கல்வித்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு மற்றும் பதவி உயர்வு இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவினால் இது வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று வழங்கப்படவில்லையென அகில இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இப்பிரச்சினைகளுக்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது பேர் கொண்ட குழு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகியவற்றின் யாப்புக்களைத் திருத்தி அதனுடைய பிரதிகளை தொழிற்சங்கங்களுக்கு கையளித்திருந்தனர்.
அதேபோல 2010. .12..31 அன்று வழங்குவதாக எழுத்துமூலம் உறுதியளிக்கப்பட்டிருந்த ஆசிரிய சேவையாளர்களுக்கான சம்பளப்படிநிலை தரமுயர்த்தல் மற்றும் பதவி உயர்வு வழங்கல் ஆகிய விடயங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை. அதன் படி நாடளாவிய ரீதியில் இரண்டு லட்சத்து பதினான்காயிரம் ஆசிரியர் சேவையாளர்களுக்கு பதவி உயர்வோ தரமுயர்த்தலோ கடந்த மூன்று வருடகாலமாக வழங்கப்படவில்லை.
இத்தகைய சலுகைகளை வழங்கக் கோரும் அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகியவற்றின் யாப்புக்கள் திருத்தியமைக்கப்பட்டிருப்பதானது எமது உரிமைகளை அரசாங்கம் மறுக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகும். தற்போது திருத்தப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள யாப்புக்களிலும் கூட முன்னர் இருந்த யாப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த பதவி உயர்வு மற்றும் தரமுயர்த்தல் சம்பந்தமான விடயங்கள் ஆகிய அனைத்துமே நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த 2008 .07.01 அன்று பரீட்சை மதீப்பீட்டு பணிகளை புறக்கணித்து கல்வித்துறை எதிர்நோக்கியுள்ள சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தி கடந்த 2008.07.01 அன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றை நடத்திய போது நீதிமன்றம் எமது கோரிக்கைகளை அங்கீகரித்து அவற்றை வழங்க வேண்டுமென அரசுக்கு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதனையும் நிராகரிக்கும் வகையில் அரசாங்கமானது தற்போது அந்த பரிந்துகைளையும் அமுல்படுத்தாது. மிகவும் நுட்பமான முறையில் வேறு பல கதைகளை சோடித்துக்கொண்டிருக்கிறது. அதேவேளை கல்வி அமைச்சர் இப்பிரச்சினைகளைப் பற்றி நேரடியாக தொழிற் சங்கங்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ கலந்தாலோசித்து தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்வதில்லை.
எது எப்படியிருந்தாலும் இம்மாதம் பதினைந்தாம் திகதி எமக்கு தீர்க்கமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமானதொரு தீர்வு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கவில்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. வரும் காலங்களில் நாடெங்கிலுமுள்ள சகல தொழிற்சங்க அங்கத்தவரையும் ஏகமனதாக இணைத்துக்கொண்டு மாநாடுகளை நடத்தி ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவுள்ளோம். என்றார்.
Post a Comment