சந்திரிகா குமாரதுங்கவுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் ஆர்வமோ எண்ணமோ இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அவர், தனது முடிவை மாற்றிக் கொண்டால் கூட, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமான அரசியல் நடவடிக்கையிலேயே ஈடுபடுவார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து சந்திரிகா குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சிலவற்றில் பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சந்திரிகா எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சந்திரிகா குமாரதுங்க, இன்னும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக – அதன் காப்பாளராக இருக்கிறார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சந்திரிகா, அதன் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.
அவர் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஹெக்டர் கோப்பேகடுவ, இலங்கரத்ன, ரத்ன தேசப்பிரிய சேனநாயக்க, தர்மசிறி சேனநாயக்க, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, டி.எம். ஜெயரட்ண போன்ற தலைவர்கள் போராடிக் கொண்டிருந்த போது, தற்போது கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் கட்சியை அழிப்பதற்கு ஜே.ஆருடன் இணைந்து சதி செய்ததாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment