கொழும்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட துறைமுகம் கொழும்புத் துறைமுகமல்ல. அதனை சீனத் துறைமுகமென்றே கூற வேண்டும்.அதன் வருமானம் அனைத்தும் சீனாவையே போய் சேரும் என்று ஐ. தே. கட்சி எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் அரசாங்கம் ரூபா 4 இலட்சம் கடனாளியாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ராஜகிரியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்புத் துறைமுக நிர்மாணத்திற்கு அரசாங்கம் ஐந்து சதத்தையேனும் செலவழிக்கவில்லை. அனைத்தையும் சீனாவே செய்து முடித்தது. எனவே, இது கொழும்புத் துறைமுகமல்ல. சீனத் துறைமுகமென்றே அழைக்கப்பட வேண்டும்.
அது மட்டுமன்றி, இதன்மூலம் கிடைக்கும் வருமானம் சீனாவையே போய் சேரும்.அத்தோடு சீனத் தொழிலாளர்களும் இங்கு வந்து தொழில் புரியும் நிலைமை உருவாகும்.
இதனைத்தான் கோலாகலமாக திறந்து வைத்து கண்காட்சி நடத்தப்பட்டு மக்களை அரசாங்கம் ஏமாற்றியது.
நுரைச்சோலை
தற்போது 21ஆவது தடவையாகவும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துவிட்டது.
ஆனால், இதனை மூடிமறைத்து சேர்விஸிற்காக மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் பொய் கூறுகின்றது.
இவ்வாறு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் தோல்வி கண்டுள்ளன.
எமது நாட்டு வளங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன
மீனவர்கள்
மீனவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாரிய போராட்டத்தை நடத்தி ஒரு உயிரை பறிகொடுத்தே மீனவர்கள் எரிபொருள் மானியத்தை பெற்றனர்.
இன்று அதனையும் அரசாங்கம் நிறுத்தப் போகின்றது.
ஏற்கெனவே மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது வெளிநாடு செல்கின்றனர்.
இந்த நிலையில் மீன்பிடித்துறையை முற்றாக இல்லாது செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.
வரவு – செலவு திட்டம்
எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கத் துறையினருக்கு ரூபா 10,000 மற்றும் தனியார் துறையினருக்கு ரூபா 3,000 சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென்று அனைத்து தொழிற்சங்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம்
ஒரு பிரஜை
நாட்டில் இன்று ஒவ்வொரு பிரஜையும் ரூபா 4 இலட்சம் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வீண் விரயங்கள் அனைத்தையும் மக்கள் தலையின் சுமத்தியுள்ளது என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
Post a Comment