ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திற்கும் பொதுவான கரன்சியாக யூரோ கடந்த சில வருடங்களாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த ஒன்றியத்தைச் சேர்ந்த 28 நாடுகளில் மொத்தம் 18 நாடுகள் தற்போது இந்த யூரோ கரன்சியைப் பயன்படுத்தி வருகின்றன. பால்டிக் நாடுகளில் ஒன்றான லிதுவேனியா அடுத்த ஆண்டு முதல் யூரோ கரன்சியைப் பயன்படுத்த உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் பால்டிக் பிரிவைச் சேர்ந்த எஸ்டோனியா முதல் நாடாக யூரோ கரன்சியைப் உபயோகப்படுத்தத் துவங்கியது. இந்த வரிசையின் கடைசி நாடான லிதுவேனியாவும் இதில் தற்போது இணைய உள்ளது.
இங்கிலாந்து மற்றும் டென்மார்க் தவிர அனைத்து உறுப்பினர் நாடுகளும் விரைவில் யூரோ பயன்பாட்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. போலந்திற்கு வருகை தந்திருந்த லிதுவேனியா அதிபர் தாலியா கிரைபாஸ்கெய்ட் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இதன்மூலம் தாங்கள் பலமான குழுவில் இணைய உள்ளதாகவும், தங்களுக்கான முடிவுகளைத் தாங்களே எடுக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய லிட்டா கரன்சியை விடுத்து யூரோவில் இணைவது உக்ரேனிய நெருக்கடியை எதிர்கொள்வதில் அதிகமான பாதுகாப்பினை அளிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமரான அல்கிர்தாஸ் பட்கேவிசியஸ் குறிப்பிட்டார். இதற்கான மேலும் சில நடைமுறைகளும் ஐரோப்பிய மத்திய வங்கி மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னரே யூரோ கரன்சியைப் பயன்படுத்தும் திட்டத்தில் இணைய லிதுவேனியா முயற்சித்தது. ஆனால் அப்போது அங்கு நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியினால் இது நிறைவேறவில்லை. இந்த நெருக்கடி மாற லிதுவேனியா அரசு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார விவகார ஆணையர் ஒல்லி ரெஹ்ன் பாராட்டியுள்ளார்.
Post a Comment