வெலிப்பனை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சில அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்துகமவில் கால்நடை வளர்ப்பு பன்னைக்குள் புகுந்த அடையாளம் காணாத சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கால்நடை வளர்ப்பு பண்ணையின் காவலாளியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, வெலிப்பனை பகுதியில் சுமார் 10 வர்த்தக நிலையங்கள் மீது அடையாளம் காணாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வர்த்தக நிலையங்களை அண்மித்து காணப்பட்ட வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களை மேற்கொள்ள 150 அதிகமானோர் வருகை தந்துள்ளதாகவும் எனினும் அதில் ஒருவர் கூட அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமாறு ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கூறினார்.
அளுத்கம பகுதயில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மோதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கான காணொளிகள் பெறப்பட்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்த முப்பது வருடகால யுத்தத்தால் நாட்டு மக்கள் பெரிதும் துன்பப்பட்டதாகவும் அவ்வாறன ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
மோதல் இடம்பெற்றுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கலகம் ஏற்படுத்துதல், மோதல் நிலைகளை தோற்றுவிப்போருக்கு எதிராக பொலிஸாரின் அதிகாரம் பயன்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment