முஸ்லிம் பெண்களின் நிகாவை அகற்ற முன்னர் அரை நிர்வாணமாக ஆடை அணிவோருக்கு உடை அணிவிக்க பொது பலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வர வேண்டுமென உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் செயலாளர் சமன்மலீ குணசிங்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் அல்லது புர்கா என அடையாளப்படுத்தப்படும் ஆடையினை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விடுத்த பகிரங்க வேண்டுகோள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் உரிமைகளுக்கான செயலாளர் சமன்மலீ குணசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது
ஏனைய மதங்கள் மற்றும் இனங்கள் தொடர்பான கலாசாரம் மற்றும் அடையாளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டாம் என ஞானசார தேரரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஞானசார தேரர் நிகாபை தடை செய்யக் கோரும் யோசனையை பாதுகாப்பு காரணங்களுக்காக கொண்டு வருவதாக தெரிவிப்பதாயின் நாட்டில் பரவலாக உள்ள விபச்சாரம், போதைப்பொருள் பாவனை, சில அரசியல்வாதிகள் செய்யும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராகவே முதலில் போராட வேண்டும். முஸ்லிம் பெண்களின் உடையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையாயின் அதற்கெதிராக அழுத்தம் கொடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
இந்த நாட்டுக்குள் வரும் உல்லாசப் பயணிகள் எந்தளவு அரை நிர்வாணமாக திரிகின்றனர்.
முஸ்லிம் பெண்கள் நிகாபை அகற்ற சுயமாக முன்வருவார்களாயின் அதனையும் எவராலும் எதிர்க்கமுடியாது சில முஸ்லிம் நாடுகள் உடையால் உடலை மறைக்காத போது தண்டனை வழங்குகின்றன. எனினும் இங்கு அகற்றுமாறு அழுத்தம் கொடுக்கின்றன.
இது ஒரு அசாதாரண செயற்பாடாகும். பிரதான தேவைப்பாடானது பெண்களின் உடையில் ஒரு பகுதியை அகற்றுவதில் இல்லை. மாறாக அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டிய ஒரு நிலையே உள்ளது.
ஞானசார தேரர் முஸ்லிம் பெண்களின் நிகாவை விலக்க கோருவது ஒரு மனித உரிமை மீறல் மட்டுமன்றி பெண்கள் உரிமையினையும் மீறுவதாக உள்ளது.
கெட்ட விடயங்களுக் கெதிராக போராட வேண்டுமெனவும் முஸ்லிம் பெண்களின் அடையாளம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும் நாம் ஞானசார தேரரிடம் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment