தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் குழுவினர் அண்மையில் 12அம்ச முன்யோசனைகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர். அதற்கு இதுவரையில் ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்காமையாலேயே அமைச்சரவை கூட்டங்களை விமல் வீரவன்ச தவிர்த்த வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிகஹெல உறுமய போன்ற கட்சிகள் அண்மைக்காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவதுடன் அவர்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பனிப்போர் ஆரம்பமானது. அது தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
கசினோ விடயம் தொடர்பிலேயே இவ்விரு கட்சிகளும் அரசாங்கத்துடன் அதிகமாக முரண்பட தொடங்கியது. இவ்வாறான நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் பேராளர் மாநாட்டில் அரசாங்கத்திடம் 12 அம்ச முன்யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த 12 அம்ச முன்யோசனைகள் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. அத்தோடு தமது குறித்த யோசனைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லையெனில் தமது அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையில் அவரது கட்சியின் குறித்த யோசனைகளுக்கு அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பனிப்போர் தொடர்வதாக அரசாங்க வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Post a Comment