டில்லியில் காங்கிரஸின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!!


டில்லி மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சி ஆசனத்தில் கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சியினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏழை மக்கள் கட்சியின் அதிரடியான எழுச்சியால் படுதோல்வியை சந்தித்து உள்ளனர்.
டில்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டில்லி மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவருமான ஷீலா தீட்ஷித்தே 15 ஆண்டுகளாக முதல்வராக நீடித்தார்.
இந்நிலையில் டில்லியில் சமீப காலமாக நடந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தன.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்தாண்டு ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் டில்லி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தின. டில்லியில் ஹசாரேயின் போராட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பார்த்த அவரின் சீடர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏழை மக்கள் கட்சி என்ற பெயரில் தனியாக கட்சி துவங்கினார்.
டில்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப் பதிவுக்கான நேரம் முடிந்தும் இரவு, 9:30 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்களின் இந்த ஆர்வம் காங்கிரஸ் – பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன .துவக்கத்திலிருந்தே ஆளும் கட்சியான காங்கிரசுக்கு சோகமான செய்திகளே வந்தன. முன்னிலை பெறுவதில் பா.ஜ.,வுக்கும் ஏழை மக்கள் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.
உற்சாகம் அடைந்த ஏழை மக்கள் கட்சி ஆதரவாளர்கள் டில்லியில், அந்த கட்சியின் அலுவலகத்தின் முன் தங்களின் தேர்தல் சின்னமான துடைப்பத்துடன் திரண்டு வெற்றியைக் கொண்டாடினர்.
இறுதியில் டில்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ., 32 தொகுதிகளிலும் ஏழை மக்கள் கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒற்றை இலக்கமான எட்டு தொகுதிகளுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தது.
புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஷீலா தீட்ஷித், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் படுதோல்வியடைந்தார். ஷீலா தீட்ஷித் அமைச்சரவையில் இருந்த பலரும் தோல்வியை சந்தித்தனர்.
டில்லியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநில கவர்னர் பா.ஜ.,வை, ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger