பாராளுமன்றத் தெரிவுக்குழு 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்வரை வட மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது. அதுவரையில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று 24 கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே, இந்தியாவுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதிக்கு சிங்கள பெளத்தர்களின் ஆதரவு என்றும் இருக்குமென்றும் அவ்வமைப்புகள் அறிவித்தன.
கொழும்பு செத்சிறிபாயாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய குணதாச அமரசேகர,
வட மாகாணசபை தேர்தலை நடத்திய பின்னர் 13ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்ற பொறியில் அரசாங்கம் சிக்கிவிடக்கூடாது.
எனவே, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடி 13இல் திருத்தங்களை மேற்கொள்ளும் வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தாது அதனை ஒத்திவைக்க வேண்டும்.
அதுவும் முடியாவிட்டால் பொலிஸ், காணி அதிகாரங்களை பறித்துவிட்டே தேர்தலை நடத்த வேண்டும்.
இதனைச் செய்யாது தேர்தலை நடத்தினால் ஆயுதத்தால் பெற்றுக்கொள்ள முடியாத தனித் தமிழீழத்தை அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக்கொள்ளும் நிலைமை உருவாகும்.
எனவே, நாட்டைப் பிரிக்கும் ஆபத்தை தேர்தலை நடத்தி தேடிக் கொள்வதா? அல்லது காணி பொலிஸ் அதிகாரங்களை பறித்த நாட்டைப் பாதுகாப்பதா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
தெரிவுக்குழு.
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக காணி,பொலிஸ் அதிகாரங்ஙகள் பறிக்கப்படுமானால் அது அரச தரப்பு தனிப்பட்ட குழுவினால் பறிக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். எனவே, அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி இவ் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்.
அதேவேளை, திருத்தங்களை மேற்கொள்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
மெதகம தம்மானந்த தேரர்.
அரசாங்கத்திலுள்ள இடதுசாரிகளுக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் டொலர் காகங்களின் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாது யுத்தத்தை முடித்தது போன்று ஜனாதிபதி மாகாணசபை முறைமையை ஒழிக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இங்கு உரையாற்றிய மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
சோபித்த தேரர்
மாகாண சபைகள் இணைந்து தனி ராஜ்ஜியத்தை அமைக்கும் ஆபத்து இருப்பதால் உடனடியாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பின்னரே வட மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இங்கு பலாங்கொடை சோபித்த தேரர் தெரிவித்தார்.
பெங்கமுவே நாயக்க தேரர்.
சம்பந்தன் இன்றும் தனித் தமிழீழம் உருவாக வேண்டுமென்ற வட்டுக்கோட்டை பிரகடனத்திலிருந்து வெளியேறவில்லை. எனவே, வடமேல் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டால் நாடு பிரியும்.
இங்கிலாந்தில் ஈழ ஆதரவுப் பேரணியில் கலந்து கொண்டவர்தான் வாசுதேவ நாணயக்கார.
எனவே, அவரை அரசியலிருந்து ஜனாதிபதி வெளியேற்ற வேண்டும். இதனால் அரசுக்கு நஷ்ட மேற்படப் போவதில்லை என்று பெங்கமுவ நாயக்க தேரர் சுட்டிக் காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் இந்திரானந்த தர்மரத்ன தேரர்; யுத்தத்தால் பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தை காந்திய வாதத்தால் அஹிம்சையால் பெற்றுக் கொள்வோம் என சம்பந்தன் கூறியுள்ளார்.
ஆனால், இது மகாத்மா காந்தியவாதமாக அல்லது ராஜீவ் காந்தீயவாதமா என்பது புரியவில்லை.
எனவே, ஆயுதத்தால், பிரபாகரனால் பெற முடியாத தனித் தமீழழத்தை அரசியலமைப்பு ரீதியாக பெறுவதற்கு சம்பந்தன் முயற்சிக்கின்றார்.
வட மாகாண சபை தேர்தலை நடத்தினால் நிச்சயம் சம்பந்தனின் அரசியலமைப்பு ரீதியான தனித் தமிழீழத்திற்கு அது வழிவகுக்கும் என்றார்.
டாக்டர் மெககொட அபயதிஸ்ஸ தேரர்
இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே இந்தியாவுக்கு பயந்து வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என டாக்டர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
Post a Comment