2001ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலகட்டத்தில் உலகம் முன்னெப்போதுமில்லாத தீவிர காலநிலை மாறுதல்களை பதிவுசெய்துள்ளது உலக வானிலை ஆய்வுக் கழகம் கூறுகிறது.
முந்தைய தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பமும் குளிரும் பல்வேறு நாடுகளில் பதிவாகியிருப்பதாக அக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
குறிப்பாக 2003ல் ஐரோப்பாவிலும் 2010ல் ரஷ்யாவிலும் வீசிய வெப்ப அலைகளில் மிக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த பத்தாண்டு காலத்தில் கொளுத்துக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை முந்தைய தசாப்தங்களைவிட அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
1901ஆம் ஆண்டிலிருந்து பார்க்க இரண்டாவதாக மிக அதிக மழை பெய்த பத்தாண்டு காலம் என்றாலும் அது 2001 முதல் 2010 வரையிலான காலகட்டம்தான்.
அதிலும் 2010ஆம் வருடம் இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிக அதிக மழை பெய்த ஆண்டாக உள்ளது.
ஆனாலும் இந்த பத்து ஆண்டுகளில் மழையிலும் வெள்ளத்திலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முதலிடம் பெறவில்லை.
காலநிலை எச்சரிக்கை வழிமுறையும், இயற்கை சீற்றங்களுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் முன்னேற்றம் கண்டுள்ளன என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலகின் காலநிலை தொடர்ந்து மாறிவருவதால் வானிலை தொடர்பாக மக்களுக்கு வழங்கப்படும் தகவல்களில் தொடர்ந்து முன்னேற்றங்கள் வர வேண்டும் என உலக வானிலை ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
உலக அளவிலும் பிராந்திய அளவிலும் பருவநிலை எவ்விதமாக மாறிவருகிறது என்பதையும், பாகிஸ்தான் வெள்ளம், அமெரிக்க சூறாவளி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வறட்சி போன்ற காலநிலை சீற்றங்களையும் இந்த அறிக்கை ஆராய்ந்துள்ளது.
புவியின் வடபாதி தென்பாதி என இரண்டிலுமே இந்த பத்தாண்டுகாலம்தான் மிக அதிகமான வெப்பம் நிலவியுள்ளது.
கூடவே வட துருவத்தில் கடல் பனியும் கிரீன்லாந்து பனிப் படலமும், தென் துருவத்தில் அண்டார்டிக் பனிப் படலமும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாக குறைந்திருப்பது இந்த தசாப்தத்தில்தான்.
அதன் விளைவாக உலக அளவில் சராசரியாக ஆண்டுக்கு 3 மில்லி மீட்டர்கள் என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அளவுகளோடு ஒப்பிடுகையில் தற்போது இருமடங்கு வேகத்தில் கடல் மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
Post a Comment