சிரியாவில் இராணுவ ரீதியாக தலையிட அமெரிக்கப் படைகள் தயாராகவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா அனுமதியளித்தால் தமது படைகள் நடவடிக்கைகளை தொடங்குவார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இராணுவ தளவாடங்கள் என்று அவர் கூறும் அனைத்தும் உரிய இடங்களுக்கு நகர்த்தப்பட்டுளன என்றும், அதிபர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி நடவடிக்கை செயல்படுத்தப்படும் எனவும் சக் ஹேகல் தெரிவித்தார்.
கடந்த வாரம் அங்கு நடைபெற்ற சந்தேகத்துக்குரிய இரசாயனத் தாக்குதலுக்கு சிரியாவின் அரசே பொறுப்பென்பது மேலும் மேலும் தெளிவாகி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
பிரிட்டனும் தயாராகிறது
எனினும் இது தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களும், உண்மைகளும் என்ன என்பது தெரியும்வரை அமெரிக்கா காத்திருந்து, அதன் அடிப்படையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிரியாவில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து பிரிட்டனின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்து வாக்களித்து முடிவெடுக்க, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை மீண்டும் கூடும்படி பிரதமர் டேவிட் கேமரன் கேட்டுள்ளார்.
தேவையான அளவுக்கு ஏற்ப இராணுவ ரீதியான அணுகுமுறைக்கான அவசரச் செயல்திட்டத்தையும் பிரிட்டன் வகுத்து வருகிறது என்றும் பிரதமர் டேவிட் கேமரனின் பேச்சாளர் கூறியுள்ளார்.
Post a Comment