நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,000 அதிகரித்துள்ளது.
இதுவரையில் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கம்பஹா, கொழும்பு, காலி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் தற்போது மழை குறைவடைந்துள்ளதுடன் வெள்ளம் வடிந்தோடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடைக்கிடை மழை பெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதேவேளை களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால், கங்கைக்கு இருமருங்கிலும் உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் கடுவெல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கைக்கு அருகிலுள்ள மல்வானை, பியகம, மாபிடிகம உள்ளிட்ட சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்றிரவு முதல் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி மாவட்டத்தில் ஜிங் கங்கை பெருக்கெடுத்துள்ளதால், ஏற்பட்ட வெள்ளம் தற்போது படிப்படியாக வடிந்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய, களுத்துறை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் தலைவர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment