5 மாநிலங்களில் மிசோரம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவியதால் இந்த தேர்தலை பாராளுமன்ற தேர்தல் எனும் இறுதி ஆட்டத்துக்கு முந்தைய அரை இறுதி போட்டி என்று கூறினார்கள்.
அந்த அரை இறுதிப் போட்டியில் பா.ஜ.க. 4–0 என்ற கணக்கில் காங்கிரசை வீழ்த்தியுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் மொத்தம் 590 தொகுதிகள் உள்ளன. இதில் 408 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 126 இடங்களே கிடைத்தன. 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிக, மிக கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
4 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி ஏற்படுத்தி உள்ள அலையே காரணம் என்று கூறப்படுகிறது. சட்ட சபை தேர்தல் பிரசாரத்தின் போதே மோடி அலை வீசுவதாக கருத்து கணிப்புகள் கூறி இருந்தன. தேர்தல் முடிவுகள் அதை உறுதிப்படுத்தி விட்டன.
4 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்களை விட நரேந்திர மோடிதான் அதிக கூட்டங்களில் பேசினார். அவர் பேசிய கூட்டங்களில் மக்கள் பெருமளவில் திரண்டு வந்தனர்.
4 மாநில தேர்தலின் போது நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்கள், அவர் பேச்சை கேட்க ஆர்வமுடன் வந்தனர். மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்திலும் மோடிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. அவை எல்லாம் ஓட்டுக்களாக மாறின.
இது பா.ஜ.க. தலைவர்களை மிகுந்த மிகழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைக்க வைத்துள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. மிக, மிக வலுவாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த 4 மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வலிமையானதாக இருக்கிறது.
மோடியின் இந்த அலை சட்டசபை தேர்தலை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் 72 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன.
இந்த 72 தொகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றியை மோடி அலை உறுதிபடுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 26 எம்.பி. தொகுதிகள் இருக்கின்றன.
இந்த தொகுதிகளையும் சேர்க்கும்பட்சத்தில் சுமார் 100 எம்.பி. தொகுதிகளில் மோடி அலை வெற்றியை கொடுப்பது உறுதியாகி இருக்கிறது.
மோடி அலை இந்த 4 மாநிலங்களில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் உள்ளது. சமீபத்தில் நாடெங்கும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் மோடி அலை வீசுவதை கூறி உள்ளன.
இனி வரும் நாட்களில் நரேந்திர மோடி நாடெங்கும் தனது சூறாவளி சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். அப்போது மோடி அலை மேலும் வலு பெற்று சூறாவளியாக மாறி விடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி மலரும் என்று அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
4 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரசுக்கு உத்தரபிர தேசம், மராட்டியம், பீகார், ஒடிசா, தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் வெற்றி கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ.க.வில் சேரும் பட்சத்தில் அங்கு காங்கிரசுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது. ஆந்திராவை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தன் தலையில் தானே பண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள்.
ஆந்திராவில் காங்கிரசுக்கு சம்மட்டி அடி காத்து இருக்கிறது. இந்த நிலையில் மோடி அலை சுழன்றடிப்பது, காங்கிரசை திணற வைத்துள்ளது.
மோடி அலை சுழற்சியில் சிக்கி சிதைந்து விடுவோமோ என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே மிரட்சியில் உள்ளனர்
.
.

Post a Comment