முப்தியை காப்பாற்றப் போய், அறிக்கையில் சறுக்கும் அஷ்ஷெய்க் முபாரக் (மதனி.)


கடந்த நோன்புப் பெருநாள் பிறை குழப்பம் தொடர்பில் பிறையை குழப்பிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் அதன் செயலாளர் விடுத்த ஒரு அறிக்கை நேற்று மாலை ஜ. உ வின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தொடர்பான சில முக்கிய விபரங்களை இலங்கை முஸ்லிம்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது தொடர்பான இந்த ஆக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.
முபாரக் மவ்லவியின் சுயவிபரக் கோவை.
(உலமா சபையின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது).
பெற்றுள்ள பட்டங்கள் : கபூரி, மதனி.
இவர் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் மதீனா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் BA பட்டப்படிப்பையும் முடித்திருக்கின்றார்.
இவர் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் ஆவார்.
தற்போது இவர் வகிக்கும் பதவிகள் :
  • இமாம் பின்பாஸ் பெண்கள் அரபிக் கல்லூரின் தலைவர்.
  • கபூரிய்யா ஆண்கள் அரபிக் கல்லூரியின் (Director) இயக்குனர்.
  • அமானா வங்கியின் ஷரீஆ ஆலோசகர்.
கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு முன்பதாக இவற்றை நாம் குறிப்பிட் காரணம் என்னவென்றால் இவர் தவ்ஹீத் பெயரில் இயக்கப்படும் பெண்கள் மற்றும் ஆண்கள் கல்லூரிகளில் இயக்குனராக, தலைவராக இருக்கின்றார்.
இதே நேரம் அரபிப் பெயரில் இயங்கும் வட்டிக் கடையான அமானா வின் ஷரீஆ ஆலோசகராகவும் இருக்கின்றார்.
இவரை தவ்ஹீத்வாதி என்று நம்பிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் இவரின் தகைமையை மனதில் பதித்துக் கொண்டு ஆக்கத்தை படிக்கும் போது இவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள இவருடைய சுய விபரங்கள் உதவியாக இருக்கும் என்பதற்காகத் தான் இதனையும் இணைத்துள்ளோம்.
மார்க்கத்திற்காக அறிக்கை விட வேண்டிய இவர்கள் தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுவதின் மர்மம் என்ன? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அஷ்ஷெய்க் முபாரக் மவ்லவியின் அறிக்கைக்கு பதில்.
அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் ஜ. உலமா சபை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக படிப்பதற்கு முன்பு இந்த அறிக்கையில் பிறை விஷயத்தில் உலமா சபை செய்த தவறுக்கு ஒரு சிறு மண்ணிப்பாவது கேட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் இதனை படிக்க ஆரம்பித்தோம்.
அறிக்கை விட்டு தலைவரை காப்பாற்றத் துடிக்கும் நிர்வாகம்!
ஆனால் இவர்களுக்கு மார்க்க விஷயத்தை விட உலமா சபை தலைவரின் தலையை காப்பாற்றுவதுதான் பெரிய பொறுப்பாக இவர்கள் நினைத்துள்ளார்கள் என்பது அறிக்கையை முழுமையாக படித்த பின்னர் தான் விளங்க கிடைத்தது.
ஆம் பிறை விஷயத்தில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவும் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களும் விட்ட பிழையை சுட்டிக் காட்டி அதற்கு நாட்டு மக்களிடம் மண்ணிப்புக் கேட்பதை விட எப்படியாவது தலைவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசை, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை போர் என்பதை பொது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது நாம் கடிதத்தின் கருத்தை ஆராய்வோம்.
நாங்கள் 29 என்பது சரி. நீங்கள் 29 அல்லது 30 ?
ஜ. உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெக் முபாரக் (மதனி – கபூரி) அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முதல் பத்தி இவ்வாறு அமைந்துள்ளது.
“கடந்த வாரம் உலக முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடினர். அவ்வாறே நம்நாட்டு முஸ்லிம்களும் கொண்டாடினர். ஷவ்வால் பிறை சம்பந்தமாக எழுந்த தெளிவற்ற நிலைமை காரணமாக சிலர் 29 ஆம் நோன்போடு ரமழானை முடித்துக்கொண்ட அதேவேளை நாட்டு மக்கள் முப்பதாக ரமழானை நிறைவுசெய்தனர்.”
அறிக்கையின் முதல் பத்தியில் “சிலர் 29 ஆம் நோன்போடு பெருநாள் கொண்டாடினார்கள்” என்று சொல்கின்றார். முதலில் இது தவறான கருத்தாகும் “சிலர்” என்று அவர் சொன்ன இடத்தில் “பலர்” என்று இடம்பெற வேண்டும். காரணம் கடந்த வியாழக் கிழமை இலங்கையின் பெரும்பாலான முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடினார்கள்.
நீங்கள் எந்தக் குழு? சிலரா? பலரா?
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக் குழு பெரிய பள்ளியில் கூடிய (07.08.2013) புதன் கிழமை அன்று அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) அவர்கள் பிறைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. (இதனை அவர் மறுத்தால் நாம் நிரூபிப்போம்). இவர் கலந்து கொள்ளாத அந்தக் கூட்டத்தில் வைத்து என்ன நடந்தது என்ற முழுமையான தகவல் கண்டிப்பாக இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அடுத்த நாள் நோன்பு பிடித்த “பலரில்” அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) அவர்கள் அடங்கினார்களா என்பதுதான் நமது கேள்வியாகும்.
நாம் அறிந்த வகையில் நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் உலமா சபை பிறையை மறுத்து நோன்பு நோற்க வேண்டும் என்று அறிவித்த வியாழன் அன்று அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் பெருநாள் கொண்டாடினார்கள் என்பது பரவலாக பேசப்படும் செய்தியாகிவிட்டது.
 ஆகவே முபாரக் மவ்லவி அவர்கள் (அவர்களின் பார்வையில்) வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடிய “சிலரில்” உள்ளவரா? அல்லது வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடிய (அவர்களின் பார்வையில்) “பலரில்” உள்ளவரா? என்பதை அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுவது குற்றமல்ல.
அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அடுத்த செய்தியை கீழே தந்துள்ளோம்.
“இதனைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்துவதைப் பார்த்து முஸ்லிம் சமூகம் வெட்கிக் குனிய வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களில் வழிகாட்டும் ஒரு ஸ்தாபனமான உலமா சபையை உரிய பின்னணிகளை புரியாத ஒருசிலர் அச்சபை கலைக்கப்பட வேண்டும், தலைமை மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுப்பதும் நோட்டிஸ் அடிப்பதும் வெப்தளங்களில் எழுதுவதுமானது மேலான முஸ்லிம் சமூகத்திற்கு இழுக்கையே கொண்டுவரும் என்பதையிட்டு அவர்கள் கவனம் செலுத்தாதது ஆச்சரியமே.
பெருநாள் கழித்து மறுநாள் முதல் எழுதப்படும் யாவும் எம்மை ஆரோக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்ல மாட்டாது. மாறாக முஸ்லிம் உம்மாவை அதளபாதாளத்தில் போட்டுவிடும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.
உலமா சபைக்கென ஒரு யாப்பு உண்டு. அதன் பிரகாரமே தெரிவும் மற்ற கருமங்களும் நடைபெறுமேயன்றி எவருடைய முன்மொழிவுகளும் கணக்கெடுக்கப்பட மாட்டாது. எனவே உலமாக்களை மதிப்போர் அவர்களுடன் மரியாதையாக நடக்கவும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.”
………………..
ஆம் பிறை விஷயத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் எடுத்த தவறான முடிவுக்காக ரிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும் என்றும், அவருக்குப் பதிலாக யூசுப் முப்தி தலைவராக வருவதற்கு தகுதியானவர் என்றும் ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் (?) ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இலங்கை பிறை குழப்பம் தொடர்பாக தான் எழுதிய ஆக்கம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹஜ்ஜுல் அக்பரின் கட்டுரைக்கு மறுப்பாகத் தான் குறித்த அறிக்கையை அஷ்ஷெய்க் முபாரக் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதுதான் அறிக்கையின் சுருக்கம்.
ஆனால் இதில் நாம் தெரிய வேண்டிய முக்கிய விபரம் என்னவென்றால், ஒருவர் செய்யும் தவறுகளைப் பொருத்து அவரை பதவியில் தொடர்ந்து இருக்கும் படியும், பதிவி விலகுமாறும் கோரிக்கை வைக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
அந்த வகையில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெயக் ரிஸ்வி முப்தியை ஹஜ்ஜுல் அக்பர் மாத்திரம் பதவி விலகும்படி கோரிக்கை வைக்கவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் இதனைத் தான் விரும்புகின்றார்கள். நிலைமை இப்படியிருக்கும் போது அதனை தெளிவாக தெரிவிப்பதை யாரும் தடுக்க முடியாது.
ஆனால் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் ஜ. உ வின் தற்போதைய தலைவரை பதவி விலகும்படி வைத்த கோரிக்கை சரியாக இருந்தாலும், அதற்கு பதிலாக “யூசுப் முப்தி” தகுதியானவர் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
ஹஜ்ஜுல் அக்பரை சீறும் நீங்கள் ரிஸ்வி முப்தியை சீறாதது ஏனோ?
கிண்ணியாவில் தெளிவாக தென்பட்ட பிறையை மறுத்து முழு கிண்ணியா வாழ் மக்களையும் பொய்யர்களாக்கிய ஜ. உ வின் தலைவர் ரிஸ்வி முப்தியை பதவி விலகி வேறு ஒருவரை நியமிக்குமாறு கருத்துத் தெரிவித்த ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக இவ்வளவு காட்டமாக சீறும் அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) அவர்கள் பிறை விஷயத்தில் ரிஸ்வி முப்தி சொன்ன பொய்களுக்கு எதிராக ஏன் சீறவில்லை?
கிண்ணாயாவை சேர்ந்த அனைத்து பொது மக்களையும் பொய்யர்களாக்கி, தெளிவாக கண்ட தலைப் பிறையை மறுத்து, தனது வீம்புப் பிடிவாதத்திற்காக மார்க்கத்தில் விளையாடி, தான் செய்தது சரி என்று நிரூபிப்பதற்காக பொய்க்கு மேல் பொய் பேசிய ரிஸ்வி முப்தியை யாராவது விமர்சித்தால் அதற்கு எதிராக அறிக்கை விடும் முபாரக் மவ்லவி போன்றவர்கள் உண்மையில் நியாயவான்களாக இருந்தால் முதலில்ரிஸ்வி முப்திக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிந்திருக்க வேண்டும்.
தலைவரை கண்டித்துத் திருத்த வேண்டிய செயலாளர் தலைவருக்கு ஜால்ரா போடும் அடிமையாக மாறியிருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
கிண்ணியா உலமா சபையை அ.இ.ஜ. உலமா சந்திப்பது ஏன்?
“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்தவரை பிறை விடயமாக தனது கிண்ணியாக் கிளையை இவ்வாரம் சந்திக்க இருக்கிறது. எனவே பொறுமையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ளுமாறும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புறச் சக்ததிகளுக்கு பாதைவிடாதிருக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.”
என்று தனது அறிக்கையை முபாரக் மவ்லவி முடித்துள்ளார்.
பிறை விஷயத்தில் கண்ணால் கண்ட சாட்சியத்தில் அடிப்படையில் தலைமைக்கு மாற்றமாக (மார்க்க அடிப்படையில்) வியாழக்கிழமை பெருநாள் என்று முடிவெடுத்த கிண்ணியா உலமா சபை சகோதரர்களை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நிர்வாகம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கின்றது. என்பது உண்மை.
ஆனால் இப்போது எதுவும் உங்களால் செய்ய முடியாது. வெள்ளம் தலைக்கு மேல் தலைப்பாகையை கழற்கிக் கொண்டு சென்று விட்டது.
ஆம் நீங்கள் அனைவரும் எப்படிப்பட்டவர்கள் என்பது கிண்ணியா ஜ. உலமா சபையினருக்கும் ஊர் வாசிகளுக்கும் நன்றாகவே புரிந்து விட்டது. இனியும் அவர்கள் உங்கள் பசப்பு வார்த்தைகளை நம்பத் தயாரில்லை என்பதை நாம் அவர்களை சந்தித்த வேலையில் அறியக் கிடைத்தது.
நீங்கள் சொல்வீர்கள் என்பதற்காக கொண்டாடிய பெருநாளை அவர்கள் மறுக்கவும் மாட்டார்கள், மறுக்கவும் முடியாது. அல்ஹம்துலில்லாஹ்.
ரிஸ்வி முப்தியை பதில் தயாரிக்க சொல்லுங்கள்.
பிறை விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக மக்கள் மயப்படுத்தப்படும். இன்ஷா அல்லாஹ். குறிப்பாக உலமா சபைக்கும் தனது கிண்ணியா கிளைக்கும் மத்தியில் இடம் பெரும் பேச்சுவார்த்தையில் பிறை தென்பட்ட அன்று உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியும் கிண்ணியா உலமா சபையின் முன்னால் தலைவர் நஸார் மவ்லவிக்கும் மத்தியில் நடந்த ரகசிய (செல்போன்) மஷுரா தொடர்பாகவும் கண்டிப்பாக பல கேள்விகளை கிண்ணியா சகோதரர்கள் எழுப்பக் காத்திருக்கின்றார்கள்.
குறித்த கேள்விக்கு இப்போதே ரிஸ்வி முப்தியை பதில் தயாரித்துக் கொள்ள சொல்லிவிடுங்கள்.
மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.
இறுதியாக அஷ்ஷெய்க் முபாரக் மவ்லவி அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான் “பொது மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல” நீங்கள் நினைத்ததை சொல்லிச் செல்வதற்கு இவ்வளவு காலமும் உலமா சபையையும், முப்தியையும் கண்களை மூடிக்கொண்டு நம்பிய நமது சமுதாயம் இப்போது விளி்த்து விட்டது.
இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது.
உங்கள் அறிக்கைகளினால் எந்தவொரு மாற்றமும் இனிமேல் நிகழாது இன்ஷா அல்லாஹ். காரணம் பொய்யர்கள் என்றைக்காவது வெளிப்பட்டுத் தான் ஆக வேண்டும். அல்லாஹ் பொய்யர்களை வெளிப்படுத்தியே தீருவான். அந்த அடிப்படையில் தான் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் வண்டவாலம் தற்போது தண்டவாலத்தில் ஏறியுள்ளது.
விழுந்த மரியாதையை தூக்கி நிறுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளை இனியும் மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள் என்தை மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள் ஆலிம்சா அவர்களே!
Share this article :

+ comments + 1 comments

August 17, 2013 at 11:09 AM

RASMIN iwar periya aal enru nenappu
Kalla moodhevi,
Makkalai emetruwadhu ewano theriyadhu?
koodiya seekkiram ellorukkum wilangum.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger