பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டில் சுமார் 6 கோடி மக்கள் வாழ்கின்றனர். நீண்ட காலமாக இந்நாட்டை ஆண்டு வந்த ராணுவத்திடம் இருந்த அதிகாரங்கள் கடந்த 2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றுமுதல் மியான்மரில் மத மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
புத்த மதத்தினருக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மத மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றன. ரோஹிங்யா முஸ்லிம்கள் அனுமதியின்றி தங்கள் நாட்டிற்குள் நுழைந்து தங்களது நிலங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டதாக பூர்வீகமாக மியான்மரில் வழும் புத்த மதத்தினர் குறைகூறி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதல்களில் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 1 1/2 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பெரும்பாலான தாக்குதல் சம்பவங்களில் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், (சனிக்கிழமை) நள்ளிரவில் மியான்மரின் சகெய்ங் மாகாணத்தின் கண்ட்பாலு நகர் அருகே உள்ள டான் கோனே கிராமத்தில் வசிக்கும் புத்தமத பெண்ணை ஒரு முஸ்லிம் வாலிபர் கற்பழித்து விட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து, டான் கோனே கிராமத்தில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக தாக்கி, எரித்து தீக்கரையாக்கியது.
பாதுகாப்பு தேடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஒரு வாலிபரை வெளியே அனுப்பும்படி கூறி போலீஸ் நிலையத்தையும் அந்த கும்பல் முற்றுகையிட்டது.
ஈட்டி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்ற அந்த கும்பல், கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் தாக்கியது. மியான்மரின் தேசிய கீதத்தை படிக் கொண்டே அங்கிருந்த சொத்துக்களை சேதப்படுத்திய அந்த கும்பல், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கலைந்து சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment