பீகார் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகாரின் தலைநகரான பாட்னாவில் அமைந்துள்ள மகாவீரர் கோவிலுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
புத்தகயா தவிர மகாவீரர் கோவிலிலும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்பு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தேவிபட்னா கோவில் உள்பட பல கோவில்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பீகார் புத்த கயாவில் குண்டு வெடிப்பு: சென்னை, புத்த மடம் - இலங்கை தூதரகத்தில் போலீஸ் பாதுகாப்பு
பீகாரில் புத்த கயாவில் குண்டு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், எழும்பூர் கென்னத்லேனில் உள்ள புத்தமடம், நுங்கம்பாக்கத்தில் கோடபாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் "இலங்கை ஏர்லைன்ஸ்'' விமான நிறுவனம் மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றில் போலீசார் எப்போதுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை தலை தூக்கும் போதெல்லாம் இந்த 4 அலுவலகங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் நடை பெறும். இதனை தடுப்பதற்காக போலீசார் உஷார் படுத்தப்படுவார்கள். இதற்கிடையே இன்று காலையில் புத்த கயாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள புத்தமடம், இலங்கை தூதரகம் உள்ளிட்ட 4 இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment