அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் நடைபெற்றது இன வாத மோதல் அல்ல. மாறாக தங்களை பெளத்தர்கள் என அடையாளம் காட்டிக்கொண்ட பயங்கரவாதிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனர் என மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு சம்பந்தமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டில் நிலவி வரும் சமகாலப் பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இனவாத மோதல் என்றால் இரு பக்கமும் தாக்குதல் நடந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்களே. முஸ்லிம்கள் அடிகளை மாத்திரம் தான் வாங்கினர். அவர்கள் திருப்பி அடிக்கவில்லை. குறித்த பகுதிகளில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. ஆனால் ஒரு விகாரை கூட தாக்கப்படவில்லை.
திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கிய கொள்ளைக் கோஷ்டி வீடுகளுக்குள் புகுந்து பெறுமதி மிக்க பொருட்களைக் கொள்ளையிட்டனர். அதன் பின்னரே வீடுகளுக்குத் தீ வைத்தனர்.
இந்த அக்கிரமங்கள் அனைத்தும் ஊரடங்குச் சட்டத்திலேயெ அரங்கேறியுள்ளன. இதற்கு அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். அங்கிருந்த பொலிஸாரும் இராணுவமும் தங்களது கடமையை சரிவரச் செய்யவில்லை. இதன் காரணமாகவே முஸ்லிம்களுக்கு அதிக இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை விசாரிக்க அமைக்கப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment