சாய்ந்தமருது கடற்கரை ஓரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை காரியாலயம் மீது இன்று மஃரிப் தொழுகையை
தொடர்ந்து குர்ஆன், சுன்னாவுக்கு எதிரான ஒரு குழு (தரீகா) கடுமையாக தாக்குதல்
நடத்தியுள்ளது. இதில்
கிளைக் காரியாலயத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலே இனவாதிகளால் முஸ்லிம் சமுதாயமும், முஸ்லிம்களின் இறையில்லங்களும் தாக்கப்பட்டு வரும் இத்தருணத்தில், அதிலும் சிங்கள பெரும்பான்மை சமுதாயம் செய்த அட்டூழியங்களை முஸ்லிம்கள் தான் செய்தார்கள், கடைகளை தீயிட்டுக் கொண்டதும் முஸ்லிம்களே! துப்பாக்கியால் சுட்டுக் கொண்டவர்களும் முஸ்லிம்களே! பெற்ரோல் குண்டுகளை எறிந்தவர்களும் முஸ்லிம்களே என்று நடந்த உண்மைகளை நரித்தனத்துடன் திரிபுசெய்து வெளியிட்டு பேரினவாதிகள் குளிர்காய முனையும் இத்தருணத்தில் முஸ்லிம்களே கோடாரிக் காம்புகளாய் மாறி வருவது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
தம்பள்ளை பள்ளி, கிரெண்ட் பாஸ் பள்ளி உட்பட இலங்கையில் குறிவைக்கப்படும் பள்ளிவாசல் தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டங்களையும் ஊடகவியலாளர் சந்திப்புகளையும், பத்திரிகை அறிக்கைகளையும், தீர்மானங்களையும் இன்று வரை நிகழ்த்தி வருவது உலகறிந்த உண்மை. இவ்வாறு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் குரல் எழுப்பப் படும் எந்தவொரு பள்ளிவாசலும் தவ்ஹீத் பள்ளிகளில்லை என்பதும். அனைத்துமே தப்லீக் மற்றும் தரீகா சார்பான பள்ளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றாலும், இது இயக்க ரீதியாக அனுகப்படவேண்டிய பிரச்சினை இல்லை என்பதும், பாதிப்பு என்பது முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளடக்கியே வருகிறது என்பதாலும், இயக்க வேறுபாடு காட்டினால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் உம்மத்து தான் என்பதாலும் இது போன்ற சமுதாய பிரச்சினைகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பரந்த மனதுடனேயே இது வரை கையாண்டு வந்துள்ளது.
ஆனால், குறுகிய உள்ளத்துடனும், இயக்க வெறித்தனத்துடனும் நடந்து கொள்ளும் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் நாட்டின் நிலைமை புரியாமலும், தங்கள் குரோதத்தை பலி தீர்க்கும் விதமாகவும் நடந்து கொள்வதானது கண்டிக்கத்தக்கதாகும் என்பதுடன், சமூகத்தை பலிகடாவாக்கும் செயலுமாகும்.
தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் சுமுகமான கருத்தாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கு முயலாமல், காடைத்தனத்துடன் கையாழ்வதானது பேரினவாதிகளுக்கு அவல் கிடைத்த மாதிரி அமைந்துவிடும். பள்ளிகளை சிங்கள மக்கள் தாக்கவில்லை. முஸ்லிம் குழுக்களே தாக்கியுள்ளன என்ற கருத்தை நிலை நாட்டி தங்கள் மீது விழுந்துள்ள களங்கத்தை துடைத்தெறிவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
இது போன் இயக்க சண்டைகள் எங்கள் விரல்களால் எங்கள் கண்களை நாமே குத்திக் கொள்வதற்கு சமனாகும் என்பதே உண்மை.
ஆதலால். நிலைமையை புரிந்து நடத்தையை மாற்றிக் கொள்வது அனைவரதும் கடமையாகும் என்பதுடன், சாய்ந்தமருது கிளை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த இயக்கத்தவராயினும் சட்ட நடவடிக்கைக்க உட்படுத்தப்படல் வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோளாகும்.
Post a Comment