ஆக்கம் : எம்.டீ.எம்.பர்ஸான் -
அகிலத்தார் அனைவருக்குமாக அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட
மார்க்கம் புனித இஸ்லாம் ஒன்றே. அதன் தூய தூதினை வரலாற்றுப் பெருவெளியில் வந்து போன
அனைத்து இறை தூதர்களும் அன்று எந்த வடிவத்தில் மக்களுக்கு எத்திவைத்தார்களோ,
அதே பாணியில் இஸ்லாத்தினை
அதன் தூய வடிவில் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். நடு நிலையில் நின்று இதனை
அணுகும் அனைவர் மீதும் ‘ஹிதாயத்’ எனும் நேர்வழியை அல்லாஹ் வழங்குவானாக!
அழைப்பின் ஆரம்பம்
இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அதன் வாயிலுக்குள்
புதிதாக ஒருவர் நுழைவதற்கான திறவு கோலாகவும் திகழ்வது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் ஏகத்துவக் கொள்கையாகும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களது வாழ்வொழுங்கை நெறிப்படுத்த வந்த அத்தனை
நபிமார்களும் தங்களது அழைப்புப் பணியின் ஆரம்பக் கருப்பொருளாகக் கொண்டு அகிலத்தாரை
அறைகூவி அழைப்பு விடுத்ததும் இந்த ஏகத்துவக் கொள்கையை முன்வைத்துத் தான்.
‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன்
வேறு யாரும் இல்லை. எனவே, என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல்
(முஹம்மதே!) உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை’ அல்குர்ஆன்
(21 : 25)
என்ற திருமறை வசனம் அழைப்பின் ஆரம்பப்
புள்ளி எது என்பதை துளாம்பரமாக எடுத்துக்காட்டுகிறது.
ஒவ்வொரு இறை தூதரும் தங்களது அழைப்புப் பணியின் போது, தாம் எதிர் கொண்ட சமுதாய கட்டமைப்பிலிருந்து பல நூறு அசிங்கங்களையும்,
அவலங்களையும், அனாச்சாரங்களையும் களைய வேண்டி வந்த போது,
அவற்றில் முதன்மைப்படுத்தி,
முன்னுரிமையளித்து களையெடுத்தும்,
கழிவகற்றியதுமான முதன்மைப்பாவம்
தவ்ஹீதை - ஏக இறை நம்பிக்கையைத் - தகர்த்தெறியும் இணைவைப்புச் சிந்தனையான ஷிர்க் என்பதனை
அல் குர்ஆனிய வசனங்கள் எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன.
நல்லடியார்களை சிலைகளாக வடித்து வணங்கிய சமுதாயத்தை எதிர்த்து நின்ற நூஹ் (அலை)
(11:26), தன் மீது விழுகின்ற
எச்சத்தைத் தானும் தடுத்து நிறுத்த சக்தியற்ற கற்சிலைகளை தகர்த்தெறிந்த இப்றாஹிம்
(அலை) (19:42), அகம்பாவம் தலைக்கேறி
நானே அகிலத்தின் அதிபதி என முழக்கமிட்ட பிர்அவ்னுக்கே அல்லாஹ்வை அறிமுகப்படுத்திய மூஸா
(அலை) (20:49-50), சிறைக்கம்பிகளுக்குள்
சிக்குண்ட போதும் தவ்ஹீதை பறைசாற்றிய யுஸூப் (அலை) (12:37-40) போன்றோர் அழைப்புப் பணியின் ஆரம்பம் இணைவைப்புக் கெதிரான
போராட்டமாகவே அமைய வேண்டும் என்பதற்கான அழகிய ஆதர்ஷ புருஷர்களாவர்.
அழைப்புப் பணியும் அர்ப்பணங்களும்
வரலாற்றில் நபிமார்கள் உட்பட யாரெல்லாம் இந்த ஏகத்துவக் கொள்கைப்பிரகடனத்தை மக்களுக்கு
தெளிவாக முன்வைத்தார்களோ, அவர்கள் அனைவரும்
அவர்களது சமுதாயத்தினராலேயே பெரிதும் தொல்லைக்குட்படுத்தப்பட்டதை பார்க்கிறோம். வண்மையாக
எதிர்க்கப்பட்டதைப் பார்க்கிறோம். பைத்தியக் காரன் என்றும், சூனியக் காரன் என்றும், பிரிவினை வாதியென்றும் எள்ளிநகையாடப்பட்டதைக் காண்கின்றோம். துன்புறுத்தல்களுக்கும்,
ஊர்
விலக்கல்களுக்கும்,
சமூக பகிஷ்காரங்களுக்கும்
உட்பட்டதைப் பார்க்கிறோம். பலரது பெறுமதி வாய்ந்த உயிர்கள் இக்கொள்கையை உரத்துச் சொன்னதற்காக
பறிக்கப்பட்டதைப் பார்க்கிறோம்.
‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற இத்தாரக மந்திரத்தை
ஏற்ற ஒரே காரணத்திற்காக நெருப்புக் கிடங்கில்
உயிரோடு கொளுத்தப்பட்ட ‘அஸ்ஹாபுல் உஹ்தூத்’
(85:3-8), குகைக்குள் பதுங்கி வாழ்ந்த
‘அஸ்ஹாபுல் கஹ்ப்’
(15:15-16), மாறு கை - மாறு கால் வெட்டப்பட்ட
பிர்அவ்னின் மந்திரவாதிகள் (7:121-126), தணலில் தோல் பொசுங்கிய கப்பாப் பின் அரத் (ரலி) போன்றோரின் வரலாறுகள் இவ் ஏக தெய்வக்
கொள்கையை ஏற்றோர் எதிர் கொண்ட எதிர்ப்புகளையும்,
அவர்கள் இந்தக் கொள்கைக்காய்
புரிந்த தியாகங்களையும் எமக்குப் படம்பிடித்துக் காட்டி நிற்கின்றன. இதன் பின்னரும்
யாரெல்லாம் இந்தப் பாதையில் நடைபயில ஆசிக்கின்றார்களோ அவர்களும் இத்தகைய அர்ப்பணங்களை
அரவணைக்க நேரிடும் என்பதை கட்டியம் கூறுகின்றது.
எதிர்ப்புகள் ஏன்?
இந்த ஏக இறைக் கொள்கையை உலகுக்கு முன் உரத்துச் சொன்ன போது, ஏன் நபிமார்களும், நல்லோர்களும் எதிர்க்கப்பட்டார்கள்? ஒட்டுமொத்த சமுதாயத்தினதும் எதிர்ப்புக்கும்,
இன்னல்களுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகும் அளவிற்கு இந்தத் திருக்
கலிமாவிற்குள் அப்படி என்னதான் புதைந்து கிடக்கிறது? இவை விடை காணப்பட வேண்டிய வினாக்களாகும்.
முன்னோர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும்
பற்றி குரல் கம்மப் பேசுகின்ற எம்மில் பலர், அவர்கள் ஏன் அந்தத் தியாகங்களைப் புரிய வேண்டி வந்தது?
என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு
மறந்து விட்டார்கள். இவ்வெதிர்ப்புக்கான காரணத்தை மட்டும் அழைப்பாளர்கள் ஆய்வுக்கு
உட்டுத்துவார்களேயானால் இன்றைய தஃவா களத்தின் கள நிலவரங்கள் வித்தியாசமானதாய் மாறியிருக்கும்.
ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் இரத்தினச் சுருக்கமாய் ஒரே வரிக்குள் உள்ளடக்கியது தான்
இத்திருக்கலிமாவாகும். ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எதுவுமில்லை.’
இந்தக் கலிமாவின் பொருளை சற்று உன்னிப்பாக ஆய்வு செய்வோமேயானால் கொள்கைவாதிகள்
எதிர்க்கப்படுவதற்கான காரணத்தை துல்லியமாக விளங்கிக் கொள்ளலாம். முதல் அம்சமாக,
அல்லாஹ்வை மட்டுமே ஏக இறைவனாக
ஏற்கும் விடயத்தை இக்கலிமா எதிர் மறையாகக் கூறியிருப்பது ஆழமாக அவதானிக்கப்பட வேண்டிய
ஒன்று. இதைப் பொதுப்படையாக ‘வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ்’ என்று கூறாமல்,
‘அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை!
எதுவுமில்லை!’ என்று கூறியிருப்பதானது நாம் சிந்திக்க வேண்டிய
சொல்லாடல் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் சந்தித்த அந்த ஜாஹிலிய்ய மக்கள் கூட அல்லாஹ்வை
மறுக்கவேயில்லை. இதற்கோர் உதாரணமாக நபிகளார் பிறக்க முன்பே இறந்து போன அவர்களின் தந்தை ‘அப்துல்லாஹ்
- அல்லாஹ்வின் அடிமை’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம். அந்த மக்கள்
அல்லாஹ்வை இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பதை அல்குர்ஆன் கூட பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது.
“வானங்களையும், புமியையும்
படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் (முஹம்மதே!) நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று
கூறுவார்கள்” (29:61)
ஆகவே, ஒட்டுமொத்த ஜாஹிலிய்ய
சமுதாயமும் தங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் அல்லாஹ் தான் என்ற கொள்கையை ஏற்றிருந்தன
என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் முன்வைத்த
கொள்கையும் கூட, அதே அல்லாஹ்வின் கொள்கையைத்
தான் என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஒரு கொள்கையை ஏற்று நம்பியிருக்கும்
ஒரு சமுதாயத்திடம் அதே கொள்கையை வலுவுட்டும் கருத்துக்களை ஒருவர் முன்வைக்கும் போது,
அவர் அந்த சமுதாயத்தினால்
வாழ்த்தி வரவேற்கப்படுவாரே தவிர புறக்கணிக்கப்படவோ, எதிர்க்கப்படவோ மாட்டார். நிலைமை இவ்வாறிருக்கையில், அல்லாஹ்வை ஏற்றிருந்த அந்த அரேபிய சமுதாயத்திடம்,
அதே அல்லாஹ்வை ஏற்று நடக்குமாறு
ஒரு கருத்தை முன்வைத்த போது, நபிகளார் மட்டும் ஏன் அடிவாங்கினார்கள்?
ஏன் அவமதிக்கப்பட்டார்கள்?
துன்பத்துக்கும், துயரங்களுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகினார்கள்?
இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றவில்லையா? இதைப்பற்றி எப்போதாவது நாம் சிந்தித்ததுண்டா?
இந்தக் குழப்பத்தையும் இன்னும்
கொஞ்சம் ஆழ்ந்து அவதானித்தோம் என்றால் எதிர்ப்புகள் ஏன்? என்பதற்கான காரணம் வெளிப்படும். அந்த ஜாஹிலிய்ய
மக்களும் அல்லாஹ்வைத் தான் இறைவனாக ஏற்றிருந்தாலும், அதை உதட்டளவில் நம்பிக்கை கொண்டு வேறுபல கடவுளர்களையும்
வணங்கி வழிபட்டார்கள். அல்லாஹ்வை ரப்பாக நம்பிய அதே சமயம் லாத்தையும் உஸ்ஸாவையும் உதவிக்காக
அழைத்தார்கள். அல்லாஹ்வை ரப்பாக ஏற்றவர்கள் தாயத்தும், தகடும் நோய்களை குணப்படுத்தும் என்றும் விசுவாசித்தார்கள்.
அல்லாஹ் தான் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் என்று கூறிக் கொண்டே மண்ணறையில் அடக்கம்
செய்யப்பட்டு, மண்ணோடு மண்ணாய் உக்கிப்
போன மரணித்தவர்களிடமும் தேவைகளை வேண்டிக் கொண்டிருந்தார்கள். பார்க்க (39:3)
இதனால் தான், திருக்கலிமா மிகத்
தெளிவாக அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்துக் கடவுள்களும் கற்பனையானவை: கையாலாகாதவை: போலியானவை
என்று அவர்களின் நம்பிக்கைகளை மறுத்துரைக்கும் வகையில் எதிர்
மறையாக அமைந்து, அவர்களின் பிழையான நம்பிக்கைக்கு சவுக்கடி கொடுத்தது.
இத்திருக்கலிமா இரண்டு விதமான கொள்கைப் பிரகடனங்களை உலகுக்கு முன்வைக்கிறது.
1. எது பிழை என்று சொல்லும்
பிரகடனம்
2. எது சரி என்று சொல்லும் பிரகடனம்
நபிகளாரின் முதல் தூதே لا(லா) - ‘இல்லை’ என்று மறுக்கும் விதமாக
அமைந்து, அந்த சமுதாய அங்கத்தவர்களின்
மூட நம்பிக்கைகள், பல கடவுள் சித்தாந்தங்கள்
எல்லாம் தவறு, கற்பனை, பொய், புரட்டு, பிழை என்று தோலுரித்துக்
காட்டியது. கற்சிலைகளோ, நல்லடியார்களோ,
படைப்புகளான சூரியனோ,
சந்திரனோ, மரமோ, செடியோ, மாடோ, மயிலோ, பாம்போ எதுவானாலும் வணக்கத்திற்கும், வழிபாட்டுக்கும் தகுதியற்றவைகள். அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கி வழிபடுவதற்கும்,
தேவைகளை நிறைவேற்றுவதற்கும்,
கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும்,
அறுத்துப் பலியிடுவதற்கும்,
நேர்ச்சை வைப்பதற்கும்,
பிரார்த்தனைகளை ஏற்பதற்கும்,
ஆபத்திலிருந்து அபயமளிப்பதற்கும்
தகுதி வாய்ந்தவன் என்று கேட்போர் உள்ளத்தை உசுப்பும் வகையில் உரத்துக் கூறியதனால்
தான், அந்தக் குறைஷிக் குப்பார்கள்
நபிகள் நாயகத்தை எதிர்ப்பதற்காய் ஓரணியில் திரண்டார்கள். அவதூறு வார்த்தைகளை அள்ளி
வீசினார்கள். முபாரக்கான முகத்தில் புழுதியை வீசி எறிந்தார்கள்!
எனவே, இத்திருக் கலிமா இன்றைய
அழைப்பாளர்களுக்கான ஓர் அற்புதமான செய்தியினை கூற விளைவதை எம்மில் அனேகர் விளங்கத் தவறிவிட்டமை
எமது துர்ப்பாக்கியமாகும். இன்று நம் சமுதாயத்தில் சிலர் தொழுகைக்காக மக்களை அழைக்கின்றனர். வேறு சிலர் சமூக சேவைகளை முன்னிறுத்தி மக்களை அழைக்கின்றனர்.
இன்னும் சிலர் அறிவியல் புரட்சியை
மையமாக வைத்து அழைப்பு விடுக்கின்றனர். பிரிதொரு சாராரோ கிலாபத், ஆட்சி, அதிகாரம், சமூக உருவாக்கம் என்ற கருத்தை உரத்துச் சொல்லி அழைப்புப்
பணி புரிகின்றனர். சிலர் ஜிஹாதை முதன்மைப்படுத்தி
இளசுகளின் உணர்ச்சியைத் தூண்டி மக்களை அழைக்கின்றனர்.
ஒவ்வொரு சாராரும் தாங்கள் அழைப்பு விடுக்கும் சுலோகத்தின் மூலம் சமுதாய மாற்றத்தை
ஏற்படுத்தி விடலாம் என்ற அதீத கற்பனையில் சஞசரிக்கின்றனர். தங்களது இவ்வழைப்பை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக,
மக்கள் மனங்களில் புறையோடிப்போயிருக்கும்
ஷிர்க்கையும், பித்அத்தையும்,
இன்னுமுண்டான பாவச் செயல்களையும்,
இஸ்லாத்துக்கு விரோதமான நபிவழிக்கு
முரணான நடைமுறைகளையும் சுட்டிக் காட்டுவதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ அஞ்சுகின்றனர். மக்கள் சரியென்று நினைத்து செய்து வரும் மௌட்டீகங்களையும்,
மூட நம்பிக்கைகளையும் ‘பிழை’ என்று கலிமா ஸ்டைலில்
பட்டவர்த்தனமாய் எடுத்துச் சொன்னால் தங்களது கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: தங்களது
இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது போய்விடும்: தங்களது இயக்கத்தில் இணைவோரின் எண்ணிக்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் நினைத்து, கதிகலங்கிப்போய் தீமைகளுக்குச் சார்பாக பக்கவாத்தியம்
இசைப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால், அல்குர்ஆனின் ஒளியில்
நின்று நோக்குகையில், இவர்களது இந்நழுவல்
போக்கு பிழை என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். சமுதாய மாற்றம் என்பது சத்தியத்தை
தாரைவார்ப்பதினாலோ, அசத்தியத்திற்கு துணைபோவதனாலோ,
உலகளாவிய தலைமைத்துவத்தை உருவாக்கிவிடுவதனாலோ மலர்ந்துவிட மாட்டாது. தவ்ஹீதை எடுத்துச் சொல்லி,
சமுதாய அமைப்பில் ஊடுறுவியிருக்கும்
ஷிர்க்கை அதன் வேரடி மண்ணோடு அகற்றி, அல்லாஹ்வை சரியாக அகிலத்துக்கு அறிமுகப்படுத்துவன் மூலமே சமுதாய மாற்றம் சாத்தியப்படும்.
அகீதாவில் தெளிவுள்ள உறுதியான சமுதாய அமைப்பு உருவாகின்ற போது தான், இவர்கள் கனவு காணும் ஆட்சி அதிகாரம் உலகில் உதயமாகும்
என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது.
“அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம்
வழங்கியதைப் போல், அவர்களுக்குப் புமியில் அதிகாரம்
வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட
மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின்
அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும்
உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள்
என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை)
மறுத்தோரே குற்றம் புரிவார்கள்.” (24: 25)
அலட்சியப்படுத்தப்படும் முன்மாதிரிகள்
சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும்,
உள்ளதை உள்ளபடி ஊர் உலகத்திற்கு அஞ்சாது,
உண்மையை எடுத்துரைக்கின்ற
ஒரு மகத்தான பணி தான் அழைப்புப் பணியாகும். வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற
இஸ்லாம் மிக உயரிய பணியான இந்த அழைப்புப் பணியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு
மிக காத்திரமான வழிகாட்டுதல்களையும் வழங்கத் தவறவில்லை.
அழைப்புப் பணியின் ஆரம்பம், தவ்ஹீதை எடுத்துரைப்பதோடு
அதற்கு எதிரான அத்தனை கொள்கை - கோட்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி மறுத்துரைக்கும்
விதத்திலும் அமைய வேண்டும் என்பதை திருக்கலிமாவின் ‘லா’ என்ற வசனப்பிரயோகம்
சுட்டிக்காட்டுவதை முன்னர் பார்த்தோம். மக்களெல்லாம் தவறான ஒரு நம்பிக்கையை சரி
கண்டு, அதில் உடன்பட்டு இருக்கும்
போது, அதற்கு நேர்முரணான எதிர்க்கருத்தை முன்வைத்து அழைப்புப் பணியை ஆரம்பிக்க
வேண்டும் என்பது அல்குர்ஆன் எமக்கு கற்றுத்
தருகின்ற பாடமாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் தியாக நபியென்றும், ஏகத்துவ இமாம் என்றும் ஏற்றிப் போற்றப்படுகின்ற
இப்றாஹிம் (அலை) அவர்களின் இஸ்லாமியப்
பிரச்சார வாழ்வை இதற்கான அழகிய முன்மாதிரியாக அல்குர்ஆன் அழகுற விபரிப்பதோடு, அவரின் தஃவா முறைமையை பின்பற்றும் படியும் எமக்கு
ஆணையிடுகின்றது. பார்க்க (4:125).
“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை
வணங்குவீர்களோ அதைவிட்டும் நாங்கள் விலகியவர்கள்.
உங்களை மறுக்கின்றோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும்
உங்களுக்கும் இடையே பகைமையும், வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது” என்று
கூறிய விஷயத்தில் இப்றாஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு
அழகிய முன்மாதிரி இருக்கிறது.” (60:4)
இப்றாஹீம் நபியின் அழைப்புப் பணி எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதற்கு மேற்குறிப்பிட்ட
வசனம் சிறந்த சான்றாகும். இணைவைப்பிலும், இன்னுமுண்டான பாவச் செயல்களிலும் உழன்றுகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு மத்தியில்,
இஸ்லாமிய அழைப்புப் பணியை
முன்வைக்க விரும்புகின்ற ஓர் அழைப்பாளன் எத்தகைய போக்கை கையாள வேண்டும் என்பதையும்
மேற்படிவசனம் தெளிவு படுத்துகிறது. அசத்தியத்தின் அருகிலும், தப்பான வழியிலும் நடைபயின்று கொண்டிருப்போரின் பிழையான
பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் விதத்திலும், உறவுகள் பகைத்தாலும், உலகமே எதிர்த்தாலும், இலாபங்கள் கை நழுவிப்போனாலும், எத்துனை இழப்புகளை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியுடனும்,
தெளிவுடனும் இருந்து கொண்டு
சத்தியத்தை மறைக்காது - மழுப்பாது, கூட்டாது - குறைக்காது
துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும். தான் சொல்லுகின்ற செய்தியை பிறர் புரிந்து கொள்கின்ற
வகையிலும், தான் செய்வது தவறு
தான் என்று அடுத்தவன் உணருகின்ற விதத்திலும் சத்தியமும் அசத்தியமும் மக்களுக்கு முன்
தெளிவாக வேறு பிரித்துக் காட்டப்படல் வேண்டும். இத்தகைய ஒளிவு மறைவற்ற அழைப்புப் பணிதான்
அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற இப்றாஹீம்
நபியின் அழகிய தஃவா முன்மாதிரியாகும்.
உறவுகள் பகைத்தாலும் உண்மை உணர்த்தப்பட வேண்டும்
என்ற நோக்கில் தந்தைக்கு உபதேசித்தமை (21:51-57), அதனால் வீட்டை விட்டும் துரத்தியடிக்கப்பட்டமை
(19:46), ஊராரின் எதிர்ப்பை பொருட்படுத்தாது சத்தியத்தை துணிவாக எடுத்துச்
சொன்னமை (21:66-67), அதனால் தீக்குண்டத்தில்
எறியப்பட்டமை (21:68), கொள்கையில் வளைந்து
கொடுக்காது உறுதியாக நின்றமை (60:4), இதனால் ஆட்சித் தலைவனை கூட எதிர்த்து விவாதம் புரிந்தமை
(2:258) போன்ற இப்றாஹீம் நபியின்
தஃவா வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தஃவாக் களத்தில் தடம்பதிக்க விரும்பும் அழைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய தற்துணிவை படம்பிடித்துக்
காட்டி நிற்கின்றன.
ஆனால் துரதிஷ்டம், எந்த நபியின் தஃவா
அணுகு முறையை முழு அகிலத்தாருக்குமான முன்மாதிரியாகவும், பின்பற்றத் தகுந்ததாகவும் அல்லாஹ் ஆக்கி வைத்தானோ,
அந்த அணுகு முறை இன்று உதாசீனம்
செய்யப்படுகின்றது. தங்களை இஸ்லாமிய ஜமாஅத்தின் முதுபெரும் தாஇகள் என்று தற்பெருமை
பேசுகின்ற சில அழைப்பாளர்களினாலேயே அந்த அழகிய
அணுகு முறை ‘அவசர குடுக்கைகள்,
முதிர்ச்சியற்றவர்கள்’ போன்ற சொல்லாடல்கள் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்றாஹீம் நபியின்
தஃவா முறைமையை அடியொட்டி பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்கள் பண்பாடற்றவர்கள், நளினம் தெரியாதவர்கள், காடையர்கள், வீதியில் திரிபவர்ள், கடும் போக்காளர்கள், மனிதனை மதிக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் வசை
மொழி பொழிந்து சத்தியத்தை அசத்தியமாக சித்தரித்துக் காட்டும் இருட்டடிப்பு முயற்சிகள்,
எழுத்து வடிவிலும்,
பேச்சு வடிவிலும் ஆங்காங்கே
அரங்கேற்றப்பட்டு வருவதானது, இன்றைய தஃவாக் களங்கள்
சத்தியத்திலிருந்து தடம்புரண்டு வருவதற்கான நிகழ்கால நிதர்சனங்களாகும்.
தஃவாவும் தக்வாவும்
அதிகார வீச்சுகளுக்கு அடிபணியாது, பண முதலைகளுக்கு முன் மயங்கி விடாது, பட்டம் - பதவிகளுக்கு விலை போகாது, இழப்புகளுக்காக இறங்கிப் போகாது, பசப்பு வார்த்தைகளைக் கேட்டு
சலணப்பட்டு விடாது நெஞ்சுரத்தோடு உண்மையை உலகறியச் செய்வதாயின் - அந்தப் பாதையில் இறுதி
மூச்சு வரை நிலைத்து நிற்பதாயின், அது குறுகிய உள்ளம்
படைத்த, இழப்புகளைத் தாங்கும்
வலிமையற்ற, விமர்சனக் கணைகளுக்கு முன் வீழ்ந்து போகின்ற சாமானிய
மனிதர்களால் சாதிக்க முடியாத புனிதப்பணியாகும்.
மாறாக, அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையும்,
அவனது அருளையும் திருப்தியையும்
மாத்திரம் எதிர்பார்க்கும் ஆன்மீக உணர்வும், உலகத்தை துச்சமாக மதிக்கும் மனப்பாங்கும் எவரிடம் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றதோ,
அத்தகைய ஈமானிய உள்ளம் படைத்த
உத்தமர்களால் மாத்திரம் தான் இந்த
தஃவா களத்தில் நீடித்து, நிலைத்து நிற்க முடியும்.
அல்லாஹ்வின் திருப்திக்காக அல்லாது மக்களை திருப்தி படுத்துவதற்காக செயலாற்றுவர்களாக அழைப்பாளர்கள் மாறும் போது சேற்றில் நட்டிய கம்பமாய்,
கொள்கை உறுதியிழந்து,
ஆட்டம் கண்டு, களத்தை விட்டே ஒதுங்கிவிடும் பரிதாப நிலையே தோற்றம்
பெறும். இது இன்றைய தஃவாக் களம் எமக்குணர்த்தி நிற்கும் அனுபவங்களாகும்.
அழைப்பாளர்கள் தங்களது அணிகலனாக
ஆக்கிக் கொள்ள வேண்டிய அடிப்படை ஆன்மீகப் பெறுமானத்தை நபிகளாரின் பின்வரும் நபி மொழி
தெளிவு படுத்திக் காட்டுகிறது.
“எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத்
தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால்
ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின்
திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்
பால் சாட்டிவிடுகிறான்.” - திர்மிதி
இஸ்லாமிய அழைப்பாளர்கள் தமது செயல்கள்
அனைத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே தேட வேண்டும். அவரது ஒவ்வொரு அடியும்
அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்காகக் கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின்
நேர்வழியில் செல்லும் போது சில
சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு
இலக்காக நேரிட்டாலும் சரியே! ஒரு ‘தாஈ’ தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில்
நிறுத்துப் பார்க்கிறான். அல்லாஹ்வின்
திருப்தியின் தட்டு கனமானால், அதை ஏற்று திருப்தியடைகிறான்.
தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறான். இவ்வாரே அவனது
நேர்வழியின் அளவு கோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஆனால், இன்றைய அழைப்புப்
பணியின் களநிலவரங்கள் அழைப்பாளர்களிடம் மேற் சொன்ன
பண்புகள் அருகிவருவதனை வௌ்ளிடை மலையாய் வெளிச்சம்
போட்டுக் காட்டி நிற்கின்றன. அல்லாஹ்வும் அவனது ரஸூலும் விரும்பும் ஒரு செய்தியை ஆதாரப்புர்வமாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கும் போதும், அல்லாஹ்வும் அவன் தூதரும் வெறுத்த ஒரு விடயத்தை சமூகத்திலிருந்து களையகற்றும்
போதும் ஏற்படும் மக்களின் எதிர்ப்பு அலை கண்டு இன்றைய
அழைப்பாளர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை
புறந்தள்ளிவிட்டு, மக்களின் விருப்பத்தை
புர்த்தி செய்யும் விதத்தில் புசி
மெழுகுவதைக் காண்கின்றோம். ஒற்றுமை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அசத்தியத்திற்கு துணை போவதைப்
பார்க்கின்றோம். தம் இயக்கத்தின்
கருத்துக்களுக்கும், கற்பனைக் கோட்டைகளுக்கும்
சத்தியம் சாவு மணியடிக்கின்ற போது “சமுதாய நல்லிணக்கம்”
என்ற புச்சாண்டி காட்டி சத்தியத்தை
குழிதோண்டிப் புதைப்பதைப் பார்க்கின்றோம்.
நம் தொழில், சொத்து, பணம், பட்டம், பதவி, கௌரவம், சுயநலன்கள் போன்றவற்றிற்கு பாதிப்புகள ஏற்படாத வரைக்கும்
அல்லாஹ்வை அஞ்சுகின்றோம். அவனது விருப்பத்தை நிறைவேற்றுகின்றோம். இவற்றுக்கு பாதிப்புகள்,
இழப்புகள் வரும் பட்சத்தில்
மனிதர்களுக்கு அஞ்சுகின்றோம். ஊருக்குப்
பயந்து, உறவுக்குப் பயந்து
அல்லாஹ் சொன்னவற்றை செய்யாது விட்டுவிடுகின்றோம். அவன் தடுத்தவற்றை செய்து விடுகின்றோம்.
அல்லாஹ்வின் திருப்தியை விட ஊர் - உலகத்தின் திருப்தியை
மேலாகக் கருதுகின்றோம். இது இறையச்சமா? அல்லது உலகச்சமா? அழைப்பாளர்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் விமர்சனத்தை விட அல்லாஹ்வின் திருப்தியை மேலாகக் கருதி,
களத்தில் தடம்பதித்து நடைபயில்வது
அல்லாஹ்வை அஞ்சிய மனிதர்களின் உயர் பண்பாக அல்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
“(அல்லாஹ்வுடைய விடயத்தில்) எவரது பழிச்சொல்லுக்கும்
அவர்கள் அஞ்சமாட்டார்கள்.” (5:54) என்றும், “அல்லாஹ்வை
தவிர வேறு யாருக்கும் அஞ்சமாட்டார்கள்” (9:18) என்றும் சிலாகித்துக் கூறுகின்றது.
ஆனால், அசத்தியத்திற்கு ஜால்ரா
அடித்து அதன் விசிறிகளுக்கு கூஜா பிடிக்கும் இன்றைய அழைப்பாளர்கள் சத்தியத்தை நெஞ்சு நிமிர்த்திச் சொல்வதில் தொடை நடுங்கிகளாக இருப்பதை அவதானிக்க
முடிகிறது. தங்களது பத்தாம் பசலித்தனத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காய் இவர்களால் முன்வைக்கப்படும் வறட்டு வாதங்களை சமுதாய
மன்றத்தில் போட்டுடைக்க வேண்டியுமுள்ளது.
விட்டுப்பிடிக்க சற்று வளைந்து கொடுப்போம்!
“அசத்தியத்தில் மூழ்கிப்போயுள்ள ஒரு சமுதாயத்தில் திடீர் என்று சத்தியத்தை
சொல்வது அறிவீனம். அவர்களுக்கு மெதுமெதுவாக
போதித்து, உள்ளத்தைக் கவர்ந்து, களத்தை உருவாக்கி, பின்னர்தான் உண்மையை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல்
பக்குவமாய் சொல்ல வேண்டும். இது தான் தஃவா உஸூல்” என்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்களின் இப்போக்கு மார்க்கத்தின் பெயரால் அசத்தியத்தோடு சமரசம் செய்யும்
பச்சை அயோக்கியத்தனம் என்பதை ஏனோ இவர்கள் புரிவதில்லை. இவர்களுக்கு சத்தியம் வாழ வேண்டும் என்பதை விட தம் அமைப்பின்
அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே பெரிதாகத்
தோன்றுகிறது. எனவே தான், இவர்கள் நபிவழிக்கு முரணான கத்தம், பாதிஹா, கூட்டு துஆ, 23 ரக்அத் தராவீஹ், மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை தடுக்கத் தயங்குவதோடு,
அதற்கு சார்பாக வக்காலத்தும் வாங்குகின்றனர்.
இவர்களின் இத்தகைய மார்க்கத்தை அடகு வைக்கும் அற்பத்தனத்தை அல்குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கிறது.
“அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால்
‘இது அல்லாத வேறு குர்ஆனைக்
கொண்டு வருவீராக! இதை மாற்றியமைப்பீராக!’ என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். ‘நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு
அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத்தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை.
என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால், மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’ என
(முஹம்மதே) கூறுவீராக!” (10:15)
“(முஹம்மதே!) நாம் உமக்கு தூதுச் செய்தியாக
அறிவிக்காததை நம்மீது நீர் இட்டுக்கட்ட
வேண்டும் என்று உம்மை திசைதிருப்ப முயன்றனர். (அப்படிச்
செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மதே) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால், அவர்களை
நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர். அவ்வாறு நீர் செய்திருந்தால், வாழும்
போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை
சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம்
உமக்காக எந்த உதவியாளரையும் காணமாட்டீர்.” (17:73-75)
மேற்படி வசனங்கள் எமக்கு எதை உணர்த்துகின்றன? “தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது” (39:3). அல்லாஹ்வுக்குச் சொந்தமான
மார்க்கத்தில் நபிக்குக் கூட ஒரு
விடயத்தை விட்டுக் கொடுப்பதற்கோ, வளைந்து கொடுப்பதற்கோ,
சமரசம் செய்வதற்கோ எள்ளின்
முனையளவு கூட உரிமையில்லை எனும் போது எமது நிலை எம்மாத்திரம்? தனது சொந்த விடயங்களில் ஊசி போன்ற அற்பப் பொருளைக்
கூட அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்க மனம்வராத அற்பர்கள், அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான மார்க்கத்தில் ஏதோ இவர்கள் தான் ஏகபோக உரிமையாளர்கள் போன்று பெருமனதோடு விட்டுக்கொடுப்பது,
இவர்களது இடத்திற்கேற்ப வேஷம் போடும் பச்சோந்தித்தனத்திற்கு
தக்க சான்றாகும். மனிதர்களுக்கு அஞ்சி தனது
போக்கை மாற்றாது, அல்லாஹ்வை அஞ்சி தனது
நடத்தையை மாற்ற வேண்டியது மறுமையை முன்னிறுத்தி வாழும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
உள்ளத்தைப் பக்குவப்படுத்தி உண்மையை உணர வைப்பது என்பது அல்லாஹ்வின் பணியாகும்.
ஏனெனில், உள்ளங்களின் அதிபதி
அல்லாஹ் மட்டுமே. அதனால் தான் நபிகளாரின் பெரிய தந்தையான அபுதாலிபின் உள்ளத்தை கூட
எம்மைவிட மென்மை சுபாவமும், கனிவான பண்பும்,
இதமான பேச்சாற்றலும் கொண்ட
நபிகளாரால் கூட வசீகரிக்க முடியவில்லை. எனவே, கருத்தை காதில் சொல்வது தான் அழைப்பாளர்களின் பணியாக இருக்க வேண்டுமே தவிர கல்பில் (உள்ளத்தில்)
போடும் அல்லாஹ்வின் அதிகாரத்தை அழைப்பாளர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில்,
“(முஹம்மதே!)
நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.” (12:103)
நளினமே நன்மை பயக்கும்
“சொல்லுகின்ற இஸ்லாம் சத்தியமானாலும், அதில் நளினம் கடைபிடிக்கப்படல் வேண்டும். மாற்றுக் கருத்துடையோரின் மனம் நோகாத
படி சற்று ‘ஹிக்மத்’ தான முறையில் சொல்ல வேண்டும். அதற்காக கொஞ்சம் விட்டுக்
கொடுப்பது தவறில்லை.”
இதுவும் தஃவாக்களத்தில் அடிக்கடி கையாளப்படும் வார்த்தை ஜாலமாகும். சத்திய இஸ்லாத்தின் தேனிலும் இனிய,
எளிய போதனைகளை உள்ளம் கொள்ளுமளவிற்கு
எடுத்துரைத்து, அது தடுத்தவற்றை தாட்சண்யமின்றி
பிழை என்று கூறும் போதுதான் மார்க்கத்தை தாரைவார்க்கும் ஒரு சாராரிடமிருந்து மேற்சொன்ன விமர்சனங்கள் வீறுகொண்டு எழுகின்றன. இதற்கு ஆதாரமாக மூஸா
(அலை), ஹாரூன் (அலை) இருவருக்கும்
அல்லாஹ் கூறிய கூற்றை சான்றாகக் கொண்டு வருகின்றனர்.
“(நீங்கள்) இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்!
அவன் வரம்பு மீறி விட்டான். அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள். அவன்
படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்று கூறினான்.) (20:43-44)
மேற்குறிப்பிட்ட வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, வழிகேட்டில் வழுக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் மக்களை
நோக்கி நாம் விமர்சிக்கும் போது,
‘அப்படி விமர்சிப்பது குர்ஆனுக்கும், ஸூன்னாவுக்கும் முரணானது. நபிகளார் எங்கு மேடை போட்டு
விமர்சித்திருக்கிறார்கள்?’ போன்ற ஆய்வறிவற்ற, சிறுபிள்ளைத்தனமான
உளறல்களை உமிழ்கின்றனர். ஆனால், அல்குர்ஆனை ஆராய்கின்ற போது இவர்களது வாதம் தப்பானது என்பது புலனாகின்றது.
பிர்அவ்னிடம் சென்று மென்மையான
சொல்லை பேசுமாறு கட்டளையிடப்பட்டது உண்மைதான். தஃவாவின் போது மென்மை கடைபிடிக்கப்படல்
வேண்டும் என்பதையும் நாம் மறுக்க வில்லை. ஆனால், மென்மை என்ற போர்வையில் சத்தியத்தை சொல்லாமல் மறைப்பதையும்,
அசத்தியத்தை தடுக்காமல் இருப்பதையுமே
நாம் தவறு என்கிறோம். மூஸா (அலை) மற்றும் ஹாரூன்
(அலை) இருவரும் மென்மையை கடைபிடித்து, இறைவன் சொல்லுமாறு பணித்த செய்தியை சொல்லாமல் மறைத்ததாகவோ, சத்தியத்தை விட்டுக்கொடுத்ததாகவோ, பாதிலோடு கைகோர்த்ததாகவோ ஓர் ஆதாரத்தைக் கூட அல்குர்ஆனில் காண முடியவில்லை. ‘ஹிக்மத்’ என்ற பெயரில் இடத்துக்கு ஏற்றாற் போல் நடத்தையையும்,
கொள்கையையும் மாற்றியதாகவோ,
ஒரு தீமையை அங்கீகரித்ததாகவோ,
ஒரு பித்அத்தை செய்ததாகவோ
ஒரு சான்றைக் கூட மறுமை நாள் வரைக்கும் இவர்களால் எடுத்துக்காட்ட முடியாது. உண்மையில் ஹிக்மத்,
மென்மை, நளினம் என்பதன் அர்த்தம்: நாம் யாருக்கு அழைப்பு விடுக்கின்றோமோ அவரது
அறிவுத்தரம், குண இயல்புகள்,
போன்றவற்றை கருத்திற்கொண்டு
அதற்கேற்றாற் போல் சொல்லும் செய்தியை மறைக்காது, மழுப்பாது பட்டவர்த்தனமாய் சொல்வதைக் குறிக்கும். மூஸா (அலை),
ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும்
பிர்அவ்னிடம் அனுப்பிய போது,
அவர்கள் தங்களது கொள்கையை மறைத்து, மழுப்பி, நாம் சொல்வது சரியா? தப்பா? என்பதை கேட்போர் புரிந்து கொள்ளாத விதத்தில் சொல்லவில்லை. மாற்றமாக
‘நான் தான் மிக உயர்ந்த ரப்பு’ என்று கொக்கரித்த கொடுங்கோலனின் சந்நிதானத்தில்
நெஞ்சு நிமிர்த்தி “நீ ரப்பு கிடையாது. நீ பயணிக்கும் பாதை வழிகேடானது.
உன் வழியில் நாம் வர மாட்டோம். உன்னைப் படைத்த ரப்பின் வழிக்கு நீ வந்து விடு!”
என்று சொல்ல வந்த செய்தியை
கிஞ்சிற்றும் மறைக்காது துணிச்சலாக எடுத்துச் சொன்னதைத் திருமறைக் குர்ஆன் அழகுற விபரித்துக் காட்டுகின்றது.
“இருவரும் அவனிடம் சென்று ‘நாங்கள்
உனது இறைவனின் தூதர்கள். எனவே, இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி
விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம்.
நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு
வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’
என்று கூறுங்கள்!” ‘மூஸாவே!
உங்களிருவரின் இறைவன் யார்?’ என்று அவன் கேட்டான். ‘ஒவ்வொரு
பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்’ என்று
அவர் கூறினார்.” (20:47-50) மேலும் பார்க்க (79:17-26)
விமர்சிப்பது தவறா?
தர்கா வழிபாடு என்றும், சந்தனக்கூடு என்றும்,
கொடி மரம் என்றும்,
தட்டு - தகடு என்றும் ஷிர்க்கில்
மூழ்கிப் போயுள்ளவர்களையும், பாங்குக்கு முன் ஸலவாத்து,
மிஃராஜ் - பராஅத் நோன்பு,
தஸ்பீஹ் தொழுகை என்று பித்அத்தில்
சங்கமித்தவர்களையும், வரதட்சணை,
வட்டி, மது என்று பகிரங்கமாக பெரும் பாவங்களில் ஈடுபடுவோரையும்,
ஜின் வசிய்யத்து, மந்திரம், தந்திரம் என்ற போர்வையில் சமூகத்தை ஏய்த்துப் பிழைப்போரையும்,
மத்ஹபு மாயையில் சிக்குண்டு
சமூகத்தையும், சன்மார்க்கத்தையும்
துண்டாடும் போலி உலமாக்களையும், ஆட்சி - அதிகாரம்,
சமூக ஒற்றுமை என்ற கோஷங்களுக்குப்
பின் மறைந்து கொண்டு குர்ஆன் - ஸூன்னாவுக்கு எதிரானக் கருத்துக்களை விதைத்து,
குராபிகளுக்கு கூஜா தூக்கும்
ஜமாஅத்துக்களையும் நாம் விமர்சிக்கும் போது, இப்படியெல்லாம் பண்பாடற்று விமர்சிப்பது தவறு: இது
கேட்போர் மனதை புண்படுத்துவதோடு, தொடர்ந்தும் சத்தியத்தை
கேட்காமல் இருப்பதற்கே வழிவகுக்கும் என்று கூறி, மேற்சொன்ன குற்றங்களை நியாயப்படுத்தும் இயக்கங்களையும்,
அதன் தாஈக்களையும்,
அக்கருத்தால் கவரப்பட்டவர்களையும்
தஃவாக்களத்தில் பரவலாகக் காண முடிகிறது.
இங்கு யாரெல்லாம் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது கூடாது என்ற நிலைப்பாட்டில்
உள்ளார்களோ அவர்களே தம் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் பலரின் பெயர்களை பச்சையாய் குறிப்பிட்டு விமர்சிக்கத் தான் செய்கிறார்கள்.
ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரின்,
ஜோர்ஜ் புஸ், டோனி பிளேயர், ஹூஸ்னி முபாரக், முஅம்மர் கடாபி, அப்துல்லாஹ்… இன்னும் இது போன்ற பலரை விமர்சிக்கக் கூடாது என்பவர்கள்
கடுமையாகவும், காரமாகவும் விமர்சிப்பதை
அன்றாடம் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்லப் போனால், யாரை இவர்கள் இலக்கு
வைத்து இவ்விமர்சனத்தை புரிகிறார்களோ அந்தப் பீ.ஜே யின் பெயரை குறிப்பிட்டே தமது பத்திரிகைகளில்
இவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள். இவர்களின் இவ்விமர்சனம் நியாயபூர்வமானது கிடையாது
என்பதற்கு இவர்களே தக்க சான்றாகவும் உள்ளனர்.
விமர்சனம் என்று வருகின்ற போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள்
உள்ளன. முதலில் விமர்சனத்தில் எது அனுமதிக்கப் பட்டது? எது தடை செய்யப்பட்டது? என்பதனை ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்துகொள்ளுதல்
வேண்டும்.
விமர்சனம் இருவகைப்படும்
1. தனி மனிதன் சமூகத்தை பாதிக்காத விதத்தில் புரியும்
தனிப்பட்ட தவறுகள் சம்பந்தப்பட்டவை.
2. தனி மனிதன் சமூகத்தை பாதிக்கும் விதத்தில் புரியும்
தவறுகள் சம்பந்தப்பட்டவை.
இதில் சமூகத்தை எவ்விதத்திலும் பாதிக்காத, தவறிழைக்கும் மனிதனும் அல்லாஹ்வும் மாத்திரம் சம்பந்தப்பட்ட
தவறுகள், பாவங்களைப் பொறுத்த
மட்டில் அவற்றை பெயர் குறிப்பிட்டு, எழுத்து மூலமோ, பேச்சு மூலமோ விமர்சிப்பது
கூடாது. கூடாது என்பதை விட அவற்றை நாளு பேருக்கு தெரியாதவாறு மறைக்க வேண்டும் என்று
மார்க்கம் சொல்கிறது.
ஆனால், ஒரு தனிமனிதன் விடக்கூடிய
தவறு அதிலும் குறிப்பாக மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயத்தில் ஒருவர் விடும் தவறு ஒரு
சமூகத்தை பாதிக்கும் விதமாய் அமையுமாயின், அத்தவறை தயங்காது தட்டிக் கேட்பதும், சுட்டிக் காட்டுவதும் அது குறித்து மக்களை விழிப்புறச் செய்யும் விதமாய் விமர்சிப்பதும்
ஒரு முஸ்லிமின் கடமை. கடமை என்பதை விட அது தான் மார்க்கம்.
ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,
அதை மக்கள் சரிகண்டு அதன்
வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால்,
அக்கொள்கையின் விபரீதத்தை
மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க
முடியும்?
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை
ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு
எம்மை பணிக்கின்றது. இதற்கான சான்றுகள் இதோ:
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம்
வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும்
விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து
கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’
என்று திருப்பிக்
கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு
படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ்
பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில்
கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’
என்றார். உடனே
அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான
வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார்.
‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க
வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள். ‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு,
இது அல்லாஹ்விடமிருந்து வந்தது
எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச்
சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான். இன்ஜீல் என்பது ஈஸா (அலை)
அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மக்களுக்குப்
போதித்ததாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப்
பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறா?
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது,
தவ்ராத்தைக் கொண்டு வந்து,
அதை நிரூபியுங்கள் (3:93)
என்று நபியவர்களை சவால் விடச்
செய்தது பிழையா? வேதத்திற்கு தவறான
விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவற வில்லை (3:78). நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு
அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146). வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை
அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி
(ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள்,
யூத மார்க்கத்தவராக இருந்தார்கள்
என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்பட வில்லையே! அவருக்குப் பின்னர் தானே தவ்ராத்
அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி,
அவர்களை இறைவன் வாயடைக்கச்
செய்தான்.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை
மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.
பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?
ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது, தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும்,
இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது
என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உசுப்பும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல
வேண்டும். இது எப்போது சாத்தியம்? பெயர் குறிப்பிட்டு
விமர்சிக்கும் போதே. இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120),
இஸ்ரவேலர்கள் (2:79),
மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), ஏன் ரஸூலுல்லாஹ் (80:1-10, 3:128,
66:1), கூட தவறிழைக்கும் ஒவ்வொரு
கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப் பட்டு விமர்சிக்கப்பட்டது இவர்களுக்கு தெரியாதா?
தவறுகளை விமர்சிக்கும் போது
அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத்
தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71),
ஸமூது கூட்டம் (27:47),
யானைப்படை (105:1),
யஃஜூஜ் மஃஜூஜ் (18:94),
அபூ லஹப் (111:1-3),
இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த
அடிப்படையில் தான்.
இது போல், இன்னும் அனேக இடங்களில்
வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான்.
பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின்
குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா?
ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட
அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத்
தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட
நபிகளார், முகம் சிவந்தவராய்
மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும்
ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின்
வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு
நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?
காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு
முரணா?
நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை
விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட, காரத்தை விட அல்லாஹ்
தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும்
காரமும் மிக்கதாக உள்ளது.
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய
உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு
விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.”
(7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு
உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள்
உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின்
மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி
கெட்டவர்கள்.” (7:179)
‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக்
கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது “தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச்
சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும்
கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்.
அல் குர்ஆன், அஸ் ஸூன்னா ஒன்றை
சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை
விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு
வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.”
(74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம்.நாங்கள்
விமர்சித்தது தவறு என்றால், எங்கள் வார்த்தை கடுமையானது
என்றால், இவ்வாறு விமர்சிப்பது
பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச்
செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று,
அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத்
தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும்
நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும், ‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்:
நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன் ஹதீஸூக்கு
எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை
ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை,
தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல்
போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் ரஸூலும்
நளினம் தெரியாமல், மென்மை புரியாமல்
அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.
மார்க்கத்தில் கூட்டல் குறைத்தலுக்கு இடமில்லை
இஸ்லாமிய அழைப்புப் பணி புரிகிறோம் என்ற போர்வையில் தத்தமது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டு சுய
விருப்பு வெறுப்புகளை மார்க்கத்தின் பெயரால்
அரங்கேற்றும் பெரும் அவலம் இன்று எம் கண் முன்னே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுக்குச்
சொந்தமான மார்க்கத்தில் அவரவர் இஷ்டம் போல் கூட்டல்
- குறைத்தல்களை செய்து யுத - கிறிஸ்தவர்களின் வழியை பின்பற்றிச் செல்லும் பேரவல நிலை தோற்றம்
பெற்றுள்ளது. அல்குர்ஆன், வேதவரிகளோடு விளையாடும் இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறது.
“சில சொற்களை இவர் (முஹம்மத்) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் இவரை வலது
கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி
நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது
(இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.” (69:44-48)
இவ்வாறு மார்க்கத்தில் தமது சுய
விருப்புகளை இரண்டறக் கலந்துவிட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்தையும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
“மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய
பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழி யையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும்
சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய) வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு
(தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத்
தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.” (2:159-160)
தெளிவாக சொல்வதே எமது கடமை
அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புகளுக்கு கட்டுப்பட்டு, அவனது மார்க்கத்தை அதன் தூய வடிவத்தில் மக்களுக்கு எடுத்துச்
சொல்வதைத் தவிர வேறு ஒரு பொறுப்பை அழைப்பாளர்கள் மீது அல்லாஹ் சுமத்தவில்லை. அவை தமது சுயநலன்களுக்கு
எதிராக அமைந்தாலும் சரியே! கேட்பவர்களின் மனதை முள்ளாகத்
தைத்தாலும், உலகத்தின் உறவுகள்
அருந்து போனாலும், உலகமே அணிதிரண்டு
வந்தாலும் சத்தியத்தை சொல்வதில் சலணம் வரக்கூடாது. விளைவுகளை கருத்திற்கொள்ளாது அல்லாஹ்வின்
விருப்பத்தை மட்டும் நிறைவேற்றும் விதமாக உள்ளதை உள்ளபடி உரைக்கின்ற உளத்துணிவை இன்றைய
அழைப்பாளர்களிடம் தஃவாக் களம்
எதிர் பார்க்கிறது. இது, அல்லாஹ்வை அஞ்சிய உத்தமர்களின் பண்பு என அருள்மறை அல்குர்ஆன் விதந்துரைக்கின்றது.
“உமக்கு கட்டளையிடப்பட்டதைத் தயவு
தாட்ஷண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணைகற்பிப்போரை புறக்கணிப்பீராக!” (15:94-95)
“அல்லாஹ்வை அஞ்சட்டும்! நேர்மையான சொல்லையே
அவர்கள்
கூறட்டும்!” (4:9)
“தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு
அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால், அவனது
தூதை நீர் எடுத்துச் சொன்னவராக
மாட்டீர்கள்!” (5:67)
“தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர
தூதர்களுக்கு
வேறு எதுவும் உள்ளதா?” (16:35)
எனவே, அழைப்புப் பணி என்றால்
என்ன? அதன் அணுகு முறைகள் யாவை?
என்பவற்றை சரிவர விளங்கி,
அழைப்புப் பணி புரிவதற்கு
நம்மனைவருக்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

Post a Comment