எமது பிரச்சினைகள் குறித்து ஒரு மாதகால அவகாசம் வழங்கியுள்ளோம். அதற்கு அரசாங்கம் தலை சாய்க்காவிடின் ஜுலை மாதம் 10 ஆம் திகதி பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சந்திர குப்த தெனுவர கருத்து தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தமது ஆறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமையை மையப்படுத்தி கடந்த மூன்றாம் திகதி அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்றை நடத்தியிருந்தோம்.
இருப்பினும் இது குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது ஆறு கோரிக்கைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.
இதற்கமைய தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அரசிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குகின்றோம் இந்த ஒரு மாத அவகாசத்தினை அரசு உரிய முறையில் பிரயோகப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்காவிடின் ஜூலை 10 ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்படும்.
எனினும் குறித்த வேலை நிறுத்த போராட்டம் எந்த வகையில் முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்றார்.
Post a Comment