவே சலுகைகளின் ஊடாகவே அழித்து விடமுடியாது. தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.
அரசியல் மீளிணக்கப்பாடும், பொறுப்புக்கூறலும் இதற்கு அவசியம் என்று அமெரிக்கா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது. அரசாங்கம் இந்த இரண்டு ஆலோசனைகளையும் ஏற்கத் தயாராக இல்லை.
எல்லாரும் சமமானவர்கள் என்ற கோட்பாட்டின் மூலம் தமிழர் மத்தியில் உள்ள தனிநாட்டுக் கோட்பாட்டை அழித்து விடலாம் என்று கருதுவதில் தவறில்லை. ஆனால் அதற்கான சூழல் ஏற்படுத்தப்படாமல் வெறுமனே வாய்ப் பேச்சால் எதையும் சாதிக்க முடியாது.
கடந்த காலங்களில், தமிழர்கள் இலங்கையின் ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட பல்வேறு உடன்பாடுகளால் ஏமாற்றப்பட்ட வரலாறு உள்ளது. அந்தக் கசப்பான வரலாறு, தமிழர்களை ஒருபோதும் இன்னொரு ஏமாற்றத்துக்குள் தள்ளுவதற்கு இடமளிக்காது.
ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வு வடிவத்தை உறுதி செய்து கொள்ளாமல் தமிழர் தரப்பைத் திருப்தி செய்வது மிகக் கடினம்.
தமிழர்கள் தாம் செறிந்து வாழும் பகுதிகளில் கூடுதல் அதிகாரங்களுடன், பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த கூடுதல் அதிகாரங்கள் உள்ள தீர்வைத் தான் அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
வடக்கு, கிழக்கிற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற ஜனாதிபதியினதும் பாதுகாப்புச் செயலரினதும் நிலைப்பாடு, தமிழர் பிரச்சினையை முடிவற்று நீளும் ஒன்றாக மாற்றுமே தவிர, நிரந்தர அமைதிக்கு வழிவிடும் என்றாக இருக்காது.
Post a Comment