காப் ஸூரா விடயத்தில் கால் சறுகிப்போன ஸைனியின் தடுமாற்றங்கள்




இமாம் ஜும்ஆவில் உரையாற்றுவதற்கு முன்பு காஃப் அத்தியாயத்தை கட்டாயம் ஓத வேண்டும் என்ற கருத்தை இலங்கையைச் சார்ந்த ஸைனீ என்பவர் கூறிவருகின்றார்.

சரியான ஆய்வும், போதிய விபரமும் இவருக்கு இல்லாத காரணத்தால் ஒரு நபிமொழியைத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாம் கூறாத கருத்தை இஸ்லாத்தில் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவரால் மக்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இவர் கூறும் கருத்து எந்த அடிப்படையில் தவறானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இது குறித்து நமது ஆய்வை முதலில் வெளியிட்டோம். நாம் கூறும் விளக்கம் சரியில்லை என்று மறுத்து அவர் ஒரு மறுப்பை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கும் எமக்கும் இடையில் பல முறை கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த நிலையில் இறுதியாக அவர் தற்போது நமது விளக்கத்திற்கு மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அவருடைய தவறான வாதங்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பு அவரைப் பற்றி ஒரு தகவல் தற்போது கூற வேண்டிய அவசியம் உள்ளது.

அறிஞர்கள் ஆய்வு செய்யும் போது ஓரிரு தவறுகள் ஏற்படுவது இயல்பான விசயமாகும். அறிவும் திறமையும் உள்ள யாரும் இதில் விதிவிலக்கலானவர்கள் அல்லர். நாமும் இதற்கு விதிவிலக்கானவர் இல்லை. ஸைனியிடம் இந்த அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதை நாம் குறைகூற மாட்டோம்.

ஆனால் தவறுகள் ஒன்று இரண்டு என்ற கணக்கைத் தாண்டி ஆய்வு முழுவதிலும் ஆக்கிரமித்துவிட்டால் அதிகரித்துவிட்டால் அது ஆய்வே கிடையாது. ஆய்வு என்ற பெயரில் தானும் குழம்பி மக்களையும் குழப்பும் ஆபத்தான செயலாகும்.

நூறு ஹதீஸ்களை அறிவித்த ஒருவர் இரண்டு அல்லது மூன்று ஹதீஸ்களில் தவறு செய்துள்ளார் என்றால் இந்தத் தவறு இயல்பானது. இது அவரை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால் இருபது முப்பது என்ற கணக்கில் ஹதீஸ்களில் தவறு அதிகரித்தால் இவர் நம்பகத்தன்மையை இழந்து விடுகின்றார். ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்படுவார்.

நூறு கண்ணாடிப் பாத்திரங்களை கழுவக்கூடியவன் ஓரிரு பாத்திரங்களை உடைத்தால் அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். பத்து இருபது என்று அளவு அதிகரிக்கும் போது இவன் அந்த வேலைக்கு தகுதியற்றவனாகி விடுகிறான். அறிவுள்ளவர்கள் இதன் பிறகு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க மாட்டார்கள்.  ஸைனி இவனை விட மோசமான நிலையில் இருக்கின்றார்.

இவருக்கு அறிவுக்கண் இல்லாத காரணத்தால் கழுவக்கூடிய பாத்திரங்களில் தொண்ணூறி ஒன்பது பாத்திரங்களை உடைத்து விடுகின்றார். ஓரிரு பாத்திரங்கள் மாத்திரமே உடையாமல் எஞ்சுகின்றன.

ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதுவது தொடர்பாக ஆய்வு என்ற பெயரில் ஸைனி மேற்கொண்ட முயற்சி இது போன்றதாகும். இது தொடர்பாக அவர் எழுதிய அனைத்து ஆக்கங்களையும் படிப்பவர் இதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

இவரை மட்டப்படுத்துவதற்காகவோ இவர் மீதுள்ள காழ்புணர்வின் காரணமாகவோ இதை நான் கூறவில்லை. மார்க்கத்தில் விளையாடும் இவரைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் கடமையை நிறைவேற்றுவதற்காகவே இவரைப் பற்றி எழுதுகிறேன். இதுவே இவருடைய உண்மை நிலை என்பதற்குரிய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.

இவர் செய்த ஆய்வு எனும் அவியலில் உள்ள அபத்தங்கள் நிறைய உள்ளன. அவற்றை அடுத்தடுத்த நான் தெளிவுபடுத்துகிறேன்.

இப்போது நான் சொல்வது சைனியே ஒப்புக் கொண்ட அயோக்கியத்தனங்களைப் பற்றி மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

எனவே இவர் இந்தத் துறைக்கு தகுதியானவரா? இல்லையா? என்பதை நிரூபித்து விட்டால் மக்கள் உண்மையை உணர்ந்து தகுதியற்றவர்களின் கூற்றுக்களைப் புறக்கணித்து விடுவார்கள்.

ஸைனியின் அந்தர்பல்டி 1

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே காஃப் சூராவை ஜும்ஆவில் ஓதினார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸை நாம் ஆதாரமாகக் காட்டினோம். ஸைனி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறி நமது வாதத்தை முறியடிக்க நினைத்தார். இதோ அவருடைய கூற்றைப் பாருங்கள்.

பலவீனம் என்று ஸைனி கூறியது

காப் என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே ஓதினார்கள் என்ற அறிவிப்பையும் ஏற்க இயலாது. காரணம் அதில் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். அவர் இருட்டடிப்பு செய்பவர் என்பது இவர் மீதுள்ள விமர்சனமாகும்.

(சைனியின் முதல் கட்டுரை)

நாம் தக்க சான்றுகளுடன் இதைப் பலமானது என்று நிரூபித்தவுடன் வேறு வழியின்றி இது சரியான செய்தி என்று ஒப்புக் கொண்டார்.

பலமானது என்று ஒப்புக்கொண்டு கூறியது

அப்பாஸ் அலியின் இந்த விளக்கத்தை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். சுட்டிக்காட்டியதற்கு சிறந்த கூலியை அல்லாஹ் நல்குவானாக! நபி(ஸல்) அவர்கள் காப் என்ற அத்தியாத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்ற அறிவிப்பு ஆதாரபூர்வமானதுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

அந்த ஹதீஸ் பலவீனமானது என்று அவர் சொன்னதை நிரூபிக்கவோ சமாளிக்கவோ இயலாது என்பதால் அது ஆதாரப்பூர்வமானது தான் ஒப்புக் கொண்டார். ஆதாரப்பூர்வமானது என்று ஒப்புக் கொண்ட பின்னர் அதன் அர்த்தத்தை மாற்றி தனது நிலையை நியாயப்படுத்துவதைப் பாருங்கள்.

ஸைனியின் அந்தர்பல்டி 2

நாம் சுட்டிக்காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. எனவே பலவீனம் என்ற வாதத்தை விட்டுவிட்டு அடுத்தபடியாக அதன் அர்த்தத்தைக் குழப்பும் புது முயற்சியில் ஈடுபட்டார்.

நபி (ஸல்) அவர்கள் காஃப் அத்தியாயத்தை கற்றுக் கொடுப்பதற்காக ஓதியதால் இதை வைத்து கட்டாயம் ஓத வேண்டியதில்லை என்று கூற முடியாது என்று வாதிட்டார். இதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினார்.

அதாவது கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று நாம் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு நமக்கெதிராக வாதிட்டார்.

இவர் கூறிய உதாரணம் பொருத்தமற்றது என்பதையும் கற்றுக் கொடுப்பதற்காக ஓதினால் அது கட்டாயம் ஓதுவதைக் குறிக்காது என்பதையும் நாம் நிரூபித்தவுடன் அந்த வாதத்தை விட்டுவிட்டு கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதஸில் இல்லவே இல்லை என்று தற்போது புதுவிதமாக உளற ஆரம்பித்துள்ளார்.

கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள் என்பதை ஒத்துக்கொள்ளுதல்

ஆயினும் காப் என்ற அத்தியாத்தை கற்றுக் கொடுப்பதற்கு ஓதினார்கள் என்பதை வைத்தும் காப் ஓதுவது அவசியமற்றது என்பதை நிரூபிக்க இயலாது. நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களுக்கு தொழுகையில் ஓதப்படும் அத்தஹிய்யாத்து என்பதை கற்றுத்தந்தார்கள் என புஹாரியில் 6265 வது இலக்கத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிற்கு நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தை கற்றுக் கொடுப்பதற்காகவே சொல்லிக் கொடுத்தார்கள். அது கடமை என்பதற்கு சொல்லிக் கொடுக்கவில்லை என யாராவது விளங்குவார்களா? அவ்வாறு விளங்கினால் அது அறியாமை என்றே நாம் கூறுவோம்.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

அதாவது நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை கற்றுக் கொடுப்பதற்காகவே ஓதினார்கள் என்ற கருத்தை அவர் மறுக்கவில்லை. மாறாக அதை ஏற்றுக்கொண்டு நமக்கு எதிராக வாதிடுகின்றார்.

முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தைக் கற்றுக்கொடுப்பதற்காகத் தான் ஓதினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது என்று இவர் கூறியுள்ளார். இதோ அவர் கூறியதைப் பாருங்கள்.

காப் என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே ஓதினார்கள் என்ற அறிவிப்பையும் ஏற்க இயலாது. காரணம் அதில் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

(சைனியின் முதல் கட்டுரை)

கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதீஸில் இல்லை

கற்றுக்கொடுப்பதற்காக ஓதினால் அது கட்டாயத்தை குறிக்காது என்று நாம் நிரூபித்தவுடன் கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதீஸில் இல்லை. இவ்வாறு மொழிபெயர்ப்பதே தவறு என்று மறுபடியும் பல்டி அடித்துள்ளார். இதோ அவர் இறுதியாக கூறியுள்ளதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காப் அத்தியாயம் ஓதியது கற்றுக் கொடுப்பது உட்பட எவ்விதக் காரணங்களுக்காகவுமல்ல. நபியவர்கள் எந்தக் காரணத்திற்காக காப் ஓதினார்கள் என்பதும் ஹதீஸ்களில் தெளிவுபடுத்தப்படவில்லை. நீங்களாக தவறாக அர்த்தம் செய்து கொண்டு நபிவழியை அனர்த்தமாக்குகிறீர்கள்! என்பதே இதற்கான எமது பதிலாகும்.

(சைனியின் மூன்றாவது கட்டுரை)

இப்போது இவரது தில்லுமுல்லுகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  1. கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்ற ஹதீஸ் பலவீனமானது.
  2. அது சரியான ஹதீஸ் தான். ஆனால் கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதீஸில் இல்லை.
  3. கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்றாலும் காப் அத்தியாயம் ஓதுவது அவசியம் என்ற கருத்துக்கு அது முரணாகாது.
  4.  கற்றுக் கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதீஸில் உள்ளது.
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த நான்கையும் ஒருவரே சொல்ல முடியுமா?
ஒரு விஷயத்தில் முழுத்தெளிவு அடைந்த பிறகுதான் ஒருவர் மக்கள் மத்த்யில் ஒரு கருத்தை வைக்க வே\ண்டும். நினைத்து நினைத்து எதையாவது எழுதி சமாளித்துப் பார்க்கலாம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் ஆய்வில் இறங்கலாமா என்பதை இதை வைத்து மக்களே முடிவு செய்யலாம்.

ஸைனியின் அந்தர் பல்டி 3

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் சூரா மட்டும் ஓதவில்லை. காஃபைப் போன்று வேறு அத்தியாயங்களையும் ஓதியுள்ளார்கள் என்பதற்கு நாம் தப்ரானியில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியை ஆதாரமாகக் காட்டினோம்.
இந்த செய்தி இவருடைய நிலைபாட்டைத் தகர்க்கும் மிகப்பெரிய ஆயுதமாக இருப்பதால் இதைப் பார்த்தவுடன் இது பலவீனமானது என்றும் இதை ஆதாரமாக காட்டியதற்காக நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று முதலில் கூறினார். இதோ அவர் கூறியதை பாருங்கள்.

தப்ரானியின் செய்தி பலவீனமானது என்று அவர் கூறியது

நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காப் என்பதும் இருந்தது என்ற செய்தியை இடம் பெறச் செய்த சகோதரர் அப்பாஸ் அலி தான் எழுதும் ஆய்வில் கவனயீனமாகவே இருந்துள்ளார் என்றே எமக்கு தோன்றுகின்றது. காரணம் தப்ரானியின் சரியான செய்தி மேலே இடம் பெற்றுள்ளது. அதை விட்டு விட்டு அதே தப்ரானியில் கீழே உள்ள தொடர்பு அறுந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார். இதை அவர் அறியாமல் செய்திருந்தால் அது நிச்சயம் அவருடைய கவனயீனம்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை வேண்டுமென்று திட்டமிட்டு இதை செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதே சரியான வழிமுறையாகும்.

(சைனியின் முதல் கட்டுரை)

நான் செய்த தவறு ஆதாரமாகுமா?

தப்ரானியின் செய்தி தொடர்பு அறுந்தது அல்ல என்பதற்கு நாம் இவரே ஏற்றுக்கொண்டு ஆதாரமாக்க் கொண்டு வந்த ஒரு தொடரை நாம் சுட்டிக்காட்டினோம்.

அதற்கு இவர் நான் அறியாமல் அந்தத் தொடரை சரிகண்டு எழுதிவிட்டேன். அது பலவீனமானது என்பதே சரி. எனவே நீங்கள் இதை ஆதாரமாகக் காட்ட முடியாது என்று வாதிட்டார். இதோ அவர் கூறியது.

எமது கடந்த ஆய்விலும் இந்த செய்தியை நாமும் குறிப்பிட்டிருந்தோம். இதன் அறிவிப்பாளர் தொடர் குறையுள்ளது என்பதை ஏற்கனவே காணத்தவறி விட்டோம்.. சகோதரர் அப்பாஸ் அலியும் இதை அறியவில்லை. எமக்கு நிகழ்ந்த அதே தவறு அப்பாஸ் அலிக்கும் நிகழ்ந்துள்ளது. நாம் அதை பலவீனம் என்பதால் எமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் அப்பாஸ் அலி அதை பலவீனம் என ஏற்றுக் கொண்டால் தப்ரானியில் இடம் பெற்ற நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து காஃப் அத்தியாயத்தை மனனம் செய்துகொண்டேன். அவர்கள் ஜும்ஆவில் மிம்பரின் மீது நின்றுகொண்டு அதை ஓதுவார்கள்என்ற ஹதீஸ் தொடர்பறுந்த செய்தியல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

நான் ஆதாரமாகக் காட்டிய ஹதீஸ் பலவீனமானது என்று அவர் கூறி அதற்கான ஆதாரத்தை எடுத்து வைத்தால் அதில் குறை சொல்ல முடியாது.

ஆனால் எந்த ஹதீஸைப் பலவீனமானது என்று இப்போது கூறினாரோ அதே ஹதீஸை இவர் இதே பிரச்சனையில் ஆதாரமாகக் காட்டி இருந்தார்.

இப்போது இவரைப்பற்றி நாம் எந்த முடிவுக்கு வர இயலும்? தான் ஆதாரமாக காட்டும் போது இவர் ஆய்வு செய்யாமல் எந்த ஹதீஸையும் எடுத்துக் காட்டுவார். அதே ஹதீஸை நாம் எடுத்துக் காட்டினால் அப்போதுதான் அந்த ஹதீஸ் பற்றி ஆய்வு செய்வார். இவரைப் போன்றவர்கள் ஆய்வு செய்யத் தகுதியானவர்களா?

ஸைனியின் அந்தர் பல்டி 4

இவரே ஏற்றுக்கொண்ட தொடரை நாம் சுட்டிக்காட்டிய போது அது பலவீனமானது என்று இவர் மறுத்தவிட்ட காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் அல்லாத சூராக்களையும் ஓதியுள்ளார்கள் என்று கூறும் தப்பரானியின் அறிவிப்பு தொடர்பு அறுந்தது அல்ல என்பதை நிறுவ வேறு ஆதாரப்பூர்வமான தொடரைக் காண்பித்தோம்.

இப்போது தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை என்பதால் தப்ரானியின் செய்தி ஆதாரப்பூர்வமானது தான் என்று ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதோ அவர் கூறியதை பாருங்கள்.

ஒரு மாதகாலம் தங்கினோம் என்று தப்ரானியில் இடம் பெறும் அறிவிப்பு தொடர்பறுந்த செய்தி என நாம் விமர்சித்தது உண்மைதான். எனினும் யஹ்யாவுக்கும் உம்மு ஹிஷாமிற்குமிடையே முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் இடம் பெற்ற தொடரை அப்பாஸ் அலி ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். எனவே இந்த செய்தி தொடர்பறுந்த செய்தி என நாம் குறிப்பிட்டது எமது கவனக்குறைவே ஆகும் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறோம். எனவே தப்ரானியில் இடம் பெற்ற அறிவிப்பு தொடர்பறுந்த செய்தி என்று நாம் கூறியதை வாபஸ் வாங்குகிறோம்.

(சைனியின் மூன்றாவது கட்டுரை)

ஸைனியின் அந்தர் பல்டி 5

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் சூரா அல்லாத மற்ற சூராக்களையும் ஓதியுள்ளார்கள் என்ற அறிவிப்பு பலவீனமானது என்று இவர் முதலில் கூறினார்.

எனவே தப்ரானியின் அறிவிப்புடன் தாரீகுல் கபீரில் இடம்பெற்ற இன்னொரு அறிவிப்பையும் ஆதாரமாகக் காட்டினோம். தப்ரானியின் அறிவிப்பு தொடர்பு அறுந்தது என்று குழப்பம் செய்ய ஒரு வாய்ப்பு இருந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விடாமல் அந்தக் குழப்பத்தை செய்து முடித்தார். இந்த விமர்சனம் அபத்தமானது என்பது பின்பு நிரூபித்து அவரை ஒத்துக்கொள்ளச் செய்தோம்.

ஆனால் தாரீகுல் கபீல் இடம்பெற்ற அறிவிப்பில் எந்த குழப்பமும் செய்ய முடியாத வகையில் அந்த செய்தி மிகத்தெளிவான ஆதாரமாக இருந்ததால் அவரால் மறுக்க முடியாமல் சரியானது என்று ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனது பலவீனத்தை மறைப்பதற்கு  தொடர்பு அறுந்த தப்ரானியின் அறிவிப்பை ஏன் காட்டினீர்கள்? இந்த ஆதாரப்பூர்வமான அறிவிப்பை முதலிலே கூறியிருக்க வேண்டாமா? என்று கைகூசாமல் எழுதினார்.

மேற்குறித்த இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்பதை நாம் மறுக்கவில்லை. இவர் ஆரம்பத்தில் இந்த ஹதீஸைக் கூறியிருந்தால் நாம் இது தொடர்பறுந்த செய்தி என விமர்சித்திருக்க மாட்டோம். தொடர்பறுந்த செய்தியை இவர் காட்டியதால்தான் அதை தொடர்பறுந்த செய்தி எனக் கூறினோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

ஸைனியின் அந்தர் பல்டி 6

நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத சூராக்களையும் ஜும்ஆவில் ஓதினார்கள் என்று வரும் அறிவிப்பை எப்பாடுபட்டாவது பலவீனமாக்க வேண்டும் என்று ஸைனி கடுமையான முறையில் முயற்சி செய்தும் அந்த முயற்சியில் பயனில்லாமல் போனது.

இந்த அறிவிப்பை ஏற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்ற நிலை வந்தவுடன் இது ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக்கொண்டார்.

இந்த ஹதீஸ் இவர் கூறும் கருத்திற்கு பேரிடியாக இருப்பதால் தற்போது இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக்கொண்டு அதன் கருத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் புது முயற்சியில் இறங்கியுள்ளார். இது ஸைனிக்கு மட்டும் உரிய தனி பானியாகும்.

கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று வரும் அறிவிப்பை பலவீனம் என்று கூறி தன் கருத்தை நிறுவ முயற்சித்தார். அது எடுபடவில்லை என்றவுடன் அதை ஏற்றுக்கொண்டு அதன் கருத்தில் ஒரு குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினார். அதுவும் எடுபடவில்லை என்றவுடன் நாம் கூறுவது போல் ஹதீஸில் அறவே இல்லை என்று புதுக் குழப்பத்தை ஏற்படுத்தினார். இதை முன்பு பார்த்தோம்.

இதே பானியில் தற்போது நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத சூராக்களையும் ஜும்ஆவில் ஓதினார்கள் என்று ஹதீஸில் இல்லை. இது தவறான மொழிபெயர்ப்பு என புது கவிதை பாடியுள்ளார். அவர் கூறுவதை பாருங்கள்.

கீழே உள்ள அனைத்தும் இவர் எழுதியது தான்.

அப்பாஸ் அலியின் விளக்கத்தின்படி இதை நாம் மொழிபெயர்த்தால் இவ்வாறு கூற வேண்டும்

மிம்பரில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காப் அத்தியாயத்தை ஓதியதில் காப் அத்தியாயத்தை நான் மனனம் செய்து கொண்டேன்.

இவ்வாறு இவர் மொழிபெயர்த்தால் இவரது வாதத்தை வலுப்படுத்த இந்த ஹதீஸ் உதவாது. ஏனெனில் மிம்பரில் காப் அல்லாத வேறு அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்பதை நிறுவுவதற்கே மேற்படி ஹதீஸை இவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இவர் வாதிடும் கருத்து அந்த ஹதீஸில் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

பின்வரும் அடிப்படையில் மொழிபெயர்த்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரில் காப் என்ற அத்தியாயத்தை ஓதுபவற்றின் காரணமாக அதை நான் மனனம் செய்து கொண்டேன்.

 (சைனியின் மூன்றாவது கட்டுரை)

ஆனால் இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் ஓதியவற்றில் என நாம் மொழிபெயர்த்த அடிப்படையில் தான் குறித்த அறிவிப்பு இருப்பதாக இவர் ஏற்றுக்கொண்டு இவரும் அவ்வாறு தான் இந்த ஹதீஸிற்கு பொருள் செய்து வந்தார். அவர் கூறியதை பாருங்கள்.

எனவே அம்ராவுக்கும் யஹ்யா பின் அபீ கதீருக்குமிடையே முஹம்மத் பின் அப்திர்ரஹ்மான் இடம் பெற்றுள்ளார் அதுதான் சரியான அறிவிப்பாகும். அவ்வாறு சரியாக இடம் பெற்ற அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காப் இருந்தது என்றெல்லாம் எதுவும் இடம் பெறவில்லை. மாறாக ஒவ்வொரு ஜும்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் காப் ஓதுவார்கள் என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதைத்தான் நாம் மேலே வழங்கினோம். இதன் பிரகாரம் நாம் நோக்கினால் நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காப் இருந்தது என்ற ஹதீஸ் தொடர்பறுந்த செய்தியாக ஆகிவிடுகின்றது என்பதை அப்பாஸ் அலிக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(சைனியின் முதல் கட்டுரை)

நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காப் என்பதும் இருந்தது என்ற செய்தியை இடம் பெறச் செய்த சகோதரர் அப்பாஸ் அலி தான் எழுதும் ஆய்வில் கவனயீனமாகவே இருந்துள்ளார் என்றே எமக்கு தோன்றுகின்றது. காரணம் தப்ரானியின் சரியான செய்தி மேலே இடம் பெற்றுள்ளது. அதை விட்டு விட்டு அதே தப்ரானியில் கீழே உள்ள தொடர்பு அறுந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார். இதை அவர் அறியாமல் செய்திருந்தால் அது நிச்சயம் அவருடைய கவனயீனம்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை வேண்டுமென்று திட்டமிட்டு இதை செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதே சரியான வழிமுறையாகும். 

(முதல் கட்டுரை)

நபி(ஸல்) அவர்கள் தனது உரையின் போது குர்ஆன் வசனங்களையும் தேவைக்கேற்ப ஓதியுள்ளார்கள். இதை அப்பாஸ் அலி கூட ஏற்றுள்ளார். இப்போது நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றிலிருந்து நான் மனனம் செய்து கொண்டேன் என்றால் அதனை விபரமாக நாம் இப்படிக் கூறலாம். அதாவது ஜும்ஆவின் போது நபி(ஸல்) அவர்கள் ஓதிய குர்ஆன் வசனங்களிலிருந்து காப் என்ற அத்தியாயத்தை மாத்திரம் நான் மனனம் செய்து கொண்டேன்.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

இரண்டாவது: குறித்த செய்தியில் மிம்பர் என்றோ அல்லது ஜும்ஆ தொழுகை என்றோ இடம் பெறவில்லை. ஜும்ஆ தொழுகையிலும் நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதியுள்ளார்கள் அதனையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் ஓதியதிலிருந்து நான் காபை மனனம் செய்து கொண்டேன் என உம்மு ஹிஷாம் கூறியிருக்க முடியும். எனவே இரண்டு விதங்களிலும் விளங்க இது வாய்ப்புள்ளது.

(சைனியின் இரண்டாம் கட்டுரை)

ஸைனியின் அந்தர் பல்டி 7

உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்துகொள்ளவில்லை. குறிப்பிட்ட காலமே கலந்துகொண்டார்கள் என்று நாம் கூறினோம்.

இதை ஏற்றுக்கொண்டால் அவருடைய கருத்து எடுபடாது என்பதால் ஆரம்பத்தில் இது தவறானக் கூற்று என்று விமர்சித்தார். அவர் கூறியதை பாருங்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹிஷாம் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்துகொள்ளவில்லைஎன்ற இவரது கருத்து தவறானதாகும். இக்கருத்திற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

 (முதல் கட்டுரை)

நாம் தக்க சான்றுகளுடன் இதை நிரூபித்த பிறகு வேறு வழியின்றி இது சரியான கருத்து என்று ஒத்துக்கொண்டார். இதன் பிறகு  அவர் வழக்கம் போல் கருத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதை பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காப் அத்தியாயத்தை ஓதியதாக உம்மு ஹிஷாம் கூறுவதாக இருந்தால் அவர் அனைத்து ஜும்ஆ உரைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நியாயத்தின் பெயரில் உம்மு ஹிஷாம் நபி(ஸல்) அவர்கள் நடாத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொண்டுள்ளார் எனக் கூறினோம்.

உண்மையில் நாம் தேடிய வரை எந்த ஹதீஸிலும் உம்மு ஹிஷாம் நபி(ஸல்) அவர்கள் நடாத்திய அனைத்து உரைகளிலும் கலந்து கொண்டார்கள் என்ற தகவலைக் காண முடியவில்லை.

உம்மு ஹிஷாம் நபி(ஸல்) அவர்களின் அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொள்ளவில்லை என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலோ அல்லது உம்மு ஹிஷாம் வீட்டிலிருந்து கொண்டே உரையை செவிமடுத்தார் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் சரி இவையனைத்தும் எமது வாதத்தை மறுக்க ஒரு போதும் உதவப்போவதில்லை.

(ஸைனியின் மூன்றாவது கட்டுரை)

ஸைனியின் அந்தர் பல்டி 8

உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் எவ்வளவு காலம் தங்கினார்கள் என்ற தகவலை அவரிடமிருந்து யஹ்யா என்பாரும் முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் என்பாரும் அறிவித்துள்ளனர். இதை ஸைனி நாம் சுட்டிக்காட்டிய பின் இறுதியாக ஏற்றுக்கொண்டார்.

ஆனால் ஆரம்பத்தில் அவர் காலவரையறை தொடர்பாக உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து யஹ்யா என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை என்று கூறினார்.

தான் முன்பு கூறிய கருத்தை அவர் மாற்றிக்கூறுவதை பாருங்கள்.

இங்கு சிறியதொரு தவறு எம்மால் நிகழ்ந்துள்ளது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடும். காலவரையறை சம்பந்தமாக உம்மு ஹிஷாமின் மாணவர் அறிவித்துள்ளார் என்பதற்கு பதிலாக மாணவர்கள் அறிவித்துள்ளனர் என தவறுதலாகவே கூறினோம்.. ஆனால் மாணவர்கள் என நாம் குறிப்பிட்டதுதான் உண்மையில் சரியானது என தற்போது எமக்கு தெரிய வந்துள்ளது. காரணம் தப்ரானியில் இடம் பெறும் அறிவிப்பை ஆதாரபூர்வமானது என்று ஏற்றுக் கொள்கிறோம். எமது நிலைப்பாடு மாறுபட்ட போதிலும் காப் அவசியம் என்பதை மறுக்க அப்பாஸ் அலி இதில் எந்த ஏற்கத்தக்க வாதத்தையும் முன்வைக்கவில்லை.

(சைனியின் மூன்றாவது கட்டுரை)

ஸைனியின் அந்தர் பல்டி 9

ஸைனிக்கு முதலில் நாம் மறுப்பு எழுதிய போது ஒரு ஹதீஸ் குறித்து ஆய்வு செய்தால் அது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்று கூறினோம்.

இதற்கு ஸைனி நாமும் அவ்வாறு ஆய்வு செய்த பிறகே நாம் கூறும் கருத்து சரியானது என்ற முடிவுக்கு வந்தோம் என்று கூறினார். அவர் கூறியதை பாருங்கள்.

ஒரு அறிவிப்பை மாத்திரம் வைத்து நாம் இது விடயத்தில் முடிவெடுத்து விட முடியாது என்று சகோதரர் அப்பாஸ் அலி கூறுவது நியாயமானதுதான். அவர் கூறுவது போன்று இது சம்பந்தமாக கூடுதல் விளக்கங்களுடன் இடம் பெறும் ஏனைய அறிவிப்புக்களையெல்லாம் எடுத்து ஆய்வு செய்ததன் பிற்பாடே நாம் காப் ஓதுவது அவசியம் எனும் முடிவுக்கு வந்தோம். சரி அடுத்து என்ன வாதம் வைக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

 (சைனியின் முதல் கட்டுரை)

இந்த ஆய்வில் இவரிடம் ஏற்பட்டுள்ள இந்தத் தவறுகளை நாம் சுட்டிக்காட்டிய பின் இது தான் முழுமையாக ஆய்வு செய்த லட்சணமா? என்று கேட்ட போது முன்பு தான் கூறிய கருத்திற்கு மாற்றமாக பின்வாங்குவதை பாருங்கள்.

காப் விடயத்தில் முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம் என நாம் ஒரு போதும் கூறவில்லை. அவ்வாறு கூறவும் முடியாது. அவ்வாறு நாம் கூறியிருந்தால் எமது வார்த்தையிலிருந்து இவர் எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எம்மீது அவதூறு சுமத்தியதற்கு இவர் மன்னிப்புக் கோர வேண்டும்.

(மூன்றாவது கட்டுரை)

யார் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை நியாயவான்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்துவிட்டுத் தான் முடிவெடுத்தேன் என்று முதலில் கூறினார். தவறுகளை நாம் சுட்டிக்காட்டிய பின் நான் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்று கூறுகிறார்.

ஸைனி இறுதியாகக் கூறியதைத் தான் நான் ஆரம்பத்திலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றேன். இந்த சட்டப் பிரச்சனையில் இவர் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸை மட்டும் பிடித்துக்கொண்டு முறையாக ஆய்வு இல்லாமல் மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பியுள்ளார் என்பதே உண்மை. இது அவருடைய வாயிலிருந்தே வந்துவிட்டது.

முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்றால் இது குறித்து மக்களிடம் பத்வா வழங்குவது ஹராம் இல்லையா?  அரை குறையான ஆய்வைக் கொண்டு எடுக்கப்பட்ட பத்வா அடிப்படையில் மக்களை செயல்படச் சொல்வது பாவமில்லையா?

விரும்பியவர் விரும்புவதைக் கூறுவதற்கு மார்க்கம் என்ன விளையாடும் மைதானமா? முழுமையாக ஆய்வு செய்யும் தகுதி இல்லாவிட்டால் பேசாமல் ஒதுங்கிவிடலாமே? தானும் குழம்பி மக்களையும் குழப்பும் வேலையை ஏன் செய்ய வேண்டும்?

இந்த லட்சணத்தில் உங்களுக்கு ஆணவமும் பெருமையடிப்பதும் தேவைதானா? அரபு இலக்கணத்தை நன்கு கற்ற்றிந்தவர் போல் காட்டிக்கொள்வது அவசியம் தானா?

திறமையுள்ளவன் பெருமையடிப்பதே பாவம்? அது கொஞ்சமும் இல்லாதவன் பெருமையடிப்பது அதை விட பாவம்.

ஆய்வு என்ற பெயரில் குழப்பும் உங்களைப் போன்றவர்களை விட தனக்குத் தெரியாத விசயத்தில் இறங்க வேண்டாம் என்று கருதி சற்று விலகி இருப்பவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

மருத்துவத்தை முறையாக கற்காமல் மருத்துவம் என்ற பெயரில் தவறான மருந்தை கொடுத்து மக்களை அவதிக்குள்ளாக்கும் போலி டாக்டர் யார்? என்பதை மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விசயங்கள் தெளிவுபடுத்துகின்றது.
கட்டிடம் கட்டும் முறைத் தெரியாமல் கட்டிடம் எழுப்பி மக்களின் உயிரோடு விளையாடும் போலி இன்ஞினியர் யார்? என்பதை இந்த விசயங்கள் அம்பலப்படுத்துகின்றது.

நீங்கள் இறுதியாக எனக்கு எழுதியுள்ள மறுப்பில் மூன்று முக்கியமான வாதங்களை வைத்துள்ளீர்கள். அதில் இரண்டு புதியதாகும்.

1. கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள் என்று ஹதீஸில் இல்லை.
2. நபி (ஸல்) அவர்கள் ஓதியவற்றிலிருந்து என்று மொழி பெயர்ப்பது தவறு.
3. நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓதியதற்கு காலவரையறை வரவில்லை.

உங்களுடைய இந்த வாதங்கள் அதிபயங்கரமான உளறல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. நீங்கள் எனக்கு கடைசியாக மறுப்பெழுதிய கட்டுரையில் இந்த உளறலை மிகப்பெரிய ஆயுதமாக கருதி நான் உங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் இதையே பதிலாகக் கூறியுள்ளீர்கள்.

இன்ஷா அல்லாஹ்  ரமளான் மாதம் அன்றாடம் பயான் செய்வதற்கான தயாரிப்பு பணிகள் உள்ளதால் ரமலான் முடிந்த பிறகு உங்களுடைய இந்த வாதங்கள்  எவ்வளவு அபத்தமானது என்பதைத் தெளிவுபடுத்துவேன். அப்போது உங்களுடைய அரபுப் புலமை இன்னும் நன்றாக வெளிச்சத்திற்கு வரும்.

உங்களுடைய கட்டுரையின் ஆரம்பத்தில் எஸ் எல் டி ஜே இயக்கத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்யும் திறமையற்றவர்கள் என்று கூறி பெருமையடித்த காரணத்தால்  உங்களுடைய உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காக இது எழுதப்பட்டுள்ளது.

ஒரே ஒர சட்ட விசயத்தில் ஒரே ஒர ஹதீஸைக் குறித்து பேசும் போது உங்களிடத்தில் எத்தனை முரண்பாடுகள்? பலமான பல ஹதீஸ்கள் திடீரென எப்படி பலவீனமாகின்றது? மறுபடியும் எப்படி பலமாகின்றது? முன்பு நீங்கள் கூறிய கருத்திற்கு பின்பு நீங்களே மறுப்புக் கொடுப்பது உங்களுக்கு நன்றாகத் தெரிகின்றதா?

இவ்வளவு பலவீனங்களை வைத்துக்கொண்டு அடுத்தவரை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டாம். அவ்வாறு இறங்கினால் மேலும் பலவீனப்படுவீர்கள் என உங்களுக்கு அன்பாய் நற்போதனை செய்கிறேன்.

ரமளானுக்குப் பிறகு எனது முழுமையான மறுப்பு வரும் வரை இடைப்பட்ட நேரத்தில் எதையும் உளறிக்கொட்டாமல் சற்று பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger