முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்தை மூடும் படியாக நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை அணிவதை உடனடியாக தடை செய்யவேண்டும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்தது. சட்டம் ஒன்றினை பாராளுமன்றத்தினூடாக கொண்டு வந்து முகம் மூடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிடில் தொடர்ச்சியாக பொது பல சேனா எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டி வரும் எனவும் அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(8-7-2013) நடைபெற்ற அந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வளர்ச்சியடைந்த ஐரோப்பாவின் பல நாடுகள் இன்று பொது இடங்களில் முகம் மூடுவதை தடை செய்துள்ளன. முகம் மூடுவதை தடை செய்வது அடிப்படை உரிமை மீறல் ஆகாது. பெல்ஜிய நீதிமன்றம் ஒன்று முகம் மூடுவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு குறித்த உடை அச்சுறுத்தலாக உள்ளது. அண்மையில் மாமா அஸ்மி என்ற பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த குற்றவாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் நீண்ட நாட்களாக பிடிபடாமல் இருந்தமைக்கு முகத்தை மூடி அணியும் முஸ்லிம் பெண்களின் உடையே காரணம். அதனுள்ளேயே அவர் பதுங்கியிருந்தார். இது போல எத்தனை பேர் பதுங்கியுள்ளார்கள். பொது இடங்களில் முகத்தினை மூடிக்கொண்டு செல்வதால் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
குர்ஆனில் எங்கும் பெண்களை முகம் மூடுமாறு பணிக்கப்படவில்லை. முகம் மூடுவது தொடர்பாக ஜம்இய்யதுல் உலமாவுக்குள்ளேயே இரு நிலைப்பாடுகள் உள்ளன. அவர்களில் சிலர் முகம் மூட வேண்டியதில்லை என கூறுகின்றனர். என்றார்
Post a Comment