இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பினோத் மிஸ்த்ரி என்பவரை பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.
இதேபோல் அவர் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தாஸ்ரத் யாதவ் என்பவரும் பிடிபட்டார்.
இருவரும் கயா அருகில் உள்ள பாரசாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று இரவு விடுவித்தது.
இதேபோல் பாட்னா பொலிசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணக்குப் பிறகு நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சம்பவம் நடந்த அன்று, கோவில் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து சுமார் 2 மணி நேரம் தங்கியிருந்ததால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்கும் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக கயாவில் இருந்து வெளியே சென்ற மற்றும் அங்கு வந்த கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதால், விரைவில் சிலர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment