அளுத்கம சம்பவம் தொடர்பில் முக்கியமாக பேசப்படும் ஒருவரான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார அவர்களுடன் ஞாயிறு சிங்கள பத்திரிகையொன்று மேற்கொண்டுள்ள நேர்காணலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். இதில் கூறப்படும் பதில்கள் யாவும் தேரரின் பக்கமிருந்து வரும் அவர் சார்பானவை என்பதை ஞாபகமூட்டிக் கொள்கின்றோம்.
கேள்வி –
அளுத்கம சம்பவத்துக்கு பெரும்பாலானவர்கள் பொதுபல சேனாவையே குற்றம் சாட்டினர். இதனாலா நீங்கள் கடந்த புதன் கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக்கு அழைக்கப்பட்டீர்கள்?
பதில் –
அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் அப்பிரதேசத்திலிருந்த பல அமைப்புக்களிடமும், தேரர்களிடமும் விசாரணைகளை சி.ஐ.டி. யினர் மேற்கொண்டனர். அதில் ஒரு குழுவாகத் தான் எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அளுத்கம சம்பவத்துக்கு நான் ஆற்றிய உரைதான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், உண்மை அவ்வாறல்ல. நாம் அரசியல் கட்சி நடாத்தவில்லை. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு பொதுபல சேனாவுக்கு மூளையில் கோளாறு இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் மாவனல்லையில் இதுபோன்ற வன்முறையொன்று ஏற்பட்டது.
அன்று தீப்பற்றிய ஒரு மாடிக் கட்டிடக் கடை இன்று இரண்டு மூன்று மாடிகளாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களைப் பார்க்கும் போது, இதன் பின்னணியில் திட்டமிட்ட ரீதியில் செயற்படும் ஒரு அமைப்பு இயங்குகிறதா என எமக்கு எண்ணத் தோன்றுகிறது. பேருவளையில் ஒரு வியாபாரி தனது கடைக்கு தானே தீவைத்துக் கொண்டு பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளார். அளுத்கம கூட்டம் முடிந்து அமைதியாக முறையில் சென்று கொண்டிருந்த பௌத்தர்கள் மீது முதலாவது தாக்குதல் மேற்கொண்டது முஸ்லிம் பள்ளிவாயலில் இருந்தவர்கள் தான்.
கேள்வி –
நீங்கள் ‘அபசரணய்’ என்று கூறினீர்களே. அதன் கருத்து என்ன?
பதில் –
முஸ்லிம்களின் வியாபாரம் சிங்களவர்களினால் தான் பாதுகாக்கப்படுகின்றது. 76 வீதமான வருமானம் சிங்களவர்களினால் தான் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றது. இதனைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அடிப்படைவாத குழுக்கள் உருவாகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது அவர்களது வியாபாரத்தைப் பாதுகாக்க அவசியமானது.
முஸ்லிம்களிம் வியாபாரிகள் லாபமடைவது இந்நாட்டிலுள்ள சிங்களவர்களினால் ஆகும். எனவே, முஸ்லிம் அடிப்படை வாதிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு. சிங்கள மக்கள் மீதும் பிக்குகள் மீதும் கை வைக்கக் கூடாது என நான் சொன்னேன்.
அவ்வாறு செய்தால், எம்மிடம் இரண்டு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு காணி விற்பதை நிறுத்துவது. மற்றது அவர்களது கடையில் சாமான் வாங்குவதைவிட்டும் சிங்களவர்களைத் தடுப்பது. சிங்கள மக்கள் அளுத்கம, பேருவளை பிரதேசங்களிலுள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணித்தால், அந்தக் கடைகள் மூடிவேண்டி ஏற்படும். இதனைத்தான் நான் ‘அபசரணய்’ என்று கூறினேன்.
அன்று அளுத்கம சிங்கள மக்கள் ஆவேஷத்துடன் இருந்தனர். அவர்களது ஆவேஷத்தை ஆவேஷத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். இதற்காகவே, நான் அங்கு இவ்வாறு உரையாற்றினேன். எனது உரையின் போது மக்கள் சப்தம் போட்டனர். கை தட்டினர். எனது ஆவேஷமான உரையினால் அவர்களது ஆவேஷம் கட்டுப்படுத்தப்பட்டது. எனது உரை அன்றைய வன்முறைக்கு காரணமாக அமையவில்லை.
கேள்வி –
எதிர்க் கட்சியினர், பொதுபல சேனாவின் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகின்றது. இது குறித்து?
பதில்-
இந்த அரசாங்கத்தை வீழ்த்திக் கொள்ள முடியாத எதிர்க் கட்சியும் அதன் தலைவரும் ஒவ்வொரு கதைகளைக் கூறுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய ஒரு பொது எதிரி அவசியம். இதற்காக பொதுபல சேனாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கோட்டாப அவர்களுக்கு பொதுபல சேனாவை செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவருக்கு வேண்டியதைச் செய்ய முப்படையினர் இருக்கிறார்கள். நாம் அவரை ஒரு தடவைதான் சந்தித்துள்ளேன். ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடனும் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இற்காக வேண்டி, உலமாக்களின் பின்னால் கோட்டாபய அவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா?. தௌஹீத் ஜமாஅத் அமைப்பும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டது. இதற்காக அதற்குப் பின்னால் இருப்பது பாதுகாப்புச் செயலாளரா? அவருக்கும் எமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கேள்வி –
உங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டமை சமூகத்தில் முக்கியமாக பேசப்பட்டதுதானே?
பதில் –
மனித உரிமைகள் அமைப்பு எனும் பெயரில் செயற்படும் சில பௌத்த எதிர்ப்பு அமைப்புக்கள் பொதுபல சேனாவை பேய் போன்று சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றது. இந்த பௌத்த இனவாத சக்தியை செயலிழக்கச் செய்வதற்கு இந்த அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.
அமைச்சர் ஹகீம், ஹஸன் அலி போன்றோர் இந்தப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தப் பார்க்கிறார்கள். சிலர் எம்மை பயங்கரவாதிகள் என பெயரிட்டுள்ளனர். நாம் அகிம்சை அடிப்படையில் செயற்படுகின்றோம். அடிப்படைவாதிகள் பௌத்த கலாசாரத்துக்கு எதிராக செயற்பட முற்படுகின்றபோது நாம் அதற்கு எதிராக செயற்பட்டோம். இதன்போது, எம்மை பயங்கரவாதிகளாக்குகின்றனர். தமிழ் கிராமங்களை முஸ்லிம் மயப்படுத்தும் போது நாம் அதனை வெளிப்படுத்தினோம். இதனை வெளிப்படுத்தியமை சிலருக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், அமெரிக்காவுக்கு தவறான தகவல்களை அவர்கள் வழங்குகிறார்கள்.
கேள்வி –
சில ஆங்கில ஊடகங்களில் வெளியா செய்திகளில் பொதுபல சேனாவிலுள்ள தேரர்களின் காவியுடையில் இரத்தக் கறையுள்ளதாக கூறப்பட்டுள்ளதே?
பதில் –
எங்கள் மீது தாக்குதல் நடாத்தும் ஊடகங்கள், இந்த நாட்டில் ஐம்பது கோடி ரூபா பெறுமதிமிக்க காலாவதியான மருந்துப் பொருட்களை வைத்திருந்தவர்களுடைய பெயரை வெளியிட்டதா? அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இவ்வாறானவற்றின் பின்னால் இருப்பது மாற்று மதத்தவர்கள். பொதுபலயிற்கு அடிப்பவர்கள், இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டுவரும் முஸ்லிம்களின் பெயர்களை வெளியிட்டார்களா?
கேள்வி –
நோர்வேயிலிருந்து நிதி பெறும் பொதுபல சேனாவும், அரபு நாட்டிலிருந்து நிதி பெறும் முஸ்லிம் அடிப்படை வாதிகளும் அளுத்கமையில் மோதிக் கொண்டார்கள் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பொதுபலவுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கப் பெறுகிறதா?
பதில் –
சில அமைச்சர்களைப் போன்று எமக்கு இரு நாக்குகள் கிடையாது. எப்படிப் போனாலும் பௌத்த பயங்கரவாதம் என்று ஒன்று இல்லை. இந்த நாட்டில் தலிபான் நிகாய ஒன்று இல்லை. இந்த நாட்டில் இருப்பது விகாரையுடன் கட்டுக் கோப்பான ஒரு சமூகம் மட்டுமே. பிரச்சினையொன்று ஏற்பட்டால் விகாரையின் மணியை அடித்துத் தான் மக்களைக் கூட்டினர். நாம் பார்க்க வேண்டியது விகாரை மணியின் நீள, அகலத்தை அல்ல. அது சொல்லும் கருத்து என்பதையாகும். உண்மையில் நாம் நோர்வேயிலிருந்து ஒரு ரூபாவையாவது பெற்றிருந்தால் அதனை நிரூபியுங்கள் என நாம் சவால் விடுக்கின்றோம்.
கேள்வி –
நீங்கள் கடந்த நாட்களில் மியன்மார் சென்று, விராது தேரரை சந்தித்தமை குறித்து அதிகமானவர்களினால் பேசப்படுகிறது ..?
பதில் –
விராது தேரர் ஒரு பயங்கரவாதி அல்லர். அவர் அகிம்சைவாத செயற்திட்டமொன்றையே முன்னெடுத்துச் செல்கின்றார். விராது தேரரைப் போன்றே தலை லாமாவை சந்திக்கவும் எமக்கு முடியும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கவுன்ஸிலிலுள்ளவர்களும், ஷூரா கவுன்ஸிலில் உள்ளவர்களும் கட்டார் நாட்டுக்குச் சென்று அடிப்படைவாத தலைவரான யுஸுப் அல் கர்ளாவி அவர்களை சந்திக்கும் போது, அதுபற்றி பேசியவர்கள் யார்? இவர் இஸ்ரவேலிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கூட வெட்டிக் கொலை செய்ய முடியும் என்று கூறிய ஒருவர். விராது தேரரின் வேலைத்திட்டம் அகிம்சை ரீதியானது. பொதுபல சேனாவும் அப்படியே.
தமிழில் – எம்.எம். முஹிடீன்.
நன்றி – ஞாயிறு திவயின
Post a Comment