யாழ்ப்பாணம் கைதடி தனியார் சிறுவர் பாதுகாப்பு இல்ல நிர்வாக முகாமையாளருக்கும் அந்த இல்லத்தில் இருந்த சிறுமிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளினாலேயே சிறுமிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
அனைத்து சிறுமியருக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதடி இரட்சண்யசேனை இல்லத்திலிருந்து 12 சிறுமியர் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டது.
வெளியேறிய சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த ஏனைய சிறுவர்களுடன் வேறொரு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதிய நிர்வாகத்தின் கீழ் அதே சிறுவர் இல்லம் மீண்டும் இயங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தேன். அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது – நீதிமன்றத்தினால் அனுதிக்கப்பட்டிருந்த 16 சிறுமிகளுமே சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியரை மருத்துவப் பரிசோதனை செய்து அவ்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாம் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். குறித்த சிறுவர் இல்லத்தை பெண்களின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேவேளை யாழ். மாவட்டத்தில் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் கூட்டுக் குழுவின் மூலமாக கண்காணிக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
.
.
Post a Comment