எகிப்தில் அதிபர் முகமது மோர்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அதை தொடர்ந்து அவரை ராணுவம் பதவி நீக்கம் செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அட்லி மன்சூரை இடைக்கால அதிபராக நியமித்தது. இதற்கு மோர்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோர்சியை பதவி நீக்கம் செய்தது செல்லாது எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட நகரங்களில் கலவரம் மூண்டுள்ளது.
ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் மோதல் சம்பவங்களில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இடைக்கால பிரதமராக முகமது எல்பராடி நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து நேற்று இரவு எல்பராடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு இடைக்கால அதிபர் அட்லி மன்சூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவர் ஐ.நா. சபையின் முன்னாள் அணு சக்தி கண்காணிப்பு குழுவின் இயக்குனராக பதவி வகித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அதிபராக இருந்த முபாரக், மற்றும் மோர்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
இவரது நியமனத்துக்கும் மோர்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துள்ள ராணுவ ஆட்சியாளர்களின் எந்தவிதமான நியமனத்தையும் ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் நேற்று கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். உணவு பொருட்களை வாங்க மார்க்கெட்டுக்கு சென்ற அவரை போராட்டக் கும்பல் சுட்டு கொன்றது. தலைநகர் கெய்ரோவிலும் போராட்டம் வலுவடைந்துள்ளது.
Post a Comment