13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும்.
உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில் நடைபெறும் இராணுவமயமாக்கல், குடியேற்றம், சிங்களமயமாதல் மற்றும் பௌத்தமயமாதல் போன்றவற்றின் ஊடாக, உள்நாட்டுத் தீர்வினை கண்டடையலாமென்று அரசு செயற்படும்போது, அதனைக் கண்டும் காணாததுபோல, பேர்லினிலும் டெல்லியிலும் கூட்டங்களை நடாத்துவது பொருத்தமற்றது போல் தெரிகிறது. இந்த வல்லரசுகளுக்குத் தெரியாத, புரியாத விடயங்களை நாம் தெளிவுபடுத்துகிறோம் ,இராஜதந்திர மௌனத்தை கலைக்கப்போகிறோம் என்று முயற்சிகளை மேற்கொள்ளும் தேச நலனில் அக்கறை கொண்டவர்கள், எல்லாவற்றையும் தெரிந்தவர்களோடுதான் தாம் பேசுகிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழர் தரப்புக்களின் டெல்லிப்பயணம் போன்று, தென்னிலங்கைத்தரப்பும் தமது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த டெல்லிக்குச் செல்கின்றது. அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னாலுள்ள காய்நகர்த்தல்களை நோக்கினால், இந்திய அழைப்பின் காரணங்களைப் புரிந்து கொள்ளலாம்.
'13 இல் கைவைப்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இந்திய பிராந்திய பாதுகாப்பு நலனிற்கு அச்சுறுத்தலாக அமையாது' என்கிற வகையில் பசிலின் விளக்கங்கள் இருக்குமென எதிர்பார்க்கலாம். அத்தோடு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை, எந்தவொரு மாகாணத்திலும் சிறிதளவேனும் இழப்பதை சிங்கள தேசம் விரும்பவில்லை என்பதோடு, அகில இலங்கை பௌத்த காங்கிரசும், பௌத்த உயர் பீடங்களும் இந்த 13 ஐ நீக்க வேண்டுமென்பதில் திடமாக இருக்கிறார்கள் என்ற செய்தியையும் இந்தியாவிற்கு பசில் முன்வைப்பார். 13 வது திருத்தச் சட்டம் குறித்து தென்னிலங்கையிலுள்ள ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகளைப் பார்த்தால், எதிர்ப்பரசியலுக்குள் ஒரு எதிர்ப்பரசியல் முளைத்திருக்கும் விந்தையைக் காணலாம். வட-கிழக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நிர்வாகம் மற்றும் நிலஅபகரிப்பு குறித்து உள்ளுக்குள் முரண்படாத ஆளும் இடதுசாரித்தரப்பினர், இந்த 13 விவகாரத்தில் மட்டும் போர்க்கொடி தூக்குவதன் மர்மம் என்ன?.
சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிப்பலத்தால் எம்.பி பதவியைப்பெற்ற இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள், 13 விவகாரத்தில் முரண்டு பிடிப்பதால் எத்தகைய மாற்றங்களை ஆளும்தரப்பிற்குள் உருவாக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது. விடுதலைப்புலிகளை போரில் வென்ற பலத்தை வைத்து, சிங்கள பெருந்தேசியவாதத்தின் மிகப்பெரிய ஆதரவினைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சவின் அதிகார பீடத்தில், சிறு அசைவையும் இவர்களால் ஏற்படுத்த முடியுமா ?.
இருப்பினும், இடதுசாரிகள் உடன், ஆளும் தரப்பினர் உருவாக்கும் முரண்நிலைப்போக்கும், அதனால் ஏற்படும் பிரிவுகளும், மேற்குலகிற்கு எதிரான, இடதுசாரிகளின்பால் நாட்டம் கொண்ட சில சர்வதேச நாடுகளின் ஆதரவினை இலங்கை இழக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கலாம். குறிப்பாக கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகளின் இலங்கை குறித்தான பார்வையில், இடதுசாரிகளின் வெளியேற்றம் மாற்றத்தை ஏற்படுத்துமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆளும் கட்சிக்குள் உருவான எதிர்ப்பரசியல், தென்னிலங்கை ஊடக வெளியில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ' ஒருங்கிணைப்புக்குழு' உருவாக்கம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி மற்றும் தேர்தல் விவகாரங்களைக் கையாளப்போகும் இக்குழு, தேசிய அரசியல், சர்வதேச அரசியல் குறித்தான விடயங்களை விவாதித்து முடிவெடுக்கும் வல்லமையைக் கொண்டிருக்குமா என்பதை அவதானிக்க வேண்டும். அரசியல் தீர்வு, சர்வதேச உறவு குறித்து, மிகவும் காத்திரமான, தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய அவசியம், இன்றைய சூழலில் அதிகமாகவிருப்பது உணரப்படுகிறது. இலங்கை குறித்து , இந்தியா எத்தகைய இராஜதந்திர அணுகுமுறையைக் கையாள்கிறது என்பதனை ஆழமாகப்புரிந்து கொள்வதும், இந்திய உபகண்டத்தில் தமது நலனிற்கு ஏற்றவாறு மூலோபாயச் சமநிலையை மாற்றியமைக்க, சீனாவும், அமெரிக்காவும் எவ்வாறு தேசிய இனப்பிரச்சினையை பயன்படுத்த முனைகின்றன என்பதோடு, அதிலுள்ள நுண்ணரசியலை அறிந்து, அதற்கேற்றவாறு அரசியல் வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்வது அவசியமானது.
சீனாவின் முதலீட்டு ஆதிக்கம் தணிவடையும்வரை , இலங்கை அரசுடனான உறவினைப் பலப்படுத்தும் முயற்சியை இந்தியா கைவிடாது. அதுமட்டுமல்லாது, இலங்கை அரசின் மீது அழுத்தத்தைத் பிரயோகிப்பதற்கு , தேசிய இனப்பிரச்சினையில் தவிர்க்க முடியாத பங்காளியாக இருக்கும் நிலையையும் இழந்துவிட இந்தியா விரும்பாது. ஆகவே, அரசியல் தீர்வு விடயத்தில், எமது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில், இந்தியாவுடன் பேசுவோர் பேசலாம். இந்தியாவுடன், இணக்கப்பாட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. இயக்கங்களை வளர்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெறப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க உதவியும், 'சீபா' ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறைவேற்ற முடியவில்லை. 'எமது பலம், எதிராளியின் பலவீனம்' என்பதன் மறுதலையாக, இந்தியாவின் தேவையை இலங்கை அரசு பயன்படுத்தும்போது, தமிழர் தரப்பால் ஏன் பயன்படுத்த முடியாது ?.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட , சர்வதேச அரசியல் பார்வை குறித்த நிலைப்பாட்டின் அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
Post a Comment